For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தயாரிப்பாளர் சங்க தேர்தலில் அரசியல்!

  By Staff
  |

  Rathika and Swarnamalya
  கிட்டத்தட்ட மினி சட்டமன்றத் தேர்தல் களம் போலவே காட்சியளிக்கிறது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் களமும்.

  ஒருபக்கம் திமுகவின் கோடம்பாக்கப் பிரதநிதியான, தற்போதைய தலைவர் ராம நாராயணன் தலைமையில் ஒரு அணியும், சன்- ஜெயா தொலைக்காட்சிகளின் ஆதரவுடன் ராதிகா தலைமையில் களமிறங்கியுள்ள இன்னொரு அணியும் வரும் ஜூலை 6-ம் தேதி நடக்கவுள்ள பலப்பரீட்சைக்குக் காத்திருக்கின்றன.

  இரு அணிகளுமே தொலைக்காட்சி சேனல்களிடம் தயாரிப்பாளர்களுக்கு அதிக ராயல்டி வாங்கித் தருவது, இணைய தளங்களிடம் டிரைலர் ஒளிபரப்ப பணம் வசூலிப்பது என 'புரட்சிகரமான' கொள்கைகளை முழங்கி ஓட்டுக் கேட்டு வருகின்றன.

  இந் நிலையில் ராம நாராயணன் அணி ஒரு விரும்பத்தகாத அஸ்திரத்தைக் கையிலெடுத்துள்ளது.

  அதாவது இனி தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்குப் போட்டியிடுபவர்கள் தமிழை தாய்மொழியாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதே அந்த அஸ்திரம். இதனை சங்கத்தின் தேர்தல் விதிகளில் ஒன்றாக அவசர அவசரமாகச் சேர்த்து விட்டிருக்கின்றனர் தற்போது பொறுப்பிலுள்ள ராம நாராயணன் அணியினர்.

  அதாவது எதிரணியில் முக்கியப் பதவிகளுக்குப் போட்டியிடும் கேயார், ஏ.எம்.ரத்தினம் ஆகிய தமிழரல்லாத தயாரிப்பாளர்களை மடக்குவதற்காகவே இப்படியொரு விதியை உருவாக்கியிருப்பதாக பரபரப்பாகப் பேசிக்கொள்ளப்படுகிறது.

  இதுகுறித்து கருத்து தெரிவித்த ராம நாராயணன் அணியின் வி.சி.குகநாகன், இதில் மொழி வெறியோ, இன வெறியோ கிடையாது. பக்கத்து மாநிலங்களில் என்ன நடைமுறையோ அதையே இந்த ஆண்டு முதல் இங்கும் பின்பற்றுவது என முடிவெடுத்துள்ளோம். கர்நாடக தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலோ, மலையாள தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலோ ஒரு தமிழர் போட்டியிட முடியுமா... ஆனால் இங்கு மட்டும் பிற மொழிக்கார்ர்கள் ஆதிக்கம் செலுத்துவது தொடர்கிறது. அது நமது திரைப்படத்துறைக்கு நல்லதல்ல... என்றார்.

  ஆனால் எதிரணியைச் சேர்ந்த கேயாரோ, இதைப் போன்ற முட்டாள்தனம் கிடையாது என்கிறார். மேலும் அவர் கூறுகையில், பக்கத்து மாநிலத்தில் என்னவோ செய்துவிட்டுப் போகிறார்கள். அதுபற்றி நமக்கென்ன. தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் மற்ற மொழிக்கார்ர்களின் பங்களிப்பு என்ன என்று ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் இப்படிப் பேச யாருக்கும் வாய் வராது. இவர்கள் குறிப்பிடும் மற்ற மொழிப் படங்களால் அந்தந்த மாநில எல்லைகளைக் கூட தாண்ட முடியவில்லை.

  ஆனால் இந்திக்கு அடுத்து சர்வதேச சந்தையில் பெரிதும் மதிக்கப்படுகிற, ஆர்வத்தோடு பார்க்கப்படுபவை தமிழ்ப் படங்கள் மட்டும்தான். ஏற்கெனவே பரந்து விரிந்த எல்லைகளைக் கொண்ட, திறமைகள் எங்கிருந்தாலும் வாரி அணைத்து வாரிக் கொடுக்கிற தமிழ்த் திரையுலகை எதற்காக குறுகிய வட்டத்துக்குள் முடக்கப் பார்க்கிறார்கள் என்று புரியவில்லை. அதிலும் ஒரியா, அசாமி என மாநில, மொழி எல்லைகளைத் தாண்டி படமெடுத்த இயக்குநர் ராம நாராயணன் எப்படி இதற்கு ஒப்புக் கொண்டார் என்பதுதான் புரியவில்லை. இதை மட்டமான அரசியல் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல, என்கிறார்.

  கேயார் இம்முறை தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் போட்டியிடுகிறார்.

  தமிழைத் தாய் மொழியாக்க் கொள்ளாதவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், நீதிமன்றம் செல்லவும் தயாராகி வருகிறார்கள் ராதிகா-கேயார் அணியினர். இதற்காக அவர்களுக்கு மாறன் சகோதரர்களும் துணை நிற்பதாய் உறுதி அளித்துள்ளனராம்.

  விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஆகியோரின் தீவிர ஆதரவும் ராதிகாவின் அணிக்குத்தான் உள்ளது. எனவே இம்முறை மிக்க் கடுமையான போட்டியைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ராம நாராயணன்.

  இதற்கிடையே, தேர்தல் அதிகாரியாக இம்முறை ஏவி.எம். முருகன் தொடரக் கூடாது என ராதிகா அணியினர் தொடுத்துள்ள வழக்கில் ராம நாராயணன் மற்றும் இதர நிர்வாகிகளுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X