twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சரோஜா தேவி, நயன்தாராவுக்கு பாராட்டு!

    By Staff
    |

    Vedivelu, KS Ravikumar, Saroja Devi, Nayanatara, Surya and Udhayanidhi Stalin
    தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற நடிகைகள் சரோஜா தேவி, நயன்தாரா ஆகியோருக்கு ஆதவன் படப்பிடிப்புக் குழுவினர் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    இரு தினங்களுக்கு முன்புதான் உலகின் மிக உயரிய திரை விருதான ஆஸ்கர் விருதினை ஒன்றுக்கு இரண்டாகப பெற்று சாதனைப் படைத்தார் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான். அவரை வரவேற்றுக் கொண்டாட திரையுலகமே பரபரப்பாகத் தயாராகி வருகிறது.

    இன்னொரு பக்கம், தமிழ்நாடு அரசும் தன் பங்குக்கு கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது. இன்னும் சில தினங்களில் தேசிய திரைப்பட விருதுகளும் அறிவிக்கப்பட உள்ளன.

    கலைமாமணி விருதுகள் பெறப்போகும் கலைஞர்களுக்கு திரைத்துறையினர் உற்சாகமாக வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    கலைமாணி விருதுக்கு தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள் பழம்பெரும் நடிகை பி.சரோஜா தேவி மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோருக்கு ஆதவன் படப்பிடிப்புக் குழுவினர் நேற்று பூச்செண்டுகள் கொடுத்து மரியாதை செய்தனர்.

    உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இரண்டாவது படம் இந்த ஆதவன். கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். நயன்தாரா ஜோடி. சரோஜா தேவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    விருதுகள் அறிவிக்கப்பட்ட செய்தி அறிந்ததும், படப்பிடிப்புத் தளத்திலேயே சரோஜாதேவிக்கும், நயன்தாராவுக்கும் சிறப்பு செய்யப்பட்டது. தயாரிப்பாளர் உதயநிதி மற்றும் படத்தின் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், நாயகன் சூர்யா மற்றும் காமெடி நாயகன் வடிவேலு ஆகியேர் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

    அழகு மகன் கமல்ஹாசன்..

    வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த சரோஜாதேவி இப்படிக் கூறினார்:

    எனக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டிருக்கும் தகவலை என் அழகான மகன் கமல்ஹாசன்தான் முதலில் சொன்னார். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதற்காக தமிழ் மக்களுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், திரைத்துறை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி. இந்த விருதை தமிழ் மக்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் என்றார் சரோஜா தேவி.

    உற்சாகம் தரும் விருது - நயன், அசின்

    நயன்தாரா:

    தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைப்பது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் உழைக்க வேண்டும் என்ற உற்சாகத்தை அளிக்கிறது.

    இந்த விருதை வழங்கும் தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்களுக்கும், ரசிகர்-ரசிகைகளுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டு இருக்கிறேன், என்றார் நயன்தாரா.

    இவர்களைத் தவிர, கலைமாமணி விருதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அசின், சுந்தர் சி, பரத் போன்ற பிற கலைஞர்களும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது:

    அசின்:

    'கலைமாமணி விருதை மிக உயர்ந்த விருதாக கருதுகிறேன். என் நடிப்பை பாராட்டியும், கவுரவித்தும் தமிழக அரசு இந்த விருதை வழங்கியிருப்பது, எனக்குள் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    என் போன்ற திரை கலைஞர்களுக்கு இது, உற்சாக டானிக். இந்த பாராட்டும், கவுரவமும் எனக்குள் மேலும் சிறப்பாக உழைக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விருது கிடைப்பதற்கு காரணமாக இருந்த தமிழ் ரசிகர்களுக்கு நான் என்றென்றும் நன்றிக்குரியவளாக இருப்பேன்', என்றார் அசின்.

    பரத்:

    'உலகின் மிகப்பெரிய ஆஸ்கார் விருதை ஏ.ஆர்.ரகுமான் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இந்த நேரத்தில், என் பெயர் கலைமாமணி விருதுக்காக அறிவிக்கப்பட்டிருப்பது, இரட்டிப்பு சந்தோஷத்தை அளிக்கிறது.

    முதல்-அமைச்சருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், எனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி,' என்று பரத் தெரிவித்துள்ளார்.

    சுந்தர் சி.

    நான், 'முரட்டுக்காளை' படப்பிடிப்புக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பே குற்றாலம் வந்துவிட்டேன். இங்கே பயங்கர வெயில் கொளுத்துகிறது. 'கலைமாமணி' விருது அறிவிப்பை கேள்விப்பட்டதும், இந்த இடமே ஜில்லென்றாகிவிட்டது.

    எத்தனை கோடி பணம் சம்பாதித்தாலும் கிடைக்காத மகிழ்ச்சியை, இதுபோன்ற விருதுகள் மூலம் கிடைக்கிறது. ஒரு தாய் தன் குழந்தைக்கு எப்போது எதை கொடுக்க வேண்டும் என்று தெரியும். அதேபோல் தாயுள்ளத்துடன் முதல்-அமைச்சர் எனக்கு இந்த விருதை வழங்குவதாக கருதுகிறேன். கலைமாமணி விருது எனக்கு ஊக்கத்தையும், பொறுப்புணர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது, என்று சுந்தர் தெரிவித்துள்ளார்.

    அபிராமி ராமநாதன்:

    'அடிப்படையில் நான் ஒரு எஞ்சினியர். ஆனால் அந்தத் தொழிலை விட்டுவிட்டு, கலைத்துறைக்கு வந்துவிட்டேன். இந்தியாவிலேயே முதல் முறையாக டி.டி.எஸ். தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது, கம்ப்ட்டர் டிக்கெட்டிங் அறிமுகப்படுத்தியது, டிக்கெட்டுகள் வீடு தேடி வரும் முறையை அறிமுகப்படுத்தியது, பல சங்கங்களில் பல பதவிகளை வகித்து திரைத்துறைக்கு சேவை செய்தது ஆகியவற்றுக்காக எனக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக கருதுகிறேன்.

    என்னுடைய 33 ஆண்டுகளாக கலைக்கு செய்த சேவையின் பயனை இன்றுதான் அடைந்தேன். முதல்வர் கலைஞருக்கு நன்றி, என்றார் அபிராமி ராமநாதன்.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:

    'பரத நாட்டியத்துக்காக எனக்கு இநத விருதினைக் கொடுத்துள்ளனர். அந்தக் கலையை மேலும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல மிகப் பெரிய ஊக்கம் தருவதாக உள்ளது இந்த விருது. இந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த தமிழக அரசுகக்கும், முதல்வர் அவர்களுக்கும் நன்றி', என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X