twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏவிஎம் முருகன் நீக்கம்-கோர்ட் அதிரடி

    By Staff
    |

    Radhika
    தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலை நடத்தும் பொறுப்பிலிருந்து தயாரிப்பாளர் ஏவி.எம்.முருகனை நீக்கி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

    இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல்கள் வரும் ஜூலை 6ம் தேதி நடைபெற உள்ளன.

    தற்போது தலைவராக உள்ள ராம நாராயணன் தலைமையில் ஒரு அணியும், ராதிகா சரத்குமார் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இரு தரப்பிலுமே முக்கியப் பிரமுகர்கள் பதவிக்கு மோதுவதால், கடும் போட்டி நிலவுகிறது.

    இரு அணிகளுக்கும் பின்னணியில் உள்ள திமுக மற்றும் அதிமுகவின் அரசியல் செல்வாக்கு இத்தேர்தலை மேலும் பாரபரப்பாக்கியுள்ளது.

    இந் நிலையில், தற்போது பொறுப்பிலுள்ள ராமநாராயணன் அணி அவசர அவசரமாக ஒரு புதிய தேர்தல் விதியைச் சேர்த்தது. அதன்படி, தமிழரல்லாத யாரும் இனி தயாரிப்பாளர் கவுன்சிலின் பொறுப்புகளில் போட்டியிட முடியாது.

    ராதிகாவின் அணியில் உள்ள கேயார், ஏ.எம்.ரத்னம் ஆகிய தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட தயாரிப்பாளர்கள் பொறுப்புக்கு வராமல் தடுப்பதற்காகவே இத்தகைய புதிய விதி சேர்க்கப்பட்டதாக புகார் கூறினர் ராதிகா அணியினர்.

    மேலும் கடந்த முறை தேர்தல் அதிகாரியாக இருந்த ஏவிஎம் முருகன்தான் இதற்கெல்லாம் காரணம் என்றும் குற்றம் சாட்டினர்.

    உடனே இந்தப் புதிய விதியையும், தேர்தல் அதிகாரியான ஏவிஎம் முருகனையும் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர் ராதிகா அணியினர்.

    அதில் கூறப்பட்டிருந்ததாவது:

    கடந்த முறை தேர்தல் அதிகாரியாக இருந்தவர் ஏவிஎம் முருகன். இவர் நிறைய தில்லுமுல்லு செய்து ராமநாராயணனை ஜெயிக்க வைத்தார். அதற்கான ஆதாரங்கள் இந்த மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே இம்முறை அவர் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றக் கூடாது.

    மேலும் தமிழரல்லாதோர் இத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என தேவையற்ற, இன வெறியைத் தூணன்டும் புதிய விதியை கலைத் துறையைச் சேர்ந்த ஒரு சங்கத்தில் புகுத்தக் காரணமாகவும் அவர் இருந்துள்ளார்.

    எனவே, தேர்தல் அதிகாரி முருகனை நீக்க வேண்டும். இந்தப் புதிய விதிக்கும் தடை விதிக்க வேண்டும், என அந்த மனுவில் குறிப்பிடிருந்தனர்.

    அதிரடித் தீர்ப்பு:

    இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராமசுப்பிரமணியன் அளித்த தீர்ப்பில்,

    ஏவிஎம் முருகனுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என அவர் தரப்பு வழக்கறிஞர் கூறினார். ஆனால், தமிழரல்லாதோர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற புதிய விதியை இப்போது அவர்தான் திடீரென்று புகுத்தியுள்ளார். தேர்தல் நியாயமாக நடக்காது என்பதைப் புரிந்து கொள்ள இது ஒன்றே போதுமானது.

    எனவே தேர்தல் அதிகாரி பொறுப்பிலிருந்து இப்போதே ஏவிஎம் முருகனை நீக்குகிறேன். மேலும் தமிழர் மட்டுமே போட்டியிடுவது என்ற விதியினைப் பயன்படுத்தவும் தடை விதிக்கிறேன். தேர்தலை திட்டமிட்டபடி ஜூலை 6ம் தேதி நடத்தவேண்டும். அதற்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். தேர்தல் நியாயமான முறையில் நடப்பதை உறுதி செய்ய வீடியோ எடுத்து அதை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார் நீதிபதி.

    இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த கேயார், நியாயம் எங்கள் பக்கம் உள்ளது என்பதற்கு இது ஒன்றே போதும். தயாரிப்பாளர்கள் நிஜத்தைப் புரிந்து கொண்டு எங்கள் அணியை வெற்றி பெறச் செய்வார்கள் என நம்புகிறேன் என்றார்.

    அதேநேரம் இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டனர் ராமநாராயணன் அணியினர்.

    இத் தீர்ப்பு, ராம நாராயணன் அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X