»   »  'ஜோதா அக்பருக்கு' எதிர்ப்பு-வன்முறை

'ஜோதா அக்பருக்கு' எதிர்ப்பு-வன்முறை

Subscribe to Oneindia Tamil
Hrithik Roshan with Aishwarya Rai
ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்து வெளியாகியுள்ள ஜோதா அக்பர் படத்துக்கு வட மாநிலங்களின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் பலவற்றில் தாக்குதல் நடத்தப்பட்டது.

அக்பரின் காதல் கதைதான் ஜோதா அக்பர். இதில் அக்பரின் 3வது மனைவியாக ராஜபுத்திர இளவரசி ஜோதா சித்தரிக்கப்பட்டுள்ளார். இதுதான் சர்ச்சையைக் கிளப்பி விட்டது.

ராஜபுத்திர இளவரசியான ஜோதா, அக்பரின் மகன் சலீமின் மனைவி. அப்படி இருக்கையில் வரலாற்றைத் திரித்து, ராஜபுத்திரர்களின் மரியாதையை இழிவுபடுத்தி விட்டனர் என்று ராஜபுத்திர சமூகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் அக்பரின் 3வது மனைவிதான் ஜோதா என்று கூறுகிறார் படத்தின் இயக்குநர் அசுதோஷ். இதற்கு வரலாற்று சான்றுகளையும் அவர் முன் வைக்கிறார்.

இருந்தாலும் ராஜபுத்திரர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. படத்தை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் படத்தைத் திரையிட மாட்டோம் என எச்சரித்துள்ளனர். இதனால் ராஜஸ்தானில் பரபரப்பு நிலவி வருகிறது.

இந் நிலையில் வெள்ளிக்கிழமை இப்படம் திரைக்கு வந்தது. சில மாநிலங்களில் படத்தைத் திரையிட தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் ராஜஸ்தான் அரசு தடை விதிக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில், டெல்லி அருகே உள்ள குர்கான் நகரில் ஒரு மல்டிபிளக்ஸ் வளாகத்தில் இப்படம் திரையிடப்பட்டது. அப்போது திடீரென தியேட்டர் வளாகத்திற்குள் புகுந்த 100க்கும் மேற்பட்டோர் திரையைக் கிழித்து ரகளையில் இறங்கினர்.

கட் அவுட்கள், போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டன. இதையடுத்து படம் நிறுத்தப்பட்டது. ரசிகர்கள் சிதறி ஓடினர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் போராட்டம் நடந்தது. நரோடா என்ற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தியேட்டருக்கு ஊர்வலமாக வந்து படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் உரிமையாளருக்கு அடி விழுந்தது. தியேட்டருக்குள் புகுந்த கும்பல் இருக்கைகளை கிழித்து நாசப்படுத்தியது. இதனால் படம் நிறுத்தப்பட்டது.

பாட்னாவில் படம் ஓடிய தியேட்டருக்குள் ஜன கல்யான் மஞ்ச் என்ற அமைப்பினர் புகுந்து ரகளை செய்தனர்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களில் ராஜபுத்திரர் இனத்தினர் அதிகம் பேர் உள்ளனர். அங்கு கடும் எதிர்ப்பு நிலவி உள்ளது. மத்திய பிரதேசத்தில் ஒரு சில இடத்தில் மட்டுமே படம் திரையிடப்பட்டுள்ளது.

போபாலில் ஒரு தியேட்டரில் 50-க்கும் மேற்பட்டோர் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள்.

தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் ஜோதா அக்பர் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil