»   »  செஞ்சுரி போடும் 'மதுரை'

செஞ்சுரி போடும் 'மதுரை'

Posted By:
Subscribe to Oneindia Tamil
Madurai Serial

விஜய் டிவியில் மண் மணம் மாறாமல் ஒளிபரப்பாகி வரும் மெகா சீரியல் மதுரை 100 எபிசோடுகளை நெருங்கியுள்ளது.

வித்தியாச விஜய் டிவியின் வெற்றி நிகழ்ச்சிகளில் மதுரையும் ஒன்று. நேயர்களால் தேர்வு செய்யப்பட்ட கதையான மதுரை, முதல் எபிசோடிலிருந்தே நேயர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.

மதுரையைக் கதைக்களமாக கொண்ட இந்த தொடர், ஐந்து சகோதர, சகோதரிகளின் கதையைப் பின்னணியாகக் கொண்டது. சூழ்நிலைகளால், பல்வேறு காரணங்களால் சண்டை போட்டுப் பிரிந்து விட்ட ஐந்து பேரையும், அவர்களின் வாரிசுகள் சேர்த்து வைக்க முயலுகிறார்கள். அதில் அவர்கள் சந்திக்கும் சவால்கள், சச்சரவுகள் உள்ளிட்டவைதான் மதுரையின் கதை.

கதையின் நாயகனாக செந்தில் (செய்கை சரவணன்), நாயகியாக ஸ்ரீஜா (மீனாட்சி) ஆகியோர் படத்திற்கு முதுகெலும்பாக உள்ளனர். பிரிந்த குடும்பங்களை இணைக்க மீனாட்சி படாதபாடு படுகிறாள். மறுபக்கம், மீனாட்சியை கைப் பிடிப்பதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறான் செய்கை சரவணன்.

இவர்கள் தவிர உதயா (அன்பு), காயத்ரி (நிலா), மு.ரா (வீரபாண்டி), வடிவுக்கரசி (காமாட்சி) ஆகியோரும் தங்களது பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து தொடருக்கு உயிர் நாடியாக உள்ளனர்.

மதுரை மண்ணின் கலாச்சாரம், பாரம்பரியம், பழக்க வழக்கம், உணர்ச்சிகள் உள்ளிட்டவற்றை அழகாக கோர்த்து கதையை நகர்த்தி வருகிறார் இயக்குநர் ஜெரால்ட்.

டிவி தொடர்களை கண்கள் குளமாக பார்த்து வந்த நேயர்களுக்கு மதுரை சீரியல் படு வித்தியாசமான விருந்து என்பதில் சந்தேகம் இல்லை.

குறிப்பாக 'செய்கை' சரவணன் கேரக்டருக்கு ரசிகர் கூட்டமே உருவாகியிருக்கிறதாம். அவர் பண்ணும் லூட்டிகளும், வசன உச்சரிப்பும் பெரும்பாலானோரை கவர்ந்து விட்டது.

மதுரைக்காரர்களிடம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த டிவி நேயர்களின் விருப்ப தொடராகவும் விளங்கி வரும் மதுரை தொடர், 100வது எபிசோடைத் தொடுகிறது.

2007ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தத் தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கியது. பிப்ரவரி 4ம் தேதியுடன் இது 100 எபிசோடுகளைப் பூர்த்தி செய்கிறது.

தொடரின் வெற்றி குறித்து இயக்குநர் ஜெரால்ட் கூறுகையில், கதையின் கருவும், கதைப் போக்கும்தான் இந்த தொடரின் வெற்றிக்கு காரணம் என்றார்.

பல்வேறு திருப்பங்களுடன் சுறுசுறுப்பாக போய்க் கொண்டிருக்கும் மதுரை தொடரில் அடுத்தடுத்து வரும் எபிசோடுகள் மேலும் விறுவிறுப்பைக் கூட்டும் என எதிர்பார்க்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil