twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பழைய டைட்டில்-புதுக் கட்டுப்பாடு!

    By Staff
    |

    பழைய ஹிட் படங்களின் டைட்டில்களை மறுபடியும் பயன்படுத்துவோர் அதற்கு ஈடாக பெரும் தொகையை தயாரிப்பாளர் கவுன்சிலிடம் கட்ட வேண்டும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் புது கட்டுப்பாடு விதித்துள்ளது.

    தமிழ் சினிமாவில் வழக்கமாக கதைப் பஞ்சம்தான் ஏற்படும். ஆனால் இப்போது சமீப காலமாக டைட்டில் பஞ்சமும் கூட சேர்ந்துள்ளது. நோகாமல் நொங்கு திண்பது போல டைட்டிலுக்காக கஷ்டப்படாமல், பழைய ஹிட் படங்களின் டைட்டிலை வைத்துக் கொண்டு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இதனால் பழைய ஹிட் படங்களின் தயாரிப்பாளர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். தாங்கள் கஷ்டப்பட்டு யோசித்து வைத்த டைட்டில்களை குண்டக்க மண்டக்க சுட்டு படம் எடுத்து பணம் பார்க்கிறார்கள் என்ற வேதனை ஒரு புறம் இருக்க, நல்ல பட தலைப்புகளை வைத்துக் கொண்டு குப்பையைக் கொட்டுகிறார்களே என்ற வருத்தமும் இதனுடன் சேர்ந்துள்ளது.

    சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல் படத் தலைப்பை தனுஷ் படத்திற்கு வைத்தபோது சிவாஜி ரசிகர்கள் போர்க்கொடி உயர்த்தினர். கோர்ட் வரை இந்த விவகாரம் சென்று வந்தது.

    இப்போது ரஜினி படத் தலைப்புகளுக்கு பெரிய அடிதடியே நடக்கிறது. தனுஷ் ரஜினியின் பொல்லாதவன் தலைப்பை வைத்து ஒரு படம் பண்ணினார். இப்போது படிக்காதவன், முரட்டுக்காளை உள்பட பல ரஜினி பட தலைப்புகளை பதிவு செய்து வைத்துள்ளாராம்.

    மேலும், எம்.ஜி.ஆர். படத் தலைப்புகளும் கூட ஏக டிமாண்டில் உள்ளது. எம்.ஜிஆர். நடித்த உலகம் சுற்றும் வாலிபன், தலைவன் உள்ளிட்ட பல படங்களின் தலைப்புகளை சிலர் பதிவு செய்துள்ளனராம்.

    பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை டைட்டில்களை மறு பதிவு செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அந்த டைட்டில்களை யார் வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்தலாம் என்ற விதி உள்ளதால், அதைப் பயன்படுத்தி பழைய படங்களின் டைட்டில்களை இப்போதைய தலைமுறையினர் உபயோகித்து வருகின்றனர்.

    இதுகுறித்து பழைய படங்களின் தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர் கவுன்சிலில் முறையிட, அவர்களின் கவலையிலும் அர்த்தம் உள்ளது என்பதை உணர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில் புதுக் கட்டுப்பாடு ஒன்றை கொண்டு வந்துள்ளது.

    அதன்படி பழைய ஹிட் படங்களின் தலைப்புகளைப் பயன்படுத்த விரும்புவோர் அதற்கு ஈடாக, பெரும் தொகையைக் கட்ட வேண்டும். இந்த கட்டணம், அப்படியே, பழைய படங்களின் தயாரிப்பாளர்களுக்கு இழப்பீடு போல போய்ச் சேருமாம்.

    தயாரிப்பாளர் சங்கம் தக்க சமயத்தில் எடுத்த டக்கர் முடிவு என பழைய படங்களின் நலம் விரும்பிகள் மனதார பாராட்டுகின்றனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X