»   »  ஷூட்டிங் 200 நாள், தாடி 600 நாள்!!

ஷூட்டிங் 200 நாள், தாடி 600 நாள்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Bala in shooting spot
பாலாவின் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் நான் கடவுள் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே பல பெரிய சாதனைகளைப் படைத்திருக்கிறது. ரொம்ப அதிகமாக ஃபீல் பண்ணாதீர்கள். இந்த சாதனை படத்தின் வியாபாரத்தில் அல்ல, நாட்கள் விரயத்தில்.

தமிழ் சினிமாவிலேயே அதிக நாள் ஷூட்டிங் நடத்தப்பட்ட ஒரே படம் நான் கடவுள்தான். இதுவரை 200 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். அட, இதோடு முற்றுப்புள்ளி வைப்பாரா பாலா? என்றால் அதுதான் கிடையாது. மார்ச் மாத கடைசி வரை படப்பிடிப்பு நீளும் என்கிறது நான் கடவுள் யூனிட்.

இதைவிட பெரிய சாதனை, படத்தின் நாயகன் ஆர்யா கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக ஜடாமுடியுடனும், சிக்குப் பிடித்த தாடியுமாக அலைவதுதான். முகம் முழுக்க மூடிக் கிடக்கும் அவர் முகத்தை அவரே தேடித் தான் பார்க்க வேண்டியுள்ளதாம்.

இவர் தாடி வளர்க்க ஆரம்பித்து இன்றோடு 601 நாள் ஆகிறதாம். பாவம் தன் மனம் கவர்ந்த நிலாவைக் கூட நான்கடி தூரத்திலேயே நிற்க வைத்துப் பேச வேண்டிய நிலை. கிட்ட போனா முடி குத்துமாம்!!

படத்தில் ஆர்யா தாடியில்லாமலும் பல காட்சிகளில் வருகிறாராம். ஆனால் அந்தக் காட்சிகளை பாலா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து விட்டாராம். ஒரு பக்கம் ஆர்யாவின் தாடி வளர வளர, இன்னொரு பக்கம் படத்துக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள் வளரத் தொடங்கிவிட்டன.

பாவனா, கார்த்திகா, பார்வதி, ஸ்நேகா உல்லால் என கதாநாயகிகளை மாற்றி மாற்றி ஷூட் செய்து கொண்டிருந்த்திலேயே கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் ஓடிவிட்டன. அதன் பிறகு தயாரிப்பாளரே மாறிவிட்டார்.

படத்தை ஆரம்பித்த பி.எல்.தேனப்பன், விட்டால் போதுமென்று படத்தை பிரமிட் சாய்மிரா நிறுவனத்தினருக்குக் கொடுத்துவிட்டு விலகிக் கொண்டார். படத்தை விற்ற கையோடு திருப்பதிக்குப் போய் ஒரு மொட்டையும் போட்டுக் கொண்டார்.

தற்போது படப்பிடிப்புக் குழுவுடன் தேனியில் முகாமிட்டிருக்கும் பாலா, மார்ச் மாதம் 15-ம் தேதிக்குள் படத்தை 'முடி'த்துவிடுவதாக ஏற்கெனவே கூறியிருந்தார்.

சொன்னபடி முடித்துவிட்டால் மே மாதமே படத்தை ரிலீஸ் செய்துவிடும் திட்டத்திலிருக்கிறார்கள். இசைஞானி இளையராஜாவின் இசையில் ஏற்கெனவே அனைத்து பாடல்களும் தயாராகி வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன.

இத்தனை சிரமங்களுக்கிடையிலும் இப்படத்தை எடுப்பதில் தயாரிப்பாளர்கள் பிடிவாதமாக இருக்கக் காரணம், பாலாவுக்கே உரிய நேர்த்தியான திரைக்கதைதான். எந்தத் தமிழ்ப் படத்திலும் ரசிகர்கள் பார்த்திராத ஒரு கதையை புதிய கோணத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறார் பாலா என்கிறார்கள் படத்தின் புதிய தயாரிப்பாளர்களாகப் பொறுப்பேற்றிருக்கும், பிரமிட் சாய்மிராவின் சீனிவாசனும் அவரது சகோதரரும்.

பாலா படத்துக்காக ஹீரோ என்ன, நாம கூட தாடி வளர்க்கலாம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil