For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் டாப் -5

  By Staff
  |

  Santhosh Subramanyam movie still
  கோலிவுட்டில் சமீபத்தில் ரிலீசான படங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது ஜெயம் ரவி-ஜெனிலியா நடிப்பில் உருவான சந்தோஷ் சுப்ரமணியம். கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசான விஜயகாந்தின் அரசாங்கம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. பிரமாதமான ஓபனிங்குடன் பிரமிக்க வைக்கும் வசூலுடன் களமிறங்கிய விஜய்யின் குருவி, முதல் வார இறுதியில் சற்றே கீழிறங்கத் தொடங்கியுள்ளது. ஆனாலும் பி மற்றும் சி சென்டர்களில் வசூல் இன்னமும் திருப்திகரமாக இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  முதல் 5 இடங்களில் உள்ள படங்களின் விவரம்:

  சந்தோஷ் சுப்ரமணியம்- தெலுங்கில் கலக்கிய பொம்மரிலு படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தை ராஜா இயக்கியுள்ளார். ஜெயம் ரவி-ஜெனிலியா நடித்த இந்தப் படம் எல்லா சென்டர்களிலும் சக்கை போடு போடுகிறது. படம் ரிலீசாகி 4 வாரங்களாகியும் கூட்டம் குறைந்தபாடில்லை. இந்தாண்டின் 'கோடை இடி' (அட... பிளாக் பஸ்டருங்க!) இந்தப் படம் என்றால் மிகையல்ல.

  அரசாங்கம்- மாதேஷ் இயக்கத்தில் விஜயகாந்தின் அதிரடிப் படம். ஆனால் இது முழுக்க முழுக்க இயக்குனரின் படம் என்று கூறுமளவுக்கு படம் முழுக்க விஜயகாந்த் அடக்கி வாசித்திருப்பதே பெரிய ஆறுதல்தான். அந்த வகையில் கேப்டனுக்கே கேப்டனாக இருந்திருக்கிறார் இயக்குனர் மாதேஷ். விஜயகாந்தின் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது அரசாங்கம். தியேட்டர்களிலும் கூட்டத்துக்குக் குறைவில்லை. ஆனால், இந்தப் படத்தை இன்னும் கூட செம்மையாகச் சொல்லியிருந்தால், இன்னொரு 'இந்தியனாக' ஜொலித்திருக்கும். இதே வசூல் அடுத்த வாரமும் தொடருமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  குருவி- விஜயின் நடிப்பில் தரணி இயக்கிய படம். பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியான குருவி ஒரு வாரத்துக்குத்தான் தியேட்டர்களில் பெரும் கூட்டத்தைத் தக்க வைத்தது. வார விடுமுறையான சனி - ஞாயிறுகளில் படம் றெக்கை கட்டி பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 30 சதவீத கூட்டம் குறைந்துள்ளதாக கோடம்பாக்க பண்டிதர்கள் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் கிராமப்புற திரையரங்குகளில் நல்ல கூட்டத்தைப் பார்க்க முடிகிறது. இந்த வசூல் இன்னும் ஒரு வாரம் வரை தொடர்ந்தால் போட்ட பணம் வந்துவிடுமாம் விநியோகஸ்தர்களுக்கு.

  யாரடி நீ மோகினி- மற்றுமொரு ரீமேக் படம். இயக்குனர் செல்வராகவனின் கதை-திரைக்கதை, வசனம் படத்துக்கு மிகப்பெரிய பலம். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஏற்ற விஷயங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்களின் ஆதரவும் தொடருகிறது. பாக்ஸ் ஆபீஸில் தன்னை ஒரு முன்னணி நடிகராக நிலைநிறுத்திக் கொள்ள தனுஷுக்கு பெரிதும் உதவியுள்ள படம் இது.

  அறை எண் 305ல் கடவுள்- இயக்குனர் சிம்பு தேவன் தேர்ந்தெடுத்த களம் புதிது, கதையும் புதிதுதான். ஆனால் ரசிகர்களைப் பெரிதாக கவரவில்லை. காரணம் சிரிப்பு நடிகர்களான சந்தானம், கஞ்சா கருப்பு இருவருமே சீரியஸாக வசனம் பேசிக் கொண்டு திரிவதுதான். சிம்புதேவனின் இடது சாரி சிந்தனைகளைச் சொல்லும் வசனங்களும், பிரகாஷ் ராஜின் அசத்தல் நடிப்பும் படத்துக்குப் பெரிய பலம்.


  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X