For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  யாழினியின் 'தமிழ் அமுது'-பத்மா சுப்ரமணியம் பாராட்டு

  By Staff
  |

  Tamil Amuthu Yazhini Dance Show
  இயக்குநர் சீமானின் அண்ணன் மகள் குமாரி யாழினியின் பரத நாட்டிய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை பாரதிய வித்யா பவனில் நடந்தது.

  'தமிழ் அமுது' எனும் இந் நிகழ்ச்சிக்கு, பரத நாட்டிய மேதை டாக்டர் பத்மா சுப்ரமணியம், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்து யாழினியை வாழ்த்தினர்.

  புறநானூற்றின் தமிழ் பெண்ணின் வீர்த்தைப் போற்றும் வகையில் பாடலுக்கு யாழினி நடனம் ஆடிய விதம் பார்த்து அரங்கமே கைதட்டி பாராட்டியது.

  யாழினியின் நடனம் மிக அற்புதமான கலை விருந்து என்றும் ஈழத்தின் கலைப் பிரதிநிதியாக அவர் தனது நாட்டிய சேவையைத் தொடர வேண்டும் என்றும் டாக்டர் பத்மா சுப்ரமணியம் பாராட்டினார்.

  யாழினியை வாழ்த்தி அவர் பேசியதாவது:

  எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, மீண்டும் தாய்த் தமிழகத்துக்கு வந்து தங்கி எத்தனையோ கஷ்டங்களைத் தாண்டி இந்த பரதக் கலையைக் கற்று இன்று ஜொலிக்கிறார் யாழினி.

  அவருக்கு இந்த நடனத்தைக் கற்றுக் கொடுத்த நர்த்தகி நடராஜ் பாராட்டுக்குரியவர்.

  ஒரு பெண்ணுக்கு உடல் அமைப்பு நன்றாக இருதால் உடல்பாவம் வந்துவிடும். ஆனால் முக பாவங்கள் இயல்பாக அமைவது அத்தனை சுலபமல்லை. ஆனால் யாழினி உடல் பாவங்களும் முக பாவங்களும் மிக அற்புதமாக கைவரப்பெற்றிருக்கிறாள். அதற்கு முக்கிய காரணம் அவரது குரு நர்த்தகிதான்.

  இங்கே தமிழ் பெண்ணின் வீரம் குறித்து அமைந்த நாட்டிய நாடகத்தைப் பார்த்தபோது எனக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டது. 50 ஆண்டுகளுக்கு முன் என் தந்தை இயக்குநர் சுப்பிரமணியமும், கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனும் ரஷ்யாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். அங்கே இந்த நாடகத்தைத்தான் என் தந்தை மோனோ ஆக்டிங்காக செய்து காட்டினார். அப்போது உடனுக்குடன் அந்த நாட்டியத்தின் அர்த்தத்தை ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்துச் சொன்னார்கள். அனைவரும் பாராட்டினார்கள்.

  அன்றைக்கு என் தந்தை அந்த மேடையில் நடித்துக் காட்டியபோது எப்படி உணர்ந்தேனோ அதே போன்றதொரு உணர்வை இன்று பெற்றேன்.

  இந்தக் குழந்தை யாழினி, நடனத்தில் மிகப் பெரிய கலைஞராக வருவார். இதை வாய் வார்த்தையாகச் சொல்லவில்லை. இதயப்பூர்வமாக, அவரது திறமையை உணர்ந்து சொல்கிறேன், என்றார் பத்மா சுப்ரமணியன்.

  இழப்பினூடே வெற்றிகளைப் பெறுவோம்!

  விழாவில் பங்கேற்று கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் வாழ்த்தியதாவது:

  ஒரு சிலையின் நிஜமான அழகு, அதில் சேதாரமான கல்லில்தான் இருக்கிறது என்பார்கள்.

  அதுபோலத்தான் இன்று அனைத்தையும் இழந்து நிற்கிற தேசத்திலிருந்து ஒரு கலை உயிர்ப்புடன் பூத்திருக்கிறது.

  துப்பாக்கி முனையில் நிற்கும் என்னால் புல்லின் நுனியில் அமர்ந்திருக்கும் வண்ணத்துப் பூச்சியை ரசிக்க முடியாது என்றார் ஒரு கவிஞன். எமது ஈழத்துச் சொந்தங்களின் மனநிலை இதுவே என்றாலும், இந்த துன்பத்திலிருந்தும் மீள்வோம்.

  எமது சொந்தங்களுக்கு இன்று இழப்பிருக்கலாம். ஆனால் இழந்தவற்றை இங்கிருந்தே மீட்டெடுப்போம். எமது ஈழத்துச் சகோதரிகள் பலரும், துவாரகாவும் செய்த தியாகங்கள் அதற்காகவே என எடுத்துக் கொண்டு நமது பாதையில் இன்னும் பல சாதனைகளைப் படைக்க பயணிப்போம்.

  யாழினியின் திறமை அபாரமானது. மிக அற்புதமான நடனக் கலைஞராக அவர் சிறக்க வேண்டும், என்றார்.

  விழாவில் இயக்குநர் சீமான், தங்கர் பச்சான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  யாழினி பற்றி...

  தமிழ் ஈழத்தை தாயகமாகக் கொண்ட யாழினி பிறந்து வளர்ந்தது கனடாவில். யாழினியின் தந்தை ராஜகுலசிங்கம், அம்மா மணிமேகலை ராஜகுல சிங்கம்.

  இவர்கள் கனடாவில் வாழ்ந்தாலும், தமிழ் கலாச்சாரம், கலைகளில் தங்கள் மகள் முழுமையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற ஆவலில், பரத நாட்டியக் கலைஞர் நிரஞ்சனாவிடம் 5 வயது முதலே பரதம் கற்க வைத்தனர்.

  மேலும் பரதத்தின் நுணுக்கமான அம்சங்களை நர்த்தகி நடராஜிடம் கற்றுள்ளார் யாழினி. தமிழ் கலாச்சார, மரபு நடனங்களை தஞ்சை நால்வர் பாணியில் கலைமாமணி நர்த்தகி நடராஜிடம் கற்றுத் தேர்ந்துள்ளார்.

  இது தவிர முனைவர் தியாவிடம் பாரம்பரிய சங்கீதமும் கற்றுள்ளார்.

  தமிழர்கள் உலகமெல்லாம் பரந்து விரிந்திருந்தாலும், அவர்களின் வேர்கள் உறவுகளாக இருப்பது தாய் தமிழகத்தில்தான் என்பதால், அந்த உறவுகளுக்கு மத்தியில் தங்கள் மகளின் நாட்டிய நிகழ்ச்சி நிகழவேண்டும என விரும்பினர் யாழினியின் பெற்றோர். அந்த விருப்பம் இப்போது நிறைவேறிவிட்டது.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X