twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லைட்மேன்கள் ஸ்ட்ரைக்: 65 படங்களின் ஷூட்டிங் ரத்து!!

    By Staff
    |

    Vijayan
    சம்பளத்தை உயர்த்தக் கோரி லைட்மேன்கள் யூனியன் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் தற்போது துவங்கப்பட்டுள்ள 65 தமிழ்ப் படங்களின் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஒருமாத காலமாக பேச்சுவார்த்தையிலிருந்த இப்பிரச்சினை இன்று போராட்டக் கட்டத்தை எட்டியுள்ளது.

    தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி லைட்மேன்கள் சங்கம், தங்களது சம்பளத்தை உயர்த்தித் தருமாறு தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த மாதம் கோரிக்கை வைத்தது.

    தற்போது லைட்மேன் ஒருவருக்கு ஒரு நாளைக்கு சென்னையில் ஷூட்டிங் நடந்தால் ரூ 350-ம் வெளியூரில் ஷூட்டிங் நடந்தால் ரூ.370-ம் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதை முறையே ரூ.500 மற்றும் ரூ.550 ஆக உயர்த்தித் தர லைட்மேன்கள் கோரிக்கை வைத்தனர். இனி இந்த சம்பளம் தரும் தயாரிப்பாளர்களின் படங்களில் மட்டுமே பணியாற்றப் போவதாகவும் கூறினர்.

    ஆனால் பேச்சுவார்த்தை மூலம் இதற்குத் தீர்வு காண முயன்றுவந்தார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன்.

    படப்பிடிப்பு ரத்து!:

    இதற்கிடையே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு (பெப்சி) இணைந்து நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.

    இதில், லைட்மேன்கள் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்க முடியாது எனவும் லைட்மேன்கள் சங்கத்துக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து சென்னையில் நடந்த 30 படங்களின் படப்பிடிப்பும், வெளியூர்களில் நடந்து வந்த 35 படங்களின் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பெப்சி விஜயனுக்கு கண்டனம்!:

    இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி லைட்மேன்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    எங்கள் சங்கம் ஊதிய உயர்வு வேண்டும் என்று கேட்டு கடந்த 28ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பியது.

    அதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம், முறையாக கடிதம் அனுப்பாமல் உயர்மட்ட குழு சார்பில் 1ம் தேதி எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், 'சம்பள உயர்வு கோரிக்கை கண்டிக்கத்தக்கது; இக்கடிதம் கண்ட 3 நாட்களில் சம்பள கோரிக்கையை திரும்ப பெறாவிட்டால், லைட்மேன் சங்கத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என்று அதில் எச்சரிக்கை செய்திருந்தனர்.

    சம்பள உயர்வு கேட்ட டெக்னீஷியன் யூனியன் பிரச்னையும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளால் இன்னும் தீர்க்கப்படாமல் காலம் கடத்தப்படுகிறது. எனவே, அந்த சங்கமும் எங்களுடன் இணைந்து இப்பிரச்னையில் போராட முடிவு செய்திருக்கிறது.

    இரு சங்கங்களின் சார்பிலும் அமைக்கப்பட்டுள்ள கூட்டு நடவடிக்கை குழுவில், டெக்னீஷியன் யூனியன் தலைவர் சங்கர், செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் தேவன், லைட்மேன் சங்கத்தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ராமன், பொருளாளர் ராஜாராம் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இக் குழுவிற்கு முன்னாள் பெப்சி தலைவர் மோகன் காந்திராமன் தலைவராக உள்ளார்.

    சமரச பேச்சு வார்த்தைக்கு எப்போதும் தயாராக இருக்கிறோம். சமரசம் ஆகும் வரை, நாங்கள் கேட்கும் சம்பளத்தை கொடுக்கும் படங்களில் மட்டுமே பணியாற்ற தயாராக இருக்கிறோம். எங்கள் சங்கங்களை அலட்சியப்படுத்தியிருக்கும் பெப்சி விஜயன் பணியாற்றும் எந்த படத்துக்கும் நாங்கள் ஒத்துழைப்பு தர மாட்டோம் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X