For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தசாவதாரம்-பட விமர்சனம்

  By Staff
  |

  Kamal with Asin
  படத்துக்குப் படம் வித்தியாசமான முயற்சிகளால் ரசிகர்களை அசர வைக்கும் கமல்ஹாசன், இம்முறை படம் பார்ப்பவர்களை பிரம்மிப்பால் கட்டிப் போட்டுள்ளார்,

  உடலை வருத்திக் கொண்டு நடிப்பது, வித்தியாசமான மேக்-அப்புக்காக மாதக்கணக்கில் உழைப்பது கமலைப் பொறுத்தவரை படு சாதாரண விஷயம். அந்த வரிசையில் மீண்டும் ஒரு வித்தியாசமான கதையுடன், டெக்னிக்கல் சமாச்சாரங்களின் துணையுடன் 'விஷூவல் விளையாட்டு' காட்டி அதிர வைத்துள்ளார் கமல்.

  இரு வேறு நூற்றாண்டுகளில் வியாபிக்கும் கதைக் களம். அதற்கான வித்தியாச வேடங்கள், மிகப் பழமையான செட்கள் முதல் ஹை-டெக் லேப்கள் என கால ஓட்டத்துடன் ஓட்டி கதையை நகர்த்திச் செல்ல ரொம்பவே மெனக்கட்டிருக்கிறார்கள்.

  உயிரி போர் (Bio War) என்ற வித்தியாசமான களத்தைத் தேர்வு செய்து அதை வைத்து தனது 10 அவதாரங்களையும் எடுத்துள்ளார் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியுள்ள கமல்.

  அமெரிக்காவில் வசிக்கும் பிரபல இந்திய விஞ்ஞானி கோவிந்த் (கமல் நெ.1) அரும்பாடுபட்டு ஒரு உயிர்-வேதியியல் வைரஸ் ஆயுதத்தைக் கண்டுபிடிக்கிறார். அதை உண்ணும் ஆய்வக குரங்கு செத்துப் போக அதன் உடல் சிதைவுகள் பூமியில் பரவினால் உயிரினங்கள் அழிந்துபோகும் என்பதால், உடனே அதை ஆய்வகத்தோடு அழித்து விடுகிறார்கள்.

  இனி இம்மாதிரி ஆயுத முயற்சியே கூடாது என முடிவெடுக்கிறார் கோவிந்த். ஆனால் அதை ஏற்க மறுக்கிறார்கள் அமெரிக்க அரசும், தலைமை விஞ்ஞானியும். இதனால், தான் உருவாக்கிய ஆயுதத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடுகிறார் கோவிந்த்.

  அவரை விடாமல் துரத்துகிறார் வெள்ளைக்கார வில்லன் (கமல் நெ. 2).

  ஒரு கட்டத்தில் அந்த பயங்கர வைரஸ் கொண்ட சிறிய பெட்டி தவறுதலாக இந்தியாவிலிருக்கும் 95 வயது பாட்டியி்ன் (கமல் நெ.3) கையில் சிக்கிவிடுகிறது.

  அதைத் தேடி விஞ்ஞானியும் வில்லனும் இந்தியா வர, பத்திரமாக இருக்கட்டும் என அந்த ஆயுதத்தை ஸ்ரீரங்கநாதரின் உற்சவ மூர்த்தி சிலைக்குள் பாட்டி போட்டுவிட, அந்த சிலையைத் தூக்கிக் கொண்டு அலைகிறார்கள் விஞ்ஞானியும் வில்லனும்.

  இடையில் கதையுடன் மிக உயிரோட்டமாக வந்து போகிறார்கள் மிக உயரமான முஸ்லீம் கமல் (நெ.4), ஜப்பானிய கமல் (நெ.5), அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கமல் (நெ.6), பஞ்சாபி பாடகர் கமல் (நெ.7) மற்றும் தூத்துக்குடி அண்ணாச்சி கமல் (நெ.8).

  படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே, அடுத்து பிரேமில் கமல் என்ன வேடத்தில் வரப் போகிறாரோ என்ற உற்காசம் கலந்த பரபரப்பு படம் பார்ப்பவர்களை தொற்றிக் கொண்டு விடுகிறது.

  வைரஸ் பெட்டியைத் தேடி தமிழகம் வந்த விஞ்ஞானி கமலை தீவிரவாதி என்று முத்திரை குத்தி விடுகிறார் தமிழக காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரி பலராம் நாயுடு (இது கமல் நெ.9).

  காவல் துறையிடமிருந்தும் தப்பிக்க வேண்டும், உயிர் வேதி ஆயுத அழிவிலிருந்தும் மனித குலத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயம் கோவிந்துக்கு.

  இப்படி கதையில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை.

  படத்திற்கு நிறைய பலங்கள். முதல் பலம் கமல்ஹாசன்... இதை 10 முறை சொல்லலாம். எல்லா வேடங்களிலும் தன்னை மீ்ண்டும் ஒரு உச்ச நாயகன் என்பதை நிரூபித்துவிட்டார் கமல்.

  பத்து கேரக்டர்களுக்கும் வித்தியாசம் காட்ட, நல்ல-நிறைய வித்தியாசம் காட்ட கமல் எடுத்துள்ள சிரத்தையை, பட்டுள்ள கஷ்டத்தை அவ்வளவு எளிதில் யாராலும் விளக்கிவிட முடியாது.

  ரங்கராஜ நம்பி (இது கமல் நெ. 10) கேரக்டர் மிக அபாரம். கட்டுமஸ்தான் வைணவராக கமல்ஹாசனின் நடையும், உடையும், அந்தப் பார்வையும்... கமலைத் தவிர வேறு யாரும் இப்படி அந்த கேரக்டராக வாழ்ந்து காட்ட முடியாது.

  படத்தை கமல்ஹாசனே வியாபித்து விட்டதால் ஹீரோயின் ஆசினுக்கு பெரிய அளவில் வேலை இல்லை. அவருக்கும் இரு வேடங்கள். பிளாஷ்பேக் காட்சிக்கு ஒரு ஆசின். ரெகுலர் நாயகியாக இன்னொரு ஆசின். தனது சிறிய வாய்ப்பையும் நன்றாக பயன்படுத்தி மனதை கவர்கிறார்.

  மல்லிகா ஷெகாவத்திற்கு வில்லனுடன் சேர்ந்து கிளாமரில் அதிரூபம் காட்டும் வேலை மட்டுமே.

  படத்தின் இன்னொரு பலம் கேமரா. இரட்டை வேட படங்களுக்கே கேமராமேன்களுக்கு தடுமாற்றம் வந்துவிடும். ஆனால் பத்து வேடங்களில் கமலை சிற்பம் மாதிரி வடித்திருக்கிறார் கேமராமேன் ரவிவர்மன்.

  கிராபிக்ஸ் காட்சிகளிலும் திணறடித்திருக்கிறார்கள். குறிப்பாக சுனாமி காட்சிகள், உற்சவர் சிலையோடு கடலில் விழும் கமல்...

  இசையில் ஹிமேஷ் ரேஷ்மய்யா பின்னியிருக்கிறார். வட மாநிலத்தவராக இருந்தாலும் தமிழை உள்வாங்கி உழைத்திருக்கிறார்.

  அடுத்து, நெப்போலியனைச் சொல்லியாக வேண்டும். பத்து நிமிடங்களே வந்தாலும், வசனமே பேசாமல் வெறும் பார்வைகளால் அசர வைத்திருக்கிறார். அவரை இன்னும் கூட பயன்படுத்தியிருக்கலாம்.

  படத்தின் முதல் பாதியின் அரைமணி நேரமும், கிளைமாக்ஸ் காட்சி உள்ளிட்ட கடைசி முக்கால்மணி நேரமும் தியேட்டர்களில் படு நிசப்தம். ரசிகர்களை அப்படியே கதையோடு ஒன்று வைத்து விடுகிறார்கள்.

  தசாவதாரம்... சினிமாவுக்கே இன்னொரு அவதாரம்..!

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X