»   »  பெர்லின் பட விழாவில் 'பருத்தி வீரன்'

பெர்லின் பட விழாவில் 'பருத்தி வீரன்'

Subscribe to Oneindia Tamil
Karthi with Priyamani
பெர்லின் நகரில் நடைபெறும் 58வது சர்வதேச பட விழாவில் இயக்குநர் அமீரின் பருத்தி வீரன் திரையிடப்படுகிறது. ஐந்து நாட்களுக்கு இப்படம் திரையிடப்படுகிறது.

பெர்லின் பட விழாவில் மொத்தம் 135-க்கும் மேற்பட்ட படங்கள் கலந்து கொள்கின்றன. இந்தியாவிலிருந்து பருத்தி வீரன் கலந்து கொள்கிறது. இப்படம் நேரடிப் போட்டிப் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

அதேசமயம், ஷாருக் கானின் ஓம் சாந்தி ஓம் சிறப்புத் திரையிடுதல் பிரிவின் கீழ் இடம் பெற்றுள்ளது.

10 நாட்கள் நடைபெறும் விழாவில் ஐந்து நாட்களுக்கு பருத்தி வீரன் திரையிடப்படவுள்ளது. இதில் 2 நாட்கள் ஜெர்மனி மொழி சப் டைட்டிலுடன் படம் திரையிடப்படுகிறது. 3 நாட்கள் ஆங்கில சப் டைட்டிலுடன் திரையிடப்படும்.

கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த 9-வது ஓஸியான் பட விழாவில் பருத்தி வீரன் கலந்து கொண்டு சிறந்த இந்திய படமாகவும், பிரியாமணி சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

பெர்லின் பட விழாவில் பங்கேற்பதற்காக இயக்குநர் அமீர் பெர்லின் சென்றுள்ளார்.

அமீரின் கண்ணபிரானில் இளையராஜா!:

இதற்கிடையே பருத்தி வீரனை விட ஆயிரம் மடங்கு பவர்புல்லான கதை என்று இயக்குநர் அமீரே வர்ணித்த கண்ணபிரானின் திரைக்கதை முழுமையாகத் தயாராகிவிட்டது. இப்படத்தின் மூலம் முதல் முறையாக இளையராஜாவுடன் இணைகிறார் அமீர்.

தற்போது நாயகனாக யோகி படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் ஜூலை மாதத்தில் இப்படத்தைத் துவங்கவிருக்கிறார் அமீர்.

கண்ணபிரான் படத்தின் நாயகனாக ஜெயம் ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக வெளியில் செய்திகள் பரவினாலும், இதுவரை அமீர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை. அமீரே இதில் நாயகனாக நடிக்கக் கூடும் என்றும் பேச்சு நிலவுகிறது.

இதுகுறித்துக் கேட்டால், இல்லையில்லை, இதில் நான் நடிக்கவில்லை. நாயகன் யார் என்பதை சீக்கிரமே சொல்லி விடுகிறேன் பொறுத்திருங்கள்... என்கிறார் அமீர்.

இதுவரை அமீரின் படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜாதான் தொடர்ந்து இசையமைத்து வந்திருக்கிறார். ஆனால் கண்ணபிரானுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று அமீர் விரும்புகிறாராம். இதற்கு இசைஞானியும் ஒப்புதல் தெரிவித்துள்ளாராம்.

இருவரும் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, தான் முதன்முதலாக கதாநாயகனாக அவதாரமெடுக்கும் யோகி படத்தை சீக்கிரமே முடித்துவிடுமாறு அப்படத்தின் இயக்குநர் சுப்ரமணிய சிவாவுக்கு உத்தரவிட்டிருக்கிறாராம் அமீர்.

சென்னை சேரிவாழ் மக்களின் வாழ்க்கையை சொல்லும் இப்படத்தை ஜூலை மாதம் திரையிட ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. இதனால் ஒரே ஷெட்யூலில் மொத்த படத்தையும் முடித்துவிடும் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது யோகி படக் குழு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil