twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கருணாநிதியை நெருங்கவும் மாட்டேன், விலகி நிற்கவும் மாட்டேன்! - ரஜினி

    By Staff
    |

    Rajini with Karunanidhi
    சென்னை: அரசன் என்பவன் நெருப்பு மாதிரி;​ நெருப்பிடம் நெருங்கவும் கூடாது;​ விலகி இருக்கவும் கூடாது என சொல்லியிருக்கிறார்கள்.​ அதனால் நான் முதல்வரிடம் நெருங்கியும் இருக்க மாட்டேன்;​ விலகியும் இருக்க மாட்டேன் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

    சங்கத் தமிழ்ப் பேரவை சார்பாக முதல்வருக்கு பிப்ரவரி 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:

    கடந்த வாரம் திரையுலகம் சார்பாக முதல்வருக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவின்போது அமைச்சர்கள் ஜெகத்ரட்சகனும் துரைமுருகனும் அடிக்கடி எதைப் பற்றியோ பேசிக்கொண்டிருந்தார்கள்.​ அதற்கான காரணம் இப்போதுதான் தெரிகிறது.

    திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவை விட சிறப்பான ஒரு பாராட்டு விழாவை நாம் முதல்வருக்கு நடத்த வேண்டும் என நினைத்திருக்கிறார்கள். மாயாபஜார்,​ ஜெகன்மோகனி போன்ற படங்களில் வரும் செட்களை விட பிரமாண்டமான செட் அமைத்து இந்த விழா மேடையைச் சிறப்பித்திருக்கிறார்கள்.

    நான் பெங்களூருக்கு காரில் செல்லும்போது திருவள்ளுவர் சிலையை ஒரு துணியால் மூடி,​​ திறக்காமல் அப்படியே வைத்திருந்ததை அடிக்கடி பார்த்திருக்கிறேன். அந்த நிலையை மாற்றி பல முயற்சிகளுக்குப் பிறகு திருவள்ளுவர் சிலையை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

    அதே சமயம்,​​ கர்நாடகத்தைச் சேர்ந்த சர்வக்ஞருக்கு சென்னையில் சிலை வைக்கவும் முதல்வர் காரணமாக இருந்தார். 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சர்வக்ஞரைப் பற்றிப் படித்தால் அவருடைய எழுத்துகளில் பகுத்தறிவு,​​ ஜாதி மறுப்பு,​​ ஆண்-பெண் எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்கள் இருப்பதை அறியலாம். சில இடங்களில் பெரியார் சொல்வதைப் போலவே இருக்கும்.​ அப்படிப்பட்ட புரட்சிகரமான கருத்துகளைப் பரப்பிய சர்வக்ஞருக்கு சிலை வைத்தவர் முதல்வர்.

    இந்த விழாவைப் பார்க்கும்போது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.​ குதிரைக்கு பயம் தெரியாமல் இருக்க கண்களுக்கு அருகில் துணி கட்டுவார்கள்.​ அதுவும் பயம் அறியாமல் ஓடிக்கொண்டிருக்கும்.

    திரையுலகம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாக்களில் நாங்கள் முதல்வரை -​ அந்தக் குதிரை போல பயம் அறியாமல் 'எங்கள் விழா' என்ற உரிமையுடன் பாராட்டியிருக்கிறோம்.​ ​

    ஆனால்,​​ இவ்வளவு பெரிய மனிதர்கள் இருக்கும் இதுபோன்ற மேடையில் முதல்வரைப் பாராட்டிப் பேசும்போது ஒரு பயம் வருகிறது. ஜெகத்ரட்சகன் பேசும்போது முதல்வர் வேறு மாநிலத்தில் ​(வங்காளம்)​ பிறந்திருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும் என்று குறிப்பிட்டார்.​ கலைஞர் தமிழ்நாட்டில் பிறந்ததுதான் பெருமை.​ இங்கு பிறந்ததால்தான் இன்று மத்திய அரசையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார்.

    சில நாள்களுக்கு முன்பு என் மகள் ​(சௌந்தர்யா)​ நிச்சயதார்த்த பத்திரிகையை முதல்வருக்குத் தர முடிவெடுத்தோம்.

    அப்போது என் குடும்பத்தாரிடம் 'நீங்கள் போய் பத்திரிகை கொடுங்கள்' என்றேன்.​

    'நீங்கள் வரவில்லையா,​​ முதல்வர் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டாரா?' என வீட்டில் கேட்டனர்.​

    'தவறாக நினைப்பவர்கள் தவறாகத்தான் நினைப்பார்கள்.​ கலைஞர் என்னைத் தவறாக நினைக்க மாட்டார்.​ அவருக்கு என்னைப் பற்றித் தெரியும்.​ கல்யாண பத்திரிகை கொடுக்கும்போது நான் வருகிறேன்' என்று சொல்லிவிட்டேன்.​ அதன்படி என் வீட்டினர் அவருக்கு பத்திரிகை தந்தார்கள்.

    இதை ஏன் சொல்கிறேன் என்றால் திருவள்ளுவரும் சர்வக்ஞரும் 'அரசன் என்பவன் நெருப்பு மாதிரி;​ நெருப்பிடம் நெருங்கவும் கூடாது;​ விலகி இருக்கவும் கூடாது' என சொல்லியிருக்கிறார்கள்.​ அதனால் நான் முதல்வரிடம் நெருங்கியும் இருக்க மாட்டேன்;​ விலகியும் இருக்க மாட்டேன்.

    பாராட்டு விழாவால் முதல்வருக்கு சந்தோஷமா?

    இதுபோன்ற பாராட்டு விழாக்கள் முதல்வருக்கு எந்த அளவுக்கு சந்தோஷத்தைத் தரும் எனத் தெரியாது.​ அவரே பாராட்டு விழாக்கள் வேண்டாம் என்று சொன்னாலும் யாரும் விடமாட்டேன் என்கிறார்களே!

    இதுபோன்ற பாராட்டு விழாக்களில் முதல்வர் கலந்துகொள்வதற்கு காரணம்,​​ அதை நடத்துபவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்குதான்.​ அப்படிப்பட்ட முதல்வர் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும்..." என்றார் ரஜினி.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X