For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விளம்பரத்துக்காக அலைபவன் நானல்ல!-ஷாரூக்

  By Staff
  |

  Shahrukh Khan
  அமெரிக்க குடியுரிமைத் துறை அதிகாரிகளால் எனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை வைத்து நான் விளம்பரம் தேடிக் கொள்ள முயலவில்லை. அத்தகைய கேவலமான எண்ணம் எனக்கு எப்போதும் கிடையாது என நடிகர் ஷாரூக்கான் கூறியுள்ளார் .

  புயலைக் கிளப்பிய தனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இந்தியா திரும்பிய ஷாரூக்கான், தனது மன்னத் இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

  அமெரிக்காவில் எனக்கு ஏற்பட்டது துரதிருஷ்டவசமானது, நியாயமற்றது. நான் அதைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை...

  நான் ஒரு பெரிய ஸ்டார் என்பதால் என்னை மட்டும் சிறப்பாக தனித்த கவனத்துடன் அமெரிக்கர்கள் நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அதே நேரத்தில் நியூஜெர்சி விமான நிலையத்தில் நான் நடத்தப்பட்ட விதம் வினோதமாகவும், சம்மந்தமில்லாததாகவும் இருந்தது.

  இதனால் எனக்கு கோபம் இல்லை. ஆனால் தர்மசங்கடமாக இருந்தது. அதிகாரிகள் அங்கு கேட்ட கேள்விகள் புண்படுத்தும் விதத்தில் இருந்தன... அந்த நேரத்துக்குப் பொருத்தமற்றவையும் கூட.

  இந்த சம்பவத்துக்காக அமெரிக்காவை எனது விரோதி நாடாக நினைக்கவில்லை. தேவை இருந்தால் மீண்டும் போகத்தான் செய்வேன். அமெரிக்க நடைமுறைகள் குறித்து நான் புகார் கூற விரும்பவில்லை. ஆனால் அது அர்த்தமுள்ளதாகவும், சற்றே எளிமையானதாகவும் அமைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

  அங்கு குடியுரிமை அதிகாரிகள் என்னிடம் விசாரணை நடத்தியபோது அடிப்படை பாதுகாப்பு அம்சங்களான கைரேகை பதிவு, விழித்திரை ஸ்கேன் போன்றவை பின்பற்றப்படவில்லை.

  இந்திய தேசத்தின் பொறுப்பான குடிமகன்களில் ஒருவன் நான். நாம் விதிகளைப் பின்பற்ற வேண்டும். அதைக் கேள்வி கேட்கும் ஆசை எனக்கும் இல்லை. அமெரிக்கா என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவும் இல்லை.

  எந்தவொரு நாட்டின் பாதுகாப்பும் முக்கியமானதுதான். ஆனால் பாதுகாப்பு அம்சங்கள் என்ற பெயரில் ஜாதி, மதம், இனப் பிரச்சினை அங்கே வரக்கூடாது.

  அமெரிக்கா செல்வதற்காக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி விமான நிலையத்துக்கு சென்றபோது அங்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் அவரிடம் நடந்து கொண்ட முறையை ஒப்பிடுகையில் எனக்கு நடந்தது ஒன்றுமே இல்லை. கலாம் ஒரு தேசியத் தலைவர், மாபெரும் மனிகர் என்ற முறையில் அவருக்கு நேர்ந்தது கொடுமையானது.

  விளம்பர எண்ணமில்லை!

  எனது அடுத்த படமான 'மை நேம் இஸ் கான்' விளம்பரத்துக்காகத்தான் இதைச் செய்தேன் என்று கூட சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அத்தனை கேவலமான, மலிவான எண்ணம் கொண்டவனல்ல நான். நான் ஒருபோதும் அப்படி நடந்துகொள்ள மாட்டேன். ஷாரூக்கான் விளம்பரத்துக்காக அலைபவன் அல்ல.
  இதற்கு முன்பும் கூட என்மீது அப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்திவிட முடியாது.

  இந்த விவகாரத்தை நான் ஊதிப் பெரிதாக்கவும் முயலவில்லை. இதற்கு முன்பும் என்னை அமெரிக்காவில் சோதனை போட்டிருக்கிறார்கள். அப்போது பாதுகாப்புத் துறையினர் நியாயமான காரணங்களுக்காக சோதனையிட்டார்கள். அதை ஒரு பெரிய விஷயமாக நான் நினைத்ததே இல்லை.

  ஆனால் இம்முறை குடியுரிமைத்துறை அதிகாரிகள் அத்துமீறி, தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் நடந்து கொண்டனர்.

  இந்தப் பிரச்சினைக்காக எனக்கு கிடைத்த ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. இது உலகளாவிய பிரச்சினை என்பதையே இது காட்டுகிறது", என்றார் ஷாரூக்கான்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X