twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேர்தல் 2011: கழகங்களுக்கு ஆதரவாகக் களமிறங்கும் நடிகர்கள்!

    By Shankar
    |

    சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஜூரம் அரசியல் கட்சிகளோடு நிற்கவில்லை. திரைப்படக் கலைஞர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது.

    திமுக மற்றும் அதிமுகவுக்கு ஆதரவாகக் களமிறங்கி தேர்தல் பிரச்சாரம் செய்ய பெரும் நட்சத்திரப் பட்டாளமே தயாராகி வருகிறது.

    இந்த வாரத்திலிருந்து தேர்தல் களம் விறுவிறுப்பாகி வருகிறது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடுகளில் முனைப்பாகி உள்ளன. தி.மு.க., அ.தி.மு.க. இடையே இருமுனைப் போட்டி உறுதியாகி உள்ளது. இவ்விரு கட்சிகளோடு பிற கட்சிகள் கூட்டு வைக்க தயாராகின்றன.

    இன்னொரு புறம் பிரசார வியூகம் வகுத்தலும் மும்முரமாய் நடக்கிறது. மக்களைத் திரட்ட நடிகர், நடிகைகள் பிரசாரத்தில் இறக்கி விடப்படுகின்றனர். இதற்காக பிரபல நடிகர், நடிகைகளுக்கு கட்சிகள் வலைவிரித்துள்ளனர்.

    ஏற்கனவே தி.மு.க., அ.தி.மு.க.வில் நடிகர், நடிகைகள் பலர் உள்ளனர். அவர்கள் பிரசார சுற்றுப்பயணத்துக்கு தயார் ஆகிறார்கள். தி.மு.க.வுக்கு ஆதரவாக நெப்போலியன், நடிகை குஷ்பு, வாகை சந்திரசேகர், பாக்யராஜ் உள்ளிட்டோர் கிராமம் கிராமமாக பிரசாரம் செய்ய உள்ளனர். நெப்போலியன் தி.மு.க. வில் மத்திய அமைச்சராக உள்ளார். இவர் மேடைகளில் பாட்டுப்பாடி உரையாற்றுவது படு பிரபலம். பாக்யராஜ் தன் பாணியில் குட்டிக் கதைகள் சொல்லி அசத்திவிடுவார்.

    குஷ்புவுக்கு இது முதல் தேர்தல் பிரசாரம் திராவிட இயக்க வரலாற்று புத்தகங்கள் படித்தும் தற்போதைய அரசியல் நிலவரங்களை ஆய்வு செய்தும் கூட்டங்களில் பேச தன்னை தயார்படுத்திக் கொண்டு உள்ளார். இதற்காக தனி பயிற்சியும் எடுத்துள்ளாராம்.

    அ.தி.மு.க.வுக்காக ராதாரவி, ராமராஜன், ஆனந்தராஜ், குண்டு கல்யாணம், வில்லன் நடிகர் பொன்னம்பலம், சூர்யகாந்த், திரைப்பட இயக்குனர் லியாகத் அலிகான், நாஞ்சில் பி.சி. அன்பழகன், நடிகை சி.ஆர். சரஸ்வதி ஆகியோர் பிரசாரத்தில் குதிக்கின்றனர். பொன்னம்பலம் இரு தினங்களுக்கு முன் அ.தி.மு.க.வில் இணைந்தார். விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்றுவரும் ராமராஜன் உடல்நலம் தேறியதும் பிரச்சாரத்தில் குதிக்கிறார்.

    கடந்த தேர்தலில் நடிகைகள் சிம்ரன், விந்தியா, கோவை சரளா, நடிகர் செந்தில் போன்றோர் அ.தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்தனர். தற்போது அவர்கள் ஒதுங்கியுள்ளனர். இந்த தேர்தலிலும் அவர்களை பிரசாரத்தில் இறக்க அ.தி.மு.க. தரப்பில் முயற்சிகள் நடக்கிறது.

    நடிகர், நடிகைகளுக்காக தேர்தல் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலை இரு கட்சிகளும் தயார் செய்து வருகின்றனர். இவர்களுக்காக விசேஷ வேன்களும் தயாராகின்றன. பிரசாரத்துக்கு வசதியாக இரு மாதங்கள் படப்பிடிப்புகளை ரத்து செய்ய இவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இயக்குநர் சீமான் போன்ற ஈழ ஆதரவு திரைப் பிரமுகர்களும் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்க உள்ளனர்.

    இவர்களைத் தவிர, விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் என தனிக்கட்சி வைத்திருக்கும் நடிகர்களும் ஏதாவது ஒரு கழகத்துக்கு ஆதரவாகத்தான் களமிறங்கப் போகிறார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், தேர்தல் நேரத்தில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் நட்சத்திரமயமாக காட்சியளிக்கும் நிலை உருவாகியுள்ளது.

    English summary
    Political parties in Tamil Nadu gearing up to face the election. Both DMK and AIADMK busy in booking popular actors and actresses for their campaigns.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X