twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இது ஒரு பொன்மாலை பொழுது'

    By Staff
    |

    Vairamuthu
    இறைவன் அனைவருக்கும் ஒரு இதயத்தை மட்டும் கொடுத்திருக்கிறான். ஆனால், காதை இரண்டாக கொடுத்திருக்கிறான். ஒரு காதில் தமிழை கேட்பதற்கு, மற்றொரு காதில் இசையை வாங்கிக் கொள்வதற்காக அப்படி செய்துள்ளான் என்று கவிப் பேரரசு வைரமுத்து கூறினார்.

    கவிஞர் வைரமுத்து திரை உலகில் கால் பதித்து, இது ஒரு பொன்மாலை பொழுது...' என்று பாடல் எழுதத் தொடங்கிய நாள் முதல், தற்போது அவர் எழுதிய பாடல்கள் வரை பிரபலமான பாடல்களை தொகுத்து, அதை இசையாக வழங்கும் நிகழ்ச்சி மெட்டுப்போடு' என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்றது.

    லஷ்மண் ஸ்ருதி இசை குழுவினர் இசையில் பிரபல சினிமா பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா ஆகியோர் 3 மணி நேரம் தொடர்ந்து பாடி, பார்வையாளர்களுக்கு நெஞ்சில் நின்ற கவிஞர் வைரமுத்துவின் பாடல்களை மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்தி அசை போடச் செய்தனர்.

    ஒவ்வொரு பாடலையும் அவர்கள் பாடுவதற்கு முன்பாக, அந்த பாடல்களை எழுதிய சூழ்நிலையை கவிஞர் வைரமுத்து விவரித்தார். அதை பார்வையாளர்கள் ரசித்துக் கேட்டனர்.

    நிகழ்ச்சியில் வைரமுத்து பேசுகையில், 28 ஆண்டுகள் கடந்த விட்ட காலப் பெருங்கடலில், எத்தனையோ அனுபவங்கள். நினைத்து பார்க்கும்போது தமிழ் சினிமாவுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

    இறைவன் அனைவருக்கும் ஒரு இதயத்தை மட்டும் கொடுத்திருக்கிறான். ஆனால், காதை இரண்டாக கொடுத்திருக்கிறான். ஒரு காதில் தமிழை கேட்பதற்கு, மற்றொரு காதில் இசையை வாங்கிக் கொள்வதற்காக அப்படி செய்துள்ளான்.

    எல்லோருக்கும் முதல் மழை, முதல் முத்தத்தை மறக்க முடியுமா?. அப்படித்தான் எனக்கும், எனது முதல் பாடலை மறக்க முடியாது.

    மனைவிக்குப் பிரசவம் ... எனக்கும்!:

    அந்த சமயம் எனது மனைவியை முதல் பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்துவிட்டு, டைரக்டர் பாரதிராஜாவுடன், இசை அமைப்பாளர் இளையராஜாவை பார்க்க சென்றேன். எனக்கும் அது பிரசவ அனுபவம் தான்.

    புது பாடலாசிரியர் என்பதால் இளையராஜா மெட்டுகளை எழுதி என்னிடம் தந்து நாளை பாடலை எழுதி கொண்டுவா என்றார். உடனே நான் இந்த மெட்டுக்கு எனது மனதில் உள்ள பாடல் வரிகளை சொல்லவா என்றேன். இது ஒரு பொன் மாலை பொழுது..' என்ற பாடலை நான் பாடிக்காட்டினேன்.

    வெளியே வந்த பாரதிராஜா என்னிடம், இந்த கருவாயன் யாரிடமும் போன் நம்பர் வாங்க சொல்லமாட்டான். முதல் முறையா உன்னிடம் வாங்க சொல்கிறான், கொடு' என்று எனது போன் நம்பரை வாங்கிக் கொண்டார்.

    எனது முதல் தமிழை உலகிற்கு உச்சரித்த பெருமை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தையே சாரும். இது ஒரு பொன் மாலை பொழுது..' பாடலை அவர்தான் பாடினார். அந்த பாடலுக்காக 3 சரணங்கள் எழுதினேன். ஆனால், இடம் இல்லாத காரணத்தால் 2 சரணங்கள் தான் பாட்டில் இடம் பெற்றிருந்தது. ஆனால், அந்த 3-வது சரணம் எனது மனதிலும், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மனதிலும் நீங்காத இடம் பிடித்துவிட்டது.

    நான் புவி அரசனாக இருந்திருந்தால், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் எடைக்கு எடை தங்கம் கொடுத்திருப்பேன். ஆனால், நான் கவி அரசன் என்பதால் இந்த தங்க சங்கிலியை அவருக்கு அளிக்கிறேன்.

    சித்ரா உதட்டோரம் மலையாளப் பால்..:

    பாடகி சித்ரா சின்ன குழந்தையாக இருக்கும் போதே, பாடகர் ஜேசுதாஸ் பாட அழைத்து வந்தார். அப்போது, நான் இந்த சின்ன குழந்தையா பாடப்போகிறது என்று நினைத்தேன். அவர் பூஜைக்கேத்த பூவிது.. நேற்று தானே பூத்தது..' என்று பாட வேண்டும்.

    ஆனால், குழந்தை பால் அருந்தியபின், குழந்தையின் வாய் ஓரத்தில் பால் ஒட்டியிருப்பது போல, அவர் பாடிய தமிழ் பாடலில் மலையாளம் ஒட்டியிருந்தது.

    அதன்பின், ஐந்து, ஆறு பாடல்களை பாடிய பிறகு தமிழ் பாடகியாகவே அவர் மாறிவிட்டார். குயிலுக்கு வயது ஆகலாம். ஆனால், குயிலின் குரலுக்கு என்றுமே வயதாகாது.

    25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே குரல் அப்படியே உள்ளது. சின்ன குயில் சித்ராவுக்கும் தங்க சங்கிலி அளிக்கிறேன்.

    அண்மையில் மறைந்த இயக்குனர் ஸ்ரீதர், ஒருமுறை தொலைபேசியில் என்னை அழைத்து, நினைவெல்லாம் நித்யா' என்ற படத்திற்கு பாடல் எழுத வேண்டும் என்றார். மலை பகுதிக்கு செல்லும் கதாநாயகன், அங்குள்ள மலைவாழ் பெண்ணின் அழகில் மயங்கி காதலிப்பதாக என்னிடம் அவர் கதை சொன்னார். நான் உடனே சிந்தித்தேன். எவ்வளவு அழகியாக இருந்திருந்தால் அவன், அவளை காதலித்திருப்பான்.

    வேண்டும் என்றால் படத்தின் கதாநாயகியை நான் காட்டட்டுமா? என்று ஸ்ரீதர் என்னிடம் கேட்டார். உடனே நான் அவரிடம், பெண்கள் கற்பனையில் தான் அழகாக இருப்பார்கள் என்று கூறினேன். அந்த பாடல் தான் பனிவிழும் மலர்வனம்... உன் பார்வை ஒருவனம்...'.

    முத்து' படத்திற்கு பாடல் எழுதுவதற்காக நான், ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கேரளாவில் உள்ள கொச்சிக்கு சென்றிருந்தோம். அப்போது, ஏ.ஆர்.ரகுமான் ஒரு தனி அறைக்கு சென்றார். நான் பாடலுக்கு மெட்டு போடும் வரை என்னை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று கூறி அறை கதவை அடைத்துக்கொண்டார்.

    ரஜினிகாந்தும், நானும் ஆன்மீகம், அரசியல் என்று எவ்வளவோ பேசினோம். அப்போது, மாவீரன் அலெக்சாண்டர் பற்றி பேசினோம். உலகில் உள்ள அனைத்து நாடுகள் மீதும் போரிட்டு தனதாக்கிக் கொண்ட அலெக்சாண்டரே, தான் இறக்கும் போது தனது இரண்டு கைகளையும் வெளியே தெரியும் படி வைத்து, இவன் போகும் போது ஒன்றையும் கொண்டு போகவில்லை என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தனது உதவியாளரிடம் கூறினாராம்.

    அதை வைத்தே, முத்து' படத்தில் வரும் ஒருவன் ஒருவன் முதலாளி...' பாடலை எழுதினேன். அந்த பாடலின் இடையே மண்ணின் மீது மனிதனுக்காசை, மனிதன் மீது மண்ணுக்காசை..' என்று எழுதினேன் என்று பேசினார் வைரமுத்து.

    இவ்வாறு கவிஞர் வைரமுத்து தன் நினைவுகளில் மூழ்கினார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X