twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொலை மிரட்டல்: கான்களின் பின்னால் அணிவகுக்கும் பாலிவுட்!

    By Staff
    |

    Shah Rukh Khan with Priyanka Chopra
    தீவிரவாதிகளின் மிரட்டலுக்குள்ளாகியுள்ள இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த நடிகர்களான ஷாரூக்கான், சல்மான் கான், ஆமிர் கான் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோர் பின்னால் ஒட்டுமொத்த இந்திப் படவுலகமும் அணிவகுத்து நிற்கிறது.

    முன்னணியில் உள்ள இந்த நான்கு நடிகர்கள் உள்பட முஸ்லிம் நடிகர்கள் யாரும் இனி இந்திப் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் மரணத்தைச் சந்திக்க வேண்டி வரும் என சமீபத்தில் அகமதாபாத் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறிக் கொள்ளும் இந்தியன் முஜாஹிதின் மிரட்டல் விடுத்துள்ளது.

    இந்த மாதிரி கோழைத்தனமான மிரட்டல்களுக்குப் பணிய மாட்டோம் என ஒட்டுமொத்த இந்தித் திரையுலகமும் உடனே குரல் கொடுத்துள்ளது.

    கலைஞர்கள் ஜாதி, மதம் மற்றும் மொழிகளுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களைக் குறிவைப்பது போன்ற முட்டாள்தனம் எதுவும் கிடையாது. இதை தீவிரவாதிகள் மட்டுமல்ல, உள்ளூர் அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும் என ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.

    ஷாரூக்கான் போன்ற தலைசிறந்த கலைஞர்களை மதத்தின் பின்னணியில் பார்ப்பது கொடுமை என்கிறார் பிரபல திரைக்கதை ஆசிரியர் பிரசாந்த் பாண்டே. இவர்தான் ராம் கோபால் வர்மாவுக்காக வீரப்பன் படத்தை இயக்கப் போகிறவர்.

    ஷாரூக்கானின் நெருங்கிய நண்பர்களான ஜூஹி சாவ்லா மற்றும் ஃபராஹ் கான் ஆகியோர், இதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு பதில் சொல்வதே, ஷாரூக் போன்ற தலைசிறந்த கலைஞருக்கு அவமானம். அதனால் இதுபற்றிப் பேசவே நாங்கள் விரும்பவில்லை, எனத் தெரிவித்துள்ளனர்.

    இயக்குநர்கள் அஜீஸ் மிஸ்ரா, தருண் ஆதர்ஷ், சஞ்சய் கான், ஜக்மோகன் முந்த்ரா ஆகியோர் தீவிரவாதிகளின் இந்த மிரட்டலுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஷாரூக்கான் மற்றும் சல்மான் கானிடம் கருத்துக் கேட்டபோது, அப்படியா... என்று மட்டும் கேட்டுக் கொண்டார்களாம்.

    ஷாரூக் போன்ற கலைஞர்களைப் பற்றிப் பேச எவருக்கும் அருகதை கிடையாது எனக் கூறியுள்ளனர் மகேஷ் பட், ஆதித்ய சோப்ரா போன்ற பாலிவுட் ஜாம்பவான்கள்.

    எப்படியோ... வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற இந்தியப் பண்பு நீடிக்க இந்த மாதிரி அபத்தமான மிரட்டல்களும் அவ்வப்போது உதவத்தான் செய்கின்றன!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X