twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கிரகலட்சுமியின் வரதட்சணை கொடுமை புகார் பொய்-போலீஸ்

    By Staff
    |

    Grahalakshmi
    சென்னை: நடிகர் பிரஷாந்த் மீது அவரது மனைவி கிரகலட்சுமி கொடுத்த வரதட்சணைக் கொடுமை உள்ளிட்ட புகார்கள் போலியானவை, ஆதாரமற்றவை என காவல்துறை விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 750 பக்கங்ளைக் கொண்ட இந்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    பிரசவத்திற்காக தனது தாய் வீட்டுக்குச் சென்ற பிரஷாந்த்தின் மனைவி கிரகலட்சுமி, மீண்டும் பிரஷாந்த் வீட்டுக்கு திரும்பவில்லை. இதையடுத்து தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினார் பிரஷாந்த்.

    இதுதொடர்பான வழக்கு நடந்து வந்த நிலையில், கிரகலட்சுமிக்கும், வேணுபிரசாத் என்பவருக்கும் ஏற்கனவே கல்யாணமான விஷயம் பிரஷாந்த்துக்குத் தெரிய வந்தது. இதையடுத்து தனக்கும், கிரகலட்சுமிக்கும் இடையே நடந்த திருமணத்தை ரத்து செய்யக் கோரி பிரஷாந்த் வழக்கு தொடர்ந்தார்.

    இதையடுத்து சென்னை வரதட்சணை கொடுமை தடுப்புப் பிரிவு போலீஸில் கிரகலட்சுமி ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்டோர் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் கூறியிருந்தார்.

    இந்தப் புகாரை உதவி ஆணையர் முத்தமிழ் மணி தலைமையிலான போலீஸார் கடந்த ஒரு வருடமாக விசாரித்து வந்தனர். இதையடுத்து 750 பக்கங்களைக் கொண்ட விரிவான விசாரணை அறிக்கையை சைதாப்பேட்டை 17வது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

    அதில் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுவதாவது:

    பிரஷாந்த்தின் தந்தை தியாகராஜனும், அவரது மனைவியும் ரூ. 8 கோடி வரதட்சணை பணம் கேட்டு தனி அறையில் அடைத்து வைத்தனர். பிரஷாந்த்தின் தாயார் சாந்தி கார் வாங்கி வர சொன்னார். எனது வீட்டில் உள்ளவர்களுடன் பேச பிரஷாந்த் அனுமதிக்கவில்லை. அசைவம் சாப்பிட வற்புறுத்தினர்.

    மலேசியாவில் எல்.சி.டி. டி.வி. வாங்கி கேட்டனர். கர்ப்பமாக இருந்த போது வீட்டை விட்டு விரட்டி விட்டனர். என்னை வீட்டிலேயே வைத்திருந்தனர். வெளியில் எங்கும் அழைத்து செல்வதில்லை.

    அவர்கள் வீட்டு கழிவறை மிகவும் அசிங்கமாக இருக்கும். அதை சுத்தம் செய்ய கூறினர். எனது வீட்டு நபர்களை பார்க்க அனுமதிக்கவில்லை என்பது உள்ளிட்ட புகார்களைக் கூறியிருந்தார் கிரகலட்சுமி.

    இந்தப் புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டது. முதலில், பிரஷாந்திற்கும், கிரகலட்சுமிக்கும் திருமணம் பேசி முடித்த டாக்டர் ரங்கபாஷ்யம் என்பவரிடம் இருந்து விசாரணை தொடங்கப்பட்டது. ரங்கபாஷ்யம், கிரகலட்சுமியின் நெருங்கிய உறவினர் ஆவார்.

    விசாரணையின்போது, தியாகராஜன் எப்போதும், வரதட்சணை பற்றியோ, பெண்ணின் சொத்துக்கள் பற்றியோ கேட்கவில்லை என்று உறுதியாக தெரிவித்தார் ரங்கபாஷ்யம்.

    அடுத்து, கருத்து வேறுபாடு காரணமாக கோர்ட்டில் வழக்கு நடக்கும் போது கூட பிரஷாந்த் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டதாக கிரகலட்சுமியோ, அவரது தந்தை தனசேகரோ கோர்ட்டில் தெரிவிக்க வில்லை என்பதை வக்கீல் நளினி சிதம்பரம் மூலம் உறுதி செய்தோம்.

    பிறகு விஜி என்பவர் ஏற்பாடு செய்த சமாதான கூட்டத்தில் பங்கேற்ற போதும் கிரகலட்சுமி வரதட்சணை கொடுமை செய்ததாக புகார் கூறவில்லை என்பதை கண்டு பிடித்தோம்.

    திருப்பம் தந்த தாயாரின் வாக்குமூலம்:

    அதிகமாக வரதட்சணை கேட்டதால் கிரகலட்சுமிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட 2 திருமணம் நின்றதாகவும், பிரஷாந்த் குடும்பத்தினர் வரதட்சணை பற்றி பேசாததால் அவருடன் கிரகலட்சுமிக்கு திருமணம் நடந்ததாகவும் கிரகலட்சுமியின் தாயார் சிவகாமசுந்தரியே கூறினார். இது மிகவும் முக்கியமான சாட்சியமாக மாறியது.

    சொத்தைப் பிரித்து எடுத்து வர சொன்னதற்கும் ரூ. 8 கோடி கேட்டதாக கூறப்பட்டதற்கும் எந்தவித ஆதாரமும் இல்லை. கார் கேட்டதாக கூறப்பட்டதில் யார்- யாரிடம், யார் மூலமாக கேட்டார் என்பதை கிரகலட்சுமி குடும்பத்தினர் சொல்ல மறுத்து விட்டனர்.

    தங்களது புகார்கள் தொடர்பாக கிரகலட்சுமி, தந்தை தனசேகர், தாய் சிவகாமசுந்தரி, அண்ணன் பொன்குமார் ஆகியோர் முன்னுக்குபின் முரணான தகவல் கொடுத்து குழப்பினர்.

    பச்சமலை என்ற பகுதிக்கு ஷூட்டிங் செல்லும் போது மனைவியின் விருப்பத்திற்கேற்ப பிரஷாந்த் அவரை அழைத்து சென்றுள்ளார். ஜாம்பவான் பட பூஜைக்காக திருப்பதி அழைத்து சென்றுள்ளார். மலேசியா சென்று வந்துள்ளனர். எனவே வெளியில் கூட்டி செல்லவில்லை என கூறியது பொய் என நிரூபணமானது.

    ரூ. 10,000க்கு போனில் பேசினார்:

    தனது வீட்டில் உள்ளவர்களிடம் போனில் பேச விடவில்லை என கிரகலட்சுமி கூறியிருந்தார். ஆனால் அவர் பிரஷாந்த் வீட்டில் இருந்த 5 மாதத்தில் ரூ. 10 ஆயிரம் அளவிற்கு தனது வீட்டிற்கும் நண்பர்களுக்கும் பேசி உள்ளார். அதற்கு செல்போன் பில் ஆதாரம் உள்ளது.

    தனி அறையில் அடைத்து யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை என கூறியிருந்தார். ஆனால் கிரகலட்சுமியின் அண்ணன் பொன்குமார் தினந்தோறும் தனது மனைவியுடன் பிரஷாந்த் வீட்டிற்கு சென்று கிரகலட்சுமியை சந்தித்து வந்துள்ளார். அதற்கு காவலாளி அம்புரோஸ் என்பவர் சாட்சியாக உள்ளார். அறையில் அடைத்து வைத்ததாக கூறியதும் பொய்யானது.

    ரூ. 7 லட்சத்துக்கு உள்ளாடைகள் வாங்கினார்:

    பிரஷாந்த் தனக்கு எந்த செலவும் செய்ததில்லை, பரிசு பொருட்கள் தந்ததில்லை என கூறியிருந்தார். அவர் கிரகலட்சுமிக்கு டைமண்ட் நெக்லஸ், பட்டு புடவை உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசு பொருட்கள் வழங்கியதற்கான போட்டோ ஆதாரத்தை கைப்பற்றியுள்ளோம்.

    அவர் மலேசியா அழைத்து சென்ற போது மனைவியின் செலவுக்காக ரூ. 7 லட்சம் வழங்கியுள்ளார். கிரகலட்சுமி அங்குள்ள உள்ளாடைகள் விற்பனையகத்துக்கு சென்று ரூ. 7 லட்சத்திற்கு, 3 பை நிறைய ஆடைகளை வாங்கி குவித்துள்ளார்.

    கழிவறையை சுத்தம் செய்ய கூறியதும் பொய்யானது. காரணம் அவர் வீட்டில் 6 கழிவறைகள் உள்ளன. அதை கவிதா என்ற சுவீப்பர் ஒப்பந்த அடிப்படையில் சுத்தம் செய்து வருவது தெரியவந்துள்ளது.

    கிரகலட்சுமி கர்ப்பமானதும் டாக்டர் ரேகா பரேல் என்பவர் சோதித்து பார்த்து கிரகலட்சுமி உடல் பலவீனமாக இருப்பதால், சில காலத்திற்கு இருவரும் உடல்ரீதியாக சேராமல் இருப்பது குழந்தைக்கு நல்லது என கூறியதால் கிரகலட்சுமி தாய் வீட்டிற்கு சென்றதும் பிரஷாந்த் 10 நாட்கள் வெளியூர் ஷூட்டிங் சென்றதும் தெரிய வந்துள்ளது. எனவே அவரை யாரும் வீட்டை விட்டு விரட்டவில்லை.

    அனைத்துப் புகார்களும் போலியானவை:

    இப்படி வரதட்சணை கொடுமை புகாரில் கிரகலட்சுமி கூறிய அனைத்து தகவல்களும் போலியானது. பிரஷாந்த் குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிக்க ஜோடிக்கப்பட்டவை என தெரிய வந்துள்ளது.

    எனவே கிரகலட்சுமியின் புகார் பொய்யானது என கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளோம் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பிரஷாந்த்தின் வக்கீல் அனந்தன் கூறுகையில், கிரகலட்சுமி, பிரஷாந்த் மற்றும் குடும்பத்தினர் கூறிய அனைத்துப் புகார்களும் பொய்யானவை என்று நாங்கள் பலமுறை கூறியுள்ளோம். இப்போது போலீஸ் விசாரணை அறிக்கையில் நாங்கள் சொன்னது உண்மைதான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    பொய் புகார் கொடுத்த கிரகலட்சுமியை சட்டப்படி சந்திப்போம் என்றார்.

    காவல்துறையின் இந்த விசாரணை அறிக்கையால் கிரகலட்சுமி - பிரஷாந்த் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X