For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  முல்லைப் பெரியாறு அணை உடைந்தால்.... சர்ச்சைப் படம் எடுத்த மலையாள இயக்குநர்!

  By Shankar
  |

  தமிழக மக்களின் உணர்வுப் பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி ஒரு படம் ஆங்கிலத்தில் உருவாகியுள்ளது. டேம்999 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை எடுத்திருப்பவர் ஒரு மலையாளி. இந்தப் படம் தமிழிலும் வெளியாகப் போகிறது. இந்தப் படத்தில் அணை உடைந்தால் என்னவாகும் என்பதை கிராபிக்ஸில் காட்டி மக்களைப் பீதிக்குள்ளாக்கியுள்ளனர்.

  சொத்தை விற்று அணை கட்டிய பென்னி குக்

  நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது முல்லைப் பெரியாறு அணை. ஆங்கிலேயர்தான் என்றாலும் பென்னிகுக் என்ற மக்கள் நல விரும்பியால் கட்டப்பட்ட இந்த அணை தமிழகத்தின் ஜீவாதாரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த அணை கட்டும் பணியின்போது நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதால் இங்கிலாந்தில் இருந்த தனது சொத்துக்களை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு அணை கட்டினாராம் பென்னி குக்.

  நமது நாட்டுக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத பென்னி குக் இப்படி ஒரு மகா சேவையைச் செய்தார். ஆனால் இந்த அணையை இடித்துத் தள்ளி விட்டு, தான் ஒரு அணையை கட்டி தன்னிடம் தமிழகத்தை கெஞ்ச வைக்க வேண்டும் என்ற நோக்கில் கேரள அரசு செயல்பட்டு வருகிறது.

  இந்த அணை ஸ்திரத்தன்மை இல்லாதது என்றும், இந்த அணை உடையும் அபாயம் உள்ளதாகவும், கற்பனையாகக் கூறிக் கொண்டு, பல ஆண்டுகளாக பிரச்சினை செய்துவரும் கேரளா, இதை இடித்துவிட்டு புதிய அணை கட்டப்போவதாக கூறி வருகிறது. இதற்காக டேம் உடைவது போல ஒரு கிராபிக்ஸ் சிடியையும் வெளியிட்டு பரபரப்பு செய்தது.

  ஆனால் தமிழகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வைகோ போன்ற தலைவர்கள் முழு வீச்சில் இப்பிரச்சினைக்கு குரல் கொடுத்து வருகின்றனர்.

  வம்பை வளர்க்கும் ஆங்கிலப் படம்

  இந்நிலையில், அணை உடைவது போலவும் அதில் வெளியாகும் வெள்ளத்தில் ஏராளமானோர் சிக்கி உயிரிழப்பது போலவும் காட்சிகளைக் கொண்ட ஒரு படம் வெளியாக இருக்கிறது.

  அதுதான் 'டேம் 999' எனும் ஆங்கிலத் திரைப்படம். இந்தியாவில் வரும் வெள்ளிக்கிழமை இந்தப் படம் வெளியாகிறது. ஆங்கிலம் தவிர, தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

  '100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையை முன்னெச்சரிக்கையாக இடிக்காவிட்டால் பேரிடர் ஏற்படும்' என்பது போல் இப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

  கேரளாவைச் சேர்ந்த மாலுமி

  கேரளத்தைச் சேர்ந்த கடற்படை மாலுமியாக இருந்து திரைப்பட இயக்குநராக மாறிய சோஹன் ராய் தான் இப்படத்தை இயக்கியுள்ளார்.

  'இந்தப் படத்தை பார்த்த பின்னர், முல்லைப் பெரியாறு பழைய அணையை உடைக்க தமிழக அரசே சம்மதம் தெரிவிக்கும்' என்றும் திருவாய் மலர்ந்துள்ளார் சோஹன் ராய்.

  தமிழர்கள்தானே சாகப் போகிறார்கள்

  இந்த அணை உடைவதால் தமிழர்கள்தான் சாவார்கள் என்றும் கூறுகிறார் சோஹன் ராய்.

  ஏற்கனவே இவர் முல்லைப் பெரியாறு அணையை மையமாக வைத்து எடுத்துள்ள 'டாம்ஸ்' டாகுமெண்டரிக்கு ஹாலிவுட்டில் விருது கிடைத்துள்ளது. தற்போது பழங்கால அணை உடைவதை மையமாக வைத்து இவர் படம் எடுத்துள்ளார்.

  'டேம் 999' படத்தில் ஊழல்வாதியான மேயர் அரசியல் ஆதாயத்துக்காக வலுவற்ற அணையைக் கட்டுகிறார் (இது சில ஆண்டுகளுக்கு முன் வந்த நோவாஸ் ஆர்க் ஆங்கிலப் படத்தின் மையக் கருத்து). அதனால் ஏற்படும் அணையின் உடைப்பால் ஏராளமான பேர் உயிர் இழப்பதையும், பழைய அணைகள் குறித்து விழிப்புணர்வையும் மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

  முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான நேரடித் தாக்குதலா என்ற கேள்விக்கு சோஹன் ராய் அளித்துள்ள பதில் இது:

  "நூறு ஆண்டு கால பழமைவாய்ந்த முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆய்வு மேற்கொண்டேன். சீனாவில் 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற பான்கியோ டாம் பேரிடரில் சிக்கி இரண்டரை லட்சம் பேர் உயிர் இழந்தார்கள். அதே அபாயம் முல்லைப் பெரியாறு அணையிலும் உள்ளது.

  அரசியல் சிக்கல் காரணமாக இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்தப் படத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் காண்பிக்காவிட்டாலும், கேரள மாநிலம் ஆலப்புழையில் படமாக்கப்பட்ட காட்சிகள் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையைப் பிரதிபலிக்கும்.

  முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தான். இந்தப் படத்தைப் பார்த்த பின்பு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து புதிய அணையை கட்டுவதற்கு தமிழக அரசே ஒத்துழைக்கும்," என்றார்.

  ஆக, முல்லைப் பெரியாறுக்கு எதிரான பரப்புரையை சினிமா மூலமும் தொடங்கியிருக்கிறார்கள் கேரளத்துக்காரர்கள்.

  English summary
  Sohan Rai, a Malayalam film maker is coming out with a new flick 'Dam 999'. Based on Mullai Periyaru issue, the film will be hit the screens on Friday. Critics told that the film is advocating Kerala's aim to demolish the Mullai Periyaru Dam.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X