twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'அங்காடி ..' ஜெயமோகன் விலகல்!

    By Staff
    |

    Magesh and Anjali
    சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர். குறித்து விமர்சித்து எழுதப் போய், திரையுலகினரின் கடும் கண்டனத்தை சம்பாதித்துக் கொண்டுள்ள எழுத்தாளர் ஜெயமோகன், ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் அங்காடி தெரு படத்திலிருந்து விலகி விட்டார்.

    எழுத்தாளரும், வசனகர்த்தாவுமான ஜெயமோகன் தனது இணையதள பிளாக்கில், சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். குறித்து எழுதிய விமர்சனம், பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது.

    அந்த விமர்சனக் கட்டுரையை ஆனந்த விகடன் இதழ் எடுத்துப் பிரசுரிக்க பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. திரையுலகம் ஒட்டுமொத்தமாக திரண்டு ஜெயமோகனுக்கும், ஆனந்த விகடனுக்கும் கண்டனம் தெரிவித்தது.

    மன்னிப்பு கேட்கும் வரை விகடன் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு (தற்போது ஜீவாவை வைத்து சிவா மனசுல ஷக்தி என்கிற படத்தை விகடன் தயாரிக்கிறது) ஒத்துழைப்பு தருவதில்லை என்று தீர்மானமும் போடப்பட்டது.

    இதையடுத்து விகடன் நிறுவனம் தனது இதழ் மூலம் பகிரங்க மன்னிப்பு கேட்டது. இந்த நிலையில் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அங்காடி தெரு படத்தின் வசனகர்த்தாவாக நியமிக்கப்பட்டிருந்த ஜெயமோகன் அந்தப் பொறுப்பிலிருந்து விலகி விட்டார்.

    தனது முடிவை இயக்குநர் வசந்தபாலனிடம் தெரிவித்து விட்டார் ஜெயமோகன்.

    தனது கட்டுரைக்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ஜெயமோகன் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இதனால், படத்திற்கு சிக்கல் வந்து விடுமோ என்று பயந்த இயக்குநர் வசந்தபாலனும், ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனமும், ஜெயமோகனிடம் படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனராம். இதனால் ஜெயமோகன் விலகி விட்டதாக தெரிகிறது.

    அங்காடி தெரு படத்திலிருந்து ஜெயமோகன் விலகி விட்டதாக ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளது.

    இந்தப் படம் தவிர பாலாவின் நான் கடவுள் படத்திலும் ஜெயமோகன்தான் வசனகர்த்தாவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நான் கடவுள் படத்தின் வசனப் பகுதிகளை ஏற்கனவே ஜெயமோகன் எழுதி முடித்து விட்டதாக தெரிகிறது. இதனால் நான் கடவுள் விவகாரத்தில் திரையுலகம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.

    ஒரு வேளை ஜெயமோகன் பெயரை டைட்டில் கார்டிலிருந்து நீக்க வேண்டும் என்று நடிகர் சங்கம் உள்ளிட்டவை கோரும் எனத் தெரிகிறது. ஆனால் பாலா அப்படி செய்வாரா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் பாலாவின் குணம் தெரிந்தவர்கள்.

    எனவே ஜெயமோகன் விவகாரம் இன்னும் குழப்பமாகவே உள்ளது.

    --

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X