For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எழுதிக் கொண்டே இருப்பேன்-எனது பேனாவுக்கு ஓய்வே கிடையாது கருணாநிதி

  By Sudha
  |

  கனிமொழி பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, எனது பேனாவுக்கு ஓய்வுகிடையாது. தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பேன் என்றார்.

  கவர்ச்சி நடிகை சோனா தனது யூனிக் நிறுவனம் சார்பில் அம்மா கிரியேஷன்ஸ் சிவாவுடன் இணைந்து தயாரித்துள்ள படம் கனிமொழி. ஜெய் ஹீரோவாக நடித்துள்ளார்.

  இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று கலைஞர்அரங்கத்தில் நடந்தது. முதல்வர் கருணாநிதி இசையை வெளியிட நடிகர் விஜய் பெற்றுக் கொண்டார்.

  பின்னர் கருணாநிதி பேசுகையில்,

  உலகத் தமிழ் மாநாட்டின் ஊர்வலம் 1968-ம் ஆண்டு சென்னை மாநகரத்தில் ஜாகீர் உசேன், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் போன்ற தலைவர்கள் எல்லாம் அமர்ந்து, அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காணும்போது, நானும், அவர்களோடு அமர்ந்திருந்த நேரத்தில், மருத்துவமனையிலே இருந்து "உங்களுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது'' என்று எனக்குச் செய்தி வந்தது.

  இந்த "கனிமொழி'' என்கின்ற பெயரில் எனக்கு எப்போதுமே பற்று, பாசம் உண்டு. நான் எழுதியுள்ள சிறுகதையானாலும், பெருங்கதையானாலும், அவற்றில் கதாநாயகியினுடைய பெயரோ அல்லது முக்கியமான ஒரு பெண் பாத்திரத்தினுடைய பெயரோ, "கனிமொழி'' என்று இருக்கும். இப்படி பல பெண் பாத்திரங்களுக்கு "கனிமொழி'' என்று பெயர் வைத்து, அதன்மூலமாக மகிழ்ந்த நான், உள்ளபடியே ஒரு "கனிமொழி'' பிறந்திருக்கிறது என்ற செய்தி வந்தவுடன், நான் மருத்துவமனையிலே இருந்தவர்களுக்கு, என் மனைவிக்கு நான் சொல்லியனுப்பியது - இப்போது அண்ணா சாலை; அதற்கு முன்பு "மவுண்ட் ரோடு'' - அங்கிருந்து பேசுகிறேன். "குழந்தைக்கு நான் ஏற்கெனவே சொன்னபடி, "கனிமொழி என்றுதான் பெயர்'' என்று குறிப்பிட்டேன்.

  ஒருவேளை உலகத் தமிழ் மாநாட்டையொட்டி பிறந்த பெண் குழந்தை என்ற காரணத்தினாலோ, என்னவோ, அந்த "கனிமொழி'' இன்றைக்கு உலகப் புகழ் பெறுகின்றவர்களிலே ஒருவராக விளங்கி வருகின்றார். பெற்றவர்களுக்கு அதனால் ஏற்பட்டிருக்கின்ற மகிழ்ச்சி கொஞ்ச நஞ்சமல்ல; உங்களுக்குத் தெரியும்.

  கனிமொழி இன்றைக்கு இந்த விழாவிற்கு வந்திருக்க வேண்டும், வரவில்லை. அது, கனிமொழி பின்பற்றுகின்ற ஒரு இலக்கணம். தன்னைப் பாராட்டுகின்றவர்கள், தன்னைப் புகழ்கின்றவர்கள் அல்லது தன்னைப் பாராட்டுவதற்காக நடைபெறுகின்ற விழாக்கள் இவைகளில் கலந்து கொள்ளாமல் சமாளிப்பது, அவர்களுக்குப் போக்கு காட்டி வேறு இடத்திற்குச் சென்று விடுவது கனிமொழியினுடைய வாடிக்கை.

  ஆனால், எனக்குள்ள சங்கடம் என்னை உட்கார வைத்துக்கொண்டே, நம்முடைய கலையுலக நண்பர்கள் பாராட்டுவதும், புகழ்வதும், போற்றுவதும் - கூடுமானால் என்னைப்பற்றிய வாழ்த்துக்களை அச்சடித்துக் கொண்டே வந்து பாடுவதும் என்ற அளவிற்கு நிலைமை வளர்ந்திருக்கிறது. இதை நான் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிற அதே நேரத்தில், இந்தப் புகழையும், பெருமையும், பாராட்டுக்களையும் தாங்கிக் கொள்ள முடியாமல், தங்களுடைய கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பல பேர் தினம் தினம் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் உங்களுக்குத் தெரியும்.

  நான் அவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. காரணம், அந்த ஏச்சுக்கும், பேச்சுக்கும் எனக்குக் கிடைக்கின்ற ஆறுதலான இடமாக, இப்போது கலையுலகம் இருக்கின்ற காரணத்தால் என்னுடைய கவலையை - கலையுலகத்திலே இருக்கின்ற தம்பிமார்களையும், நண்பர்களையும், சகோதர சகோதரிகளைக் கண்டு நான் போக்கிக் கொள்கின்றேன்.

  1938-ம் ஆண்டு வாக்கில் நான் எழுத ஆரம்பித்தேன். இதுவரையிலே எழுதிக் கொண்டிருக்கின்றேன். இன்னும் என்னுடைய பேனாவிற்கு ஓய்வில்லை. எழுதிக் கொண்டேயிருக்கின்றேன். "எழுதினேன், எழுதுகிறேன், எழுதிக் கொண்டேயிருப்பேன்''.

  இந்த கலையுலகத்திற்கு என்னால் இயன்ற உதவிகளை, துணையை ஆற்றியிருக்கிறேன் என்பதை முன்னால் பேசியவர்கள் இங்கே குறிப்பிட்டார்கள். அதிலும் சிறப்பாக கலையுலகத்திலே எந்த நடிகரை இன்றைக்கு உருவாக்கியிருக்கிறோமோ, எந்த நடிகர்களையெல்லாம் இன்றைக்கு வாழ வைத்திருக்கிறோமோ, அதை விடப் பெரிய காரியமாக திரைப்படத் துறையிலே ஈடுபட்டிருக்கின்ற தொழிலாளர்களுக்கு - ஏறத்தாழ நூறு ஏக்கர் நிலம் வழங்க வேண்டுமென்று வைத்த கோரிக்கையையேற்று, அந்தக் கோரிக்கையின்படி, அந்த நிலத்தை அவர்களுக்கு வழங்கி - அங்கே அவர்கள் வீடு கட்ட அஸ்திவாரம் போடுகின்ற விழா வெகு விரைவிலே நடைபெறவிருக்கின்றது. அந்த விழாவிலே நான் கலந்து கொள்வதுதான் இந்த விழாவை விட எனக்குச் சிறப்பான விழா என்பதைத் தொழிலாளத் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  தம்பி நடிகர் விஜய் பேசும்போது குறிப்பிட்டார். நான் ஒரு குடும்பத் தலைவனாக இருந்து - அகில இந்திய அளவில் பண்டித நேரு அவர்களின் குடும்பத்தைப் போல - தமிழகத்தில் என்னுடைய குடும்பமும், நானும் அரசியலில், நாட்டு மக்களுக்கான தொண்டிலே ஈடுபட்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார். குடும்பமாக இருப்பது தான் தொல்லை.

  பல பேர் அந்த வாய்ப்பு இல்லாத காரணத்தால் - அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளாத காரணத்தால் எதற்கெடுத்தாலும், என்னைப் பற்றிப் பேச வேண்டுமென்றால் - என்னைப் பற்றிச் சாட்டுகின்ற பெரிய குற்றச்சாட்டே, நான் ஒரு குடும்பஸ்தன் என்பது தான்.

  அவர்களுக்கு அது வாய்க்கவில்லை என்பது என்னுடைய தவறல்ல. ஆனால், இந்த நல்ல நேரத்தில் அதையெல்லாம் நினைவுபடுத்த வேண்டுமா என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரியாமல் இல்லை, புரிகிறது. ஆகவே அதை நிறுத்திக் கொண்டு வாழ்க "கனிமொழி'' - "வெற்றி பெறுக கனிமொழி'' என்று குறிப்பிட்டு - இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், இயக்குநர், கதாசிரியர் அத்தனை பேரும் இந்த வெற்றியிலே பங்கு பெற்று வாழ்வார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X