For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ரஜினி டயலாக்... மோகன்பாபு தமாஷ்

  By Staff
  |

  Mohan Babu with Charmi
  ரஜினிகாந்த் என் மிகச் சிறந்த நண்பன். நிஜ வாழ்க்கையில் நான் பேசும் டயலாக்குகளைத்தான் தனது படங்களில் அவர் பயன்படுத்துகிறார் என்று கூறியுள்ளார் தெலுங்கு நடிகர் மோகன்பாபு.

  மோகன்பாபுவின் இளைய மகன் மஞ்சு மனோஜ் குமார் நாயகனாக அறிமுகமாகும் படம் 'என்னைத் தெரியுமா?' இந்தப் படத்தை மோகன்பாபுவின் லட்சுமி பிரசன்னா மூவீஸ் தயாரிக்கிறது. ரியாசென், ஸ்னேகா உல்லல் நாயகிகளாக நடிக்கும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகிறது.

  மனோஜை நாயகனாக அறிமுகப்படுத்தும் விழாவும், படத்தின் ஆடியோ வெளியீடும் சென்னை பார்க் ஷெராட்டன் ஓட்டலில் நடந்தது.

  இயக்குநர் பி.வாசு, நடிகர் பிரபு, சத்யபாபமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் ஆகியோர் மனோஜை அறிமுகப்படுத்தினர். பின்னர் முதல் ஆடியோ சிடியை இயக்குநர் வாசுவின் தந்தையும் பழம்பெரும் மேக்கப் கலைஞருமான பீதாம்பரம் வெளியிட பிரபு பெற்றுக் கொண்டார்.

  பின்னர் மோகன்பாபு பேசியதாவது:

  தமிழ்நாட்டை நான் எப்போதும் மறக்க முடியாது. எனக்கு தாய்ப்பால் கொடுத்தது இந்த மண்தான். கலைக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என எந்த பேதமும் இல்லை எனப் புரிய வைத்தவர்கள் தமிழ் மக்கள்தான். இந்த உணர்வு எல்லாருக்கும் இருந்தால் நம் சினிமா உலகம் எவ்வளவு சிறப்பாக இருக்கும்?

  இந்த சென்னையில்தான் நான் படித்தேன். இதே சென்னையின் பிளாட்பாரங்களில்தான் நானும் ரஜினியும் ஒன்றாக அலைந்திருக்கிறோம், வாய்ப்புகளுக்காக. என் சினிமா வாழ்க்கை ஆரம்பித்ததும் இங்குதான்.

  அண்ணன் ஒரு கோயில் படத்தில் சிவாஜிக்கு வில்லனாக நடித்தேன். பின்னர் ரஜினிக்கும் வில்லனாக நடித்தேன்.

  அந்த நாட்களில் வில்லன் ஹீரோவை திருப்பி அடிக்க முடியாது. அப்போது நான் சிவாஜியிடம், நீங்களே எப்பவும் அடிக்கிறீங்களே... ஹீரோவை வில்லன் ஒரு முறையாவது திருப்பி அடிச்சாதானே நல்லாருக்கும் என்றேன்.

  என்னை அடிக்கணுமாடா உனக்கு... என கர்ஜித்தவர், தன் அடுத்த படத்தில் அதற்கான வாய்ப்பு தந்தார். ஆனால் கடைசியில் அந்தக் காட்சிகளைத் தூக்கி விட்டார்கள் என்பது வேறு. ஆனால் அந்த மனிதரின் பெருந்தன்மையை எண்ணிப்பாருங்கள்.

  முன்பின் தெரியாத ஒரு நபர் ஹைதராபாத்தில் ஒரு நயா பைசா கடனாகப் பெற முடியாது. அதுவும் சினிமாக்காரனுக்கு ஒருத்தரும் உதவ மாட்டார்கள். ஆனால் இந்த தமிழ்நாட்டில், நானும் ரஜினியும் வாய்ப்புக்காக அலைந்த நாட்களில் எத்தனையோ முறை எங்களுக்கு பணமும் உணவுப் பொருளும் கொடுத்து உதவியவர்கள் தமிழ் மக்கள்.

  என் மகனை அறிமுகம் செய்வதற்காக இதை இங்கே பேசுவதாக நினைக்காதீர்கள். ஆந்திராவிலும் இதையேதான் சொன்னேன்.

  போங்கடா... போய் தமிழ் மக்கள்கிட்ட நல்ல பண்பு, உதவும் குணம், ரசனைன்னா என்னன்னு கத்துக்கங்கடா... நீங்களும் பெரிய அளவுக்கு வருவீங்கன்னு எத்தனையோ சினிமா விழாக்களில், பொது மேடைகளில் பேசினவன்தான் நான். என்னை அதற்காக யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது. ஏன்னா நான் உண்மை பேசறேன்

  வாழ்க்கை ஒரு தேவாலயம் அல்ல... அது போர்க்களம்னு நான் அடிக்கடி சொல்லுவேன். அதைத்தான் ரஜினி தன் படத்துல டயலாக்கா வச்சார். இப்படி அடிக்கடி என் டயலாக்கை எடுத்து வச்சிடுவார் அவர். அது பெரிய ஹிட்டாயிடும். ...சும்மா தமாசுக்கு சொல்றேன். ரஜினி என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த சிறந்த நண்பன். மிகச் சிறந்த ஆத்மா.

  நடிகனா இருந்தேன், அரசியலுக்கு வந்தேன். இப்போ அரசியல் ஒரு சாக்கடை எனத் தெரிந்துவிட்டது. அதனால் நல்ல கல்வியை நாட்டுக்குத் தரும் வேலையில் நிம்மதியா இறங்கியிருக்கேன் என்றார் மோகன் பாபு.

  இந்தப் படத்தில் அறிமுகமாகும் மனோஜ்குமார் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். கல்விப் படிப்பையும் இங்குதான் முடித்தார். சிம்புவின் வகுப்புத் தோழர். அந்த நட்பில் இந்தப் படத்தில் இரு பாடல்களைப் பாடியிருக்கிறார் சிம்பு.

  மோகன்பாபுவின் முதல் மகன் விஷ்ணு தெலுங்கில் முன்னணி நாயகன். விரைவில் அவரும் தமிழுக்கு வருகிறார்.

  இந்த விழாவில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், அமீர் பங்கேற்றுப் பேசினர்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X