»   »  'குறைக்க' மிஷ்கின் மறுப்பு!

'குறைக்க' மிஷ்கின் மறுப்பு!

Subscribe to Oneindia Tamil
Naren and Vijayalakshmi
எனக்கு கிடைத்த தயாரிப்பாளர் ரொம்ப நல்லவர் என்று மிஷ்கின் பாராட்டுப் பத்திரம் வாசித்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் அவருக்கும் தயாரிப்பாளருக்கும் மனஸ்தாபம் என நமது 'இன்பாக்ஸ்' கதவைத் தட்டுகின்றன செய்திகள்!

அது வேறு ஒன்றுமில்லை, அஞ்சாதே படத்தின் நீளத்தால் எழுந்த பிரச்சினைதான். நரேன், விஜயலட்சுமி, பிரசன்னா நடத்துள்ள அஞ்சாதே படம் சர்வதேச தரத்தில் மிகுந்த கவனத்தோடு எடுக்கப்பட்டுள்ள படம்தான் என்றாலும் படத்தின் நீளம் ரொம்ப அதிகம் என்று சிலர் கருதுகிறார்களாம்.

மொத்தம் 3 மணி 20 நிமிடங்கள் வரை படம் ஓடுவதால், அந்த 20 நிமிட நீளத்தை மட்டும் குறைத்துவிடலாமா என தியேட்டர் அதிபர்கள் போனில் நச்சரிக்கிறார்களாம் தயாரிப்பாளர் நேமிச்சந்த் ஜபக்கை.

இதுகுறித்து மிஷ்கினிடம் பேசினாராம் ஜபக். படத்துக்கு பிளஸ் பாயிண்டே நீளம்தான். அதைக் குறைத்தால் படத்தின் ஜீவனே கெட்டுவிடும். ஒரு காட்சியைக் கூட வெட்ட அனுமதிக்க மாட்டேன் என கறாராகக் கூறிவிட்டாராம் மிஷ்கின்.

இந்தப் படத்தை தயாரிப்பாளரே சொந்தமாக ரிலீஸ் செய்திருப்பதால் தியேட்டர்காரர்களும் தங்களின் புகழ்பெற்ற எடிட்டர்களைக் (அதாங்க, ஆபரேட்டர்கள்!) கொண்டு காட்சிகளை வெட்ட யோசிக்கிறார்களாம்.

இதனால் படத்துக்கு வரும் கூட்டம் குறையத் தொடங்கிவிடுமோ என்ற பயம் ஜபக்குக்கு. ஆனால், மிஷ்கின் தெளிவாக இருக்கிறார்.

வழக்கமான ஒரு படத்துக்காக மூன்று மணி நேரம் செலவழிக்கும் ரசிகர்கள், ஒரு நல்ல படத்துக்காக மேலும் 20 நிமிடங்கள் செலவழிக்கத் தயங்குவார்களா என்ன... நாமாக ஒரு தவறான முடிவுக்கு வந்துவிட்டு பின்னர் ரசிகர்களின் ரசனையைக் குறை சொல்லும் கெட்ட பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

படம் நீளம் என்று ரசிகர்கள் குறை சொல்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே நேற்று முழுவதும் பல திரையரங்குகளுக்குச் சென்று மக்களோடு அமர்ந்து பார்த்தேன். கிளைமாக்சை நெருங்க நெருங்க குண்டூசி விழும் சத்தம் கூட கேட்கும் அளவு அப்படியொரு நிசப்தம். அந்த அளவு படத்தில் ரசிகர்கள் ஒன்றிப் போயிருந்தார்கள்.

இப்போது நாமாக நீளத்தைக் குறைக்கப் போய், படத்தின் மொத்த வசூலும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இதைத்தான் தயாரிப்பாளரிடம் சொன்னேன். அதை சண்டை என்கிறார்கள்... நீங்களே சொல்லுங்கள், இந்தப் படத்தில் எந்தக் காட்சியை வெட்டுவது?

அந்த ஒரு டூயட் பாடலை வேண்டுமானால் தூக்கலாம். அப்புறம், படத்தில் கமர்ஷியல் அயிட்டங்கள் குறைவாக உள்ளதே எனப் புலம்புவார்கள்... என்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

படம் குறித்து சலசலப்பான செய்திகள் மீடியாக்களில் வந்து கொண்டிருந்தாலும், திரையரங்குக்கு வரும் சினிமா ரசிகர் கூட்டம் மட்டும் பெருகிக் கொண்டேயிருக்கிறதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil