twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'விஜய் வரலைன்னா மொள்ளமாறிகளும் முடிச்சவிக்கிகளும் அரசியலுக்கு வந்துடுவாங்க!'

    By Shankar
    |

    அடேங்கப்பா.... எதையும் பிளான் பண்ணி செய்யனும் என்ற வடிவேலுவின் 'பொன் மொழி'க்கு பொழிப்புரை என்றால் அது எஸ் ஏ சந்திரசேகரனின் சட்டப்படி குற்றம் ஆடியோ வெளியீட்டு விழாவைத்தான் சொல்ல வேண்டும்.

    திமுகவைத் தாக்கவேண்டும், அதிமுகவுக்கு ஆதரவாகவும் இருக்க வேண்டும், அதே நேரம் விஜய்யின் அரசியலுக்கு 'பக்கா ப்ளாட்பார்மாகவும்' நிகழ்ச்சி அமைய வேண்டும்.... சந்திரசேகரனின் இத்தனை நோக்கங்களும் பக்காவாக நிறைவேறியது இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில்!

    கமலா திரையரங்கில் இன்று நடந்த சட்டப்படி குற்றம் இசை வெளியீட்டு விழாவில் துவக்கத்திலிருந்தே அரசியல் வாடை தூக்கலாக இருந்தது. மேடை கிடைத்தால் போதும், எதையும் பேசத் தயாராக இருக்கும் சத்யராஜ், சீமான், ஆர்கே செல்வமணி என கிட்டத்தட்ட 30 பேர் இதில் பங்கேற்றனர். எல்லோரும் பேசினார்கள். காலை 9.30க்குத் துவங்கிய விழா, பகல் 12 மணி தாண்டியும் நடந்தது.

    எஸ்ஏ சியின் குருவும், இப்போதைய ஆட்சியின் தீவிர ஆதரவாளருமான விசி குகநாதன் விழாவில் பங்கேற்றார். இந்தப் படம் அரசாங்கத்துக்கு எதிரானதல்ல என்றெல்லாம் அவர் பாலிஷ் போட, அடுத்துப் பேச வந்த அனைவரும்-எஸ்ஏசி- உள்பட, படம் அரசுக்கும் இப்போதைய ஆட்சிக்கும் எதிரானதே என்றனர் தெள்ளத் தெளிவாக. இன்னொரு திமுக ஆதரவாளரான ராம நாராயணன் மவுனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்!

    கருணாநிதி மடியில் உட்கார்ந்தேன், வசனம் பேசி நடித்தேன் என்று பெருமை பேசும் சத்யராஜ், இந்த மேடையில் வாய்ப்பு கொடுத்த சந்திரசேகரனுக்கு விசுவாசம் காட்டினார். சினிமா - அரசியல் இரண்டிலும் எம்ஜிஆர் மாதிரி வருவாராக்கும் விஜய் என்று கூச்சமே இல்லாமல் சொல்லி கைதட்டல் வாங்கிக் கொண்டார் அவர்.

    '6 பேர் பலியானால் ஆயிரம் பேர் புலியாவோம்' என்று வேறு பஞ்ச் அடித்தார் கோயமுத்தூரைக் கூட தாண்டிப் போக முடியாத இந்த சினிமா புலி!

    இந்த விழாவில் எஸ் ஏ சந்திரசேகரனின் நண்பர் என்ற முறையில் கலந்து கொண்ட கமலா தியேட்டர் உரிமையாளர் சிதம்பரம், "விஜய் நல்ல நடிகர். அவர் ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக வருவார். எனவே அவருக்கு அரசியல் வேண்டாம். என் நண்பர் சிவாஜி கணேசனுக்கு நேர்ந்தது அவருக்கும் நேரக் கூடாது" என்று ஏகத்துக்கும் உண்மையைப் பேசிவிட, அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் எஸ்ஏசி.

    அடுத்துப் பேசிய சீமான் சீறித் தள்ளினார். "என் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தே தீரணும். அவர் ஒதுங்கிப் போகக் கூடாது. விஜய் மாதிரி நல்லவங்க ஒதுங்கிப் போவது, கெட்டவர்களுக்கு வசதியா போகுது. விஜய் வரலேன்னா மொள்ளமாறிகளும் முடிச்சவிக்கிகளும் வந்துடுவாங்க. இன்னிக்கு ஒரு குடும்பத்தின் பிடியில் நாடும் சினிமாவும் சிக்கி சீரழிஞ்சிடுச்சி. இதை மாத்தற சக்தி தம்பி விஜய்க்கு இருக்கு" என்று முழங்கினார் கழுத்து நரம்பு புடைக்க.

    விழாவில் பங்கேற்ற கே டி குஞ்சுமோன், 'சட்டப்படி குற்றம் படத்தை பார்த்தா இந்த அரசாங்கமே எஸ் ஏ சந்திரசேகர் காலில் விழுந்து கதறும். நாங்க செஞ்சதெல்லாம் தப்புன்னு மன்னிப்புக் கேட்கும்' என்றெல்லாம் தமாஷ் பண்ணிக் கொண்டிருந்ததை, உளவுத் துறையினர் கவனமாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர்!!

    English summary
    The audio function of Sattappadi Kutram turned out to be an occasion for those unhappy with the ruling front to express their displeasure including actor Sathyaraj, director Seema and many other. And with elections around the corner those with political ambitions made hard hitting speeches and took pot shots at the ruling party.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X