twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்ஜிஆர் மனசு, சிவாஜி நடிப்பு - அது தான் கமல்: சரோஜா தேவி

    By Staff
    |

    Kamal Haasan
    சென்னை: எம்ஜிஆரின் நல்ல குணம் மற்றும் சிவாஜியின் நடிப்பு ஆகியவற்றை ஒருங்கே இணைய பெற்றவர் கமல் மட்டும் தான். அவரை ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து வாழ்த்துகிறேன் என நடிகை சரோஜா தேவி தெரிவி்த்துள்ளார்.

    உலக நாயகன் கமலஹாசன் திரையுலக வாழ்க்கையை துவக்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து தனியார் தொலைக்காட்சி சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

    சென்னை நேரு உள்ளரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவகுமார், பிரபு, இசையமைப்பாளர் இளையராஜா, தயாரிப்பாளர்கள் ஏவிஎம் சரவணன், இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், எஸ்பி முத்துராமன், கே விஸ்வநாத், மாதவன், அர்ஜூன், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விவேக் ஆகியோர் கலந்து கொண்டு கமலை வாழ்த்தி பேசினர்.

    கமலுடன் நடித்த நடிகைகள் ஜெயசித்ரா, ராதிகா, கவுதமி, ஊர்வசி, ரோகிணி, மீனா, ரேவதி ஆகியோரும் பேசினார்கள்.

    இவர்களை தவிர மலையாள நடிகர்கள் மோகன் லால், மம்முட்டி, ஜெயராம், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ் தென்னிந்திய மெகா ஸ்டார்கள் அனைவரும் வந்திருந்தனர்.

    பின்னணி பாடகர்கள் எஸ்பி பாலசுப்பிரமணியம், ஹரிஹரன், கமல் மகள் சுருதி ஆகியோர் மேடையில் கமல் நடித்த படத்தில் இருந்து சில பாடல்களை பாடினர்.

    விழாவில் நடிகை சரோஜா தேவி பேசுகையில்,

    அழகான என் மகன் கமல். மிடுக்கான தோற்றம் கொண்ட ஒரு ஹீரோ. அவர் நடித்த குணா படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    எங்களை போன்ற நடிகைகள் எல்லாம் மேக்கப் போட்டுக்கொண்டு முகத்தை அழகாக்கி கொள்வோம். ஆனால் அழகான கமல் மேக்கப் போட்டு, இருக்கிற அழகையும் கெடுத்துக் கொண்டு நடித்த படம் குணா. அதேபோல் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்த அப்பு கேரக்டரும் ரொம்ப பிடிக்கும்.

    பார்த்தால் பசி தீரும் படத்தில் நான் சிறுவனாக பார்த்த கமல் இப்போது தன் நடிப்பால் எங்கேயோ போய்விட்டார். ஆனால் இன்றும் அதே குணத்துடன் இருக்கிறார். அவருக்கு நடிப்பு புதிது அல்ல. அது அவரின் உடல் மற்றும் மனசோடு கலந்துவிட்டது.

    கமல் சிறுவனாக இருக்கும் போது நடிகர் திலகத்துடன் நடித்த போது, அவரது நடிப்பு கமலுக்கும் வந்தது. என் அன்பு தெய்வம் எம்ஜிஆருடன் நடித்தபோது அவருடைய நல்லா குணம் வந்தது.

    அவர் எப்போதும் சந்தோஷமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ஒரு தாய் ஸ்தானத்தில் ஆண்டவனை வேண்டுகிறேன். அவரது வீட்டில் இருப்பவர்கள் அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து நல்லா பார்த்துக்கணும் என கேட்டு கொள்கிறேன் என்றார்.

    எல்டாம்ஸ் சாலைக்கு கமல் பெயர்...

    நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் பேசுகையில்,

    ஜக்குபாய் ஆடியோ வெளியிட்டு விழாவில் முதல்வர் கலைஞரிடம், கமல் வசித்து வரும் சென்னை எல்டாம்ஸ் சாலைக்கு கமலஹாசன் சாலை என்ற பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். கலையை, கலைஞர்களை மதிக்கும் முதல்வர் அந்த கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

    பிரமிக்க வைத்தவர்-பாலசந்தர்...

    இயக்குனர் திலகம் கே பாலச்சந்தர் பேசுகையில்,

    கமலுக்கு நடிப்பில் நான் குரு என்று சொல்கிறார்கள். நான் என்றில்லை ஒரு குப்பன், சுப்பன் இயக்குனர் என்றாலும் கமல் இந்த அளவுக்கு நிச்சயம் வந்திருப்பார்.

    அரங்கேற்றம் படத்தில் அவரை நடிக்க வைத்தபோது நான் சொல்லிக் கொடுத்ததையும் தாண்டி புது விஷயங்களை நடிப்பில் சேர்த்துக் கொண்டு என்னை பிரமிக்க வைத்தவர் அவர்.

    அப்போதே இந்த ஆளிடம் சரக்கு இருக்கிறது. அது மிகப்பெரிய விலைக்கு போகும் என்பதை உணர்ந்து கொண்டேன். அவர் மேலும் பல சிகரங்களை தொடுவார் என்பது நிச்சயம் என்றார்.

    தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் ராம நாராயணன் பேசுகையில், இந்த விழா நடந்து கொண்டிருக்கும் போது தமிழக அரசின் 2008ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதை தசாவதாரம் படத்துக்காக கமலஹாசன் பெற்றிருக்கிறார் என்ற நல்ல செய்தி வந்திருக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X