twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கர்நாடகத்தில் குசேலனுக்கு க்ரீன் சிக்னல்!!

    By Staff
    |

    Rajini
    ஒருவழியாக கர்நாடகத்தில் குசேலன் திரைப்படத்தை எவ்வித பிரச்சினையும் இல்லாமல் வெளியிட கர்நாடக பிலிம்சேம்பர் அனுமதியளித்துள்ளது.

    ஆனாலும் பெங்களூர் நகரில் மட்டும் 13 திரையரங்குகளில் 10 பிரிண்டுகள் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற ஒரு நிபந்தனையோடு இந்த அனுமதியை வழங்கியுள்ளது கர்நாடக பிலிம்சேம்பர்.

    ஒகேனக்கல் பிரச்சினையில் தமிழகத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததோடு, இந்தப் பிரச்சினையை கர்நாடகத் தலைவர்கள் அரசியலாக்குகிறார்கள் என கண்டித்துப் பேசினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

    இதனால் ஆத்திரமடைந்த கன்னட ரக்ஷன வேதிகே தலைவர் வாட்டாள் நாகராஜ், ரஜினியின் படங்களை இனி கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என ஆர்ப்பாட்டம் நடத்தினார். ரஜினியோ, என் படம் கர்நாடகாவில் வெளியாகாவிட்டால் எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை, என்று பதிலுக்குக் கூறி அமைதியாகிவிட்டார்.

    இதைத் தொடர்ந்து ரஜினியின் சமீபத்திய படமான குசேலன் கர்நாடகாவில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது.

    கர்நாடகத் திரயுலகில் உள்ள ரஜினியின் நெருங்கிய நண்பர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண தீவிர முயற்சி மேற்கெண்டனர். கர்நாடக பிலிம்சேம்பர் தலைவர் நடிகை ஜெயமாலாவும் இதற்கான முயற்சிகளில் இறங்கினார்.

    கன்னட மக்களையும், அரசியல்வாதிகளையும் இழிவாகப் பேசிய ரஜினி வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டால் மட்டுமே படத்தை வெளியிட அனுமதிப்போம் என வாட்டாள் நாகராஜ் கூறிவிட்டார். ஆனால் ரஜினி கடைசி வரை மன்னிப்புக் கேட்க முடியாது எனக் கூறிவிட்டார்.

    இதைத் தொடர்ந்து நிலைமையைப் பரிசீலித்த பிலிம்சேம்பர், கன்னட ரக்ஷன வேதிகேவால் படத்துக்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்வதாகவும், பெங்களூரில் 13 திரையரங்குகளில் 10 பிரிண்டுகள் வரை குசேலனைத் திரையிடலாம் என்றும் பச்சைக் கொடி காட்டியுள்ளது.

    இதுகுறித்து ஜெயமாலா கூறியதாவது:

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு மிகப்பெரிய நடிகர். அவரை மன்னிப்புக் கேட்கச் சொல்வது தேவையற்றது. அவர் கேட்கவும் மாட்டார். கன்னட திரைப்படத்துறைக்கு ரஜினி செய்துள்ள உதவிகளையும் நாங்கள் மறந்துவிடவில்லை.

    அவரால் இந்த அமைப்பின் எத்தனையோ உறுப்பினர்கள் நல்ல நிலைக்கு வந்திருக்கிறார்கள். இப்போது குசேலன் படத்தை வாங்கியிருப்பவரும் இந்த பிலிம்சேம்பர் உறுப்பினர்தான்.

    தென்மாநில மொழிகளுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் விதத்தில், தன்னுடைய தமிழ்ப் படத்தில் கன்னடத் திரையுலகின் தந்தை எங்கள் ராஜ்குமார் பெயர் மற்றும் படத்தைக் காட்டியுள்ளார் சூப்பர்ஸ்டார். நான்கு மாநிலங்களின் திரையுலக மேதைகளையும் கவுரவப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டுள்ள அவரைப் போய் மன்னிப்புக் கேட்கச் சொல்லி அவமானப்படுத்த முடியுமா? என்றார்.

    இந்தப் படத்தின் கர்நாடக உரிமையை ரூ.1.90 கோடி கொடுத்து வாங்கியுள்ள நிரஞ்சன் கூறுகையில், ரஜினி படங்களுக்கு யாராலும் தடை போட முடியாது. அவரால் கன்னடத் திரையுலகுக்கே பெருமைதான். அவர் தவறாக எதையும் கூறிவிடவில்லை.

    மேலும், இப்படத்தின் தயாரிப்பாளர் பாலச்சந்தர், கன்னடத் திரையுலகுக்கு ஆற்றிய பணி சாதாரணமானதல்ல. இப்படத்தின் இயக்குநர் வாசு எங்களில் ஒருவர். எனவே இந்தப் படத்தை எந்தத் தடையும், பிரச்சினையுமில்லாமல் கர்நாடகா முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். பெங்களூரில் மட்டும் 10 பிரிண்டுகள், 13 தியேட்டர்களில் வெளியாகிறது. மற்ற பகுதிகளின் விவரங்களை பின்னர் தெரிவிப்போம் என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X