»   »  பெர்லின்-அமீருக்கு சிறந்த இயக்குநர் விருது

பெர்லின்-அமீருக்கு சிறந்த இயக்குநர் விருது

Subscribe to Oneindia Tamil
Amir and Karthi in Berlin film fest
பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பருத்திவீரன் இயக்குநர் அமீருக்கு, சர்வதேச அளவிலான சிறந்த இயக்குநருக்கான சிறப்பு விருது கிடைத்துள்ளது.

படவிழாவின் நிறைவு நாளான நேற்று இந்த விருதினை விழா கமிட்டி மற்றும் நீதிபதிகள் குழு அமீருக்கு வழங்கியது.

இதுவரை மூன்று சிறந்த படைப்புகளை தமிழில் தந்துள்ள அமீர், சர்வதேச அளவில் பெறும் இரண்டாவது விருது இது. தனது ராம் படத்துக்காக இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த சைப்ரஸ் சர்வதேச பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதினை முதல்முறை பெற்றார் அமீர்.

தமிழின் வேறு எந்த இயக்குநருக்கும் கிடைக்காத மிகப் பெரிய அங்கீகாரம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியின் பெர்லின் நகரில் 58வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற திரைப்படங்கள் பங்கேற்றன. ஜெர்மன் மொழி அல்லாத படங்களுக்கான விழா என்பதால் அந்நாட்டு படங்கள் மட்டும் இதில் அனுமதிக்கப்படவில்லை.

ஜப்பான் இயக்குனர் வகாமட்சு கோஜி இயக்கிய யுனைடெட் ஆர்மி விழாவின் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தமிழ் படமான பருத்தி வீரன் மொத்தம் ஐந்து நாட்கள் ஜெர்மனி மற்றும் ஆங்கில சப் டைட்டில்களுடன் திரையிடப்பட்டது. சர்வதேச பத்திரிகையாளர்களுக்கான காட்சியும் தனியாக காட்டப்பட்டது.

அனைத்து திரையிடல்களின் போதும் படத்தின் இயக்குநர் அமீரும் உடனிருந்தார். இந்நிகழ்ச்சிகளில் படத்தின் ஹீரோ கார்த்தியும் கலந்து கொண்டார்.

விழாவின் நிறைவு நாளான நேற்று, பருத்தி வீரன் படம் ஆசிய பிராந்தியத்தின் மிகச்சிறந்த படங்களுள் ஒன்று என விழாக் குழு பாராட்டி அமீருக்கு விருது வழங்கியது.

இதுகுறித்து இயக்குனர் அமீர் கூறுகையில், என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் இது. இந்தப் படத்தை எடுத்ததற்காக உண்மையிலேயே சந்தோஷப்படுகிறேன். படத்துக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைக்கக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தை எடுத்த போதும், வெளியிட்ட போதும் ஏற்பட்ட வலிகளை ஒட்டுமொத்தமாக மறக்கடிக்கச் செய்துவிட்டது, சர்வதேச திரைப்பட படைப்பாளிகள் அதற்கு அளித்த கவுரவம். இன்னும் பல பருத்தி வீரன்களைத் தரும் தூண்டுதலை எனக்குள் விதைத்திருக்கிறது பருத்தி வீரனுக்கு கிடைத்து வரும் அங்கீகாரங்கள் என்றார் அமீர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil