For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கோலிவுட் 2010 - மயக்கும் இசை தந்த டாப் 5 இசையமைப்பாளர்கள்!

  By Chakra
  |

  Yuvan Shankar Raja
  தமிழ் சினிமாவில் மிக முக்கியமான வருடம் 2010. வானளாவிய சாதனைகளும், தாங்க முடியாத சோதனைகளுமாக பரபரப்புக்குப் பஞ்சமில்லாத ஆண்டாகத் திகழ்ந்தது 2010.

  நடிப்பு, இயக்கம், இசை, தயாரிப்பு, பாக்ஸ் ஆபீஸ் வசூல் என பல துறைகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள், விறுவிறுப்பான நிகழ்வுகளை அடுத்தடுத்துப் பார்க்கலாம்.

  இந்த கோலிவுட் 2010 ப்ளாஷ்பேக்கை இசையுடன் துவங்கலாம்.

  2010-ன் ஆகச் சிறந்த இசையைத் தந்தவர் எந்தக் கலைஞர்... இந்தப் பட்டியலில் இமான், ஜீவி பிரகாஷ் குமார், யுவன் சங்கர் ராஜா, ஏ ஆர் ரஹ்மான், இளையராஜா என 5 முக்கிய கலைஞர்கள் போட்டி போடுகின்றனர்.

  யுவன் சங்கர் ராஜா

  2010 -ம் ஆண்டில் அதிக ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் யுவன் சங்கர் ராஜாதான். பையா படத்தில் அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட். படத்தின் நாயகன் யுவன்தான் என மீடியா கொண்டாடியது. அகில இந்திய அளவில் அதிக சிடிக்கள் விற்பனையான படங்களின் வரிசையில் பையா இடம்பிடித்ததென்றால், யுவன் இசையின் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம். இந்தப் படத்தில் இடம் பெற்ற 'துளித்துளி...' பாடல் இந்திய அளவில் டாப் 20 பாடல்கள் பட்டியலில் இடம்பெற்றது.

  நான் மகான் அல்ல படத்திலும் பெரிதும் பேசப்பட்டது யுவனின் இசை.

  2010-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க வெற்றிப் படமான பாஸ் என்கிற பாஸ்கரன் இசையும் பாடல்களும் இளைஞர்களை பெரிதும் கவர்ந்துவிட்டதையும் மறுக்க முடியாது.

  கோவா, சர்வம், தில்லாலங்கடி, பாணா காத்தாடி போன்ற படங்கள் வர்த்தக ரீதியில் பேசப்படாவிட்டாலும் பாடல்கள் வெற்றி பெற்றன.

  2010-ல் அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற பெருமையும் யுவனுக்கே உண்டு. மொத்தம் 15 படங்கள்!

  ஜீவி பிரகாஷ்குமார்

  2010-ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க இசையைத் தந்த இன்னொரு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார். ஆரம்பத்தில் அவ்வளவாகப் பிடிபடாத இவருடைய இசை, அங்காடித் தெருவில் கவனம் ஈர்த்தது. இந்தப் படத்தில் இன்னொரு இசையமைப்பாளரும் இருந்தார். அவர் விஜய் ஆண்டனி. அவள் அப்படியொன்றும் அழகில்லை.. பாடலை அவர்தான் கம்போஸ் செய்திருந்தார். எனவே படத்தின் இசை பெற்ற வெற்றியில் பாதிப் பங்கு அவருக்கே போனது.

  அடுத்து ஜீவி பிரகாஷ்குமார் இசையில் வந்த மதராஸபட்டினம், அவரது திறமையை சரியாக வெளிப்படுத்தியது.

  'வாம்மா துரையம்மா...' பாடலும், 'ஆருயிரே...', 'பூக்கள் பூக்கும்...' பாடல்களும் அட சொல்ல வைத்தன. எம்எஸ் வி பாடிய 'மேகமே மேகமே..' உருக வைத்தது.

  இமான்

  இவரது இசையில் வெளியான மைனா படப் பாடல்கள், அதற்கு முன் இவர் இசைத் துறையில் செய்த தவறுகளைக் கூட மன்னிக்க வைத்தது. குறிப்பாக மைனா மைனா நெஞ்சுக்குள்ள... மகா இனிமை.

  இந்த புதிய இடத்தை அவர் எப்படி தக்க வைத்துக் கொள்வார் என்பதே இனி முக்கியம்.

  ஏ ஆர் ரஹ்மான்

  விண்ணைத் தாண்டி வருவாயா, ராவணன் மற்றும் எந்திரன் ஆகிய மூன்று பெரிய படங்களின் இசை ரஹ்மான்தான். இவற்றில் விண்ணைத் தாண்டி வருவாயா இசைக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தது என்றால் மிகையல்ல. ஹோசனா..., மன்னிப்பாயா, ஓமனப் பெண்ணே... இதயத்தில் பச்சென்று ஒட்டிக் கொண்டன.

  ராவணன் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. பெரிதாக சொல்லப்பட்ட 'உசுரே போகுதே...' பாடல் கூட செயற்கையாகவே இருந்தது.

  ஆனால் ஆண்டின் இறுதியில் அவர் இசையில் வெளியான ரஜினியின் பம்பர் ஹிட் படமான எந்திரன் இந்திய சினிமாவின் அத்தனை சாதனைகளையும் உடைத்து நொறுக்கியது. குறிப்பாக இசைத் துறையில் இவ்வளவு பெரிய விற்பனை எப்படி சாத்தியம் என அனைவரும் வியந்து நி்ற்கிறார்கள். இதற்கு ரஹ்மான் இசையைத் தாண்டி, ரஜினி என்ற சாதனையாளரின் புகழும் காரணம் என்பதையும் மறுக்க முடியாது.

  எந்திரனில் அத்தனைப் பாடல்களும் அட்டகாசமான விருந்து. குறிப்பாக, இரும்பிலே ஒரு இதயம் மற்றும் கிளிமாஞ்சாரோ கலக்கல் பாடல்கள். இரும்பிலே.. பாடல் ஆரம்பத்தில் சிலருக்கு அவ்வளவாக பிடிக்காமலிருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு அந்தப் பாடல்தான் நம்பர் ஒன்னாக மாறியது இன்னொரு சுவாரஸ்யம்.

  இளையராஜா

  இளையராஜா இசையில் இந்த ஆண்டில் வந்தவை மூன்று படங்கள்தான். அவற்றில் பழஸிராஜாவின் ஒரிஜினல் மலையாளப்படம். பின்னணி இசையில் தேசிய விருதைப் பெற்ற படம் அது. அதேநேரம், பாடல்களும் மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்றன. தமிழிலும் மிக இனிமையாக அமைந்தன பாடல்கள்.

  நந்தலாலா பின்னணி் இசையின் உச்சமாகக் கருதப்படுகிறது. படத்தின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், எல்லோரும் ஏகமனதாகப் பாராட்டிய ஒரே அம்சம் இளையராஜாவின் இசைதான்.

  இந்தப் படத்தில் ஜேசுதாஸ் குரலில் இடம்பெற்ற ஒண்ணுக் கொண்ணு துணையிருக்கு... பாடலும், இளையராஜா பாடிய 'தாலாட்டு கேட்க நானும்...', 'மெல்ல ஊர்ந்து...' பாடல்கள் மனசை உருக்கி விட்டன.

  இவர்களைத் தவிர, வம்சம் மூலம் புதுமுக இசையமைப்பாளராக அறிமுகமான தாஜ் நூர் இசை குறிப்பிட்டுச் சொல்லும்படி இருந்தது. களவாணி படத்தில் எஸ் எஸ் குமரனின் 'டம்ம டம்மா..' பாடல் மறக்கமுடியாதது.

  English summary
  In 2010, Kollywood produced some memorable musical hits through its top composers Ilayaraja, A R Rahman, Yuvan Shankar Raja, G V Prakash Kumar and D Imman.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X