»   »  'மாயாஜாலில்' மேலும் 4 தியேட்டர்கள்!

'மாயாஜாலில்' மேலும் 4 தியேட்டர்கள்!

Subscribe to Oneindia Tamil
Vikram
'விர்'ரென வழுக்கிக் கொண்டு வாகனங்கள் பறக்கும் கிழக்குக் கடற்கரைச் சாலையில், 'ஜிவ்'வென அனைவரையும் கவரும், முக்கிய 'டாப்' ஆக திகழும் மாயாஜாலில் மேலும் நான்கு புதிய சொகுசு திரையரங்குகளை நடிகர் விக்ரம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

மாயாஜால் மல்டிப்ளெக்ஸ் வளாகத்தில் ஏற்கெனவே ஆறு சொகுசு திரையரங்குகள், ஸ்நோ பவுலிங், உணவகங்கள், துணிக்கடைகள் என ஒரு மினி நகரமே உள்ளது.

சென்னையின் முதல் மல்டிப்ளெக்ஸ் என்ற பெருமை கொண்ட இந்த வளாகத்தை பெண்டாமீடியா நிறுவனம் உருவாக்கிப் பராமரித்து வருகிறது. இந்த வளாகத்துக்கு அருகிலேயே சரவதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தையும் உருவாக்கியுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இம் மைதானத்தைத் திறந்து வைத்தார்.

மாயாஜாலில் ஏற்கெனவே ஆறு திரையரங்குகள் இருந்தன. தற்போது மேலும் நான்கு புதிய திரையரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் 150 பேர் வசதியாக அமர்ந்து படம் பார்க்கலாம். இப்புதிய திரையரங்குகளை நடிகர் விக்ரம் வெள்ளிக்கிழமையன்று திறந்து வைத்தார். இயக்குநர் சுசி கணேசன் உடன் பங்கேற்றார்.

தற்போது 10 திரையரங்குகள் கொண்ட வளாகமாக மாறியுள்ளது மாயாஜால். இதன் மூலம் ஒரே நாளில் 50 காட்சிகள் வரை இங்கு நடத்த முடியும், 7500 பேர் படம் பார்க்கலாம். ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்க வளாகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது மாயாஜால்.

எதிர்காலத்தில் இன்னும் பல திட்டங்களை வைத்திருக்கிறோம் என்கிறார் மாயாஜால் தலைமை நிர்வாக அதிகாரி அனிதா உதீப்.

இயக்குநர் பாக்யராஜ் மனைவி பூர்ணிமா, மகள் சரண்யா ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.

Please Wait while comments are loading...