»   »  பொங்கல் விருந்தில் 8 படங்கள்!

பொங்கல் விருந்தில் 8 படங்கள்!

Subscribe to Oneindia Tamil
Trisha with Vikram
பொங்கல் பண்டிகைக்கு 8 படங்கள் திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

தமிழர்களுக்கு மட்டுமல்லாது, தமிழ் திரையுலகினருக்கும் பொங்கல் பண்டிகைதான் ரொம்ப விசேஷம். அப்போதுதான் அதிக அளவிலான படங்கள் திரைக்கு வரும்.

தீபாவளியைப் போலவே பொங்கல் பண்டிகையின்போதும் பெருமளவிலான படங்களை ரிலீஸ் செய்ய திரையுலகினர் ஆர்வம் காட்டுவது வழக்கம்.

ஜனவரி 14ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் என்பதால் நிறையப் படங்களை பொங்கலுக்கு களம் இறக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

இந்த பொங்கலுக்கு 8 படங்கள் திரைக்கு வருகிறது. அது குறித்த ஒரு பார்வை:

1. பீமா - இயக்குநர் லிங்குச்சாமி. ஏ சான்றிதழுடன் படம் தணிக்கை ஆகி வந்துள்ளது. ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது. விக்ரம் படு வித்தியாசமாக நடித்துள்ள படம். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த படம் இது. திரிஷா, விக்ரமுடன் சாமிக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். எனவே எதிர்பார்ப்பு ஏகமாகவே உள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் ஏற்கனவே பிரபலமாகி விட்டன. ஏ.எம். ரத்னத்திற்கு இப்படம் மறு பிறவி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் பீமாவுக்கு எதிர்பார்ப்பு கூடுதலாகவே உள்ளது.

2. தங்கம் - இயக்குநர் கிச்சாஸ். மேகா நாயர் ஜோடியாக நடிக்க சத்யராஜ் கலக்கியுள்ள படம். கூடவே நீண்ட இடைவெளிக்குப் பிறகு காமெடி சூப்பர் ஸ்டார் கவுண்டமணி சவுண்டு விட்டுள்ள படம்.

கிராமத்து நல்லவனாக இப்படத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். கவுண்டமணியின் காமெடி தனது நடிப்பை தூக்கி சாப்பிட்டு விட்டதாக சத்யராஜே கூறியுள்ளதால், கவுண்டரின் கலாட்டாவை ரசிக்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

3. பழனி - இயக்குநர் பேரரசு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேரரசு மீண்டும் கலகலக்க வருகிறார். பரத் - காஜல் அகர்வால் ஜோடியின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஷக்தி சிதம்பரம் தயாரித்துள்ளார். வழக்கமான பேரரசுவின் மசாலாக்கள் தூவப்பட்ட, பரத்தின் முதல் அதிரடிப் படம்.

4. காளை - இயக்குநர் தருண் கோபி. திமிரு படப் புகழ் தருண் கோபியின் 2வது படம். சிம்புவின் சிலம்பலில் உருவாகியுள்ள படம். வேதிகா நாயகியாக நடித்துள்ளார். ஒரு பாட்டுக்கு நிலா உருக வைத்துள்ளார். சிம்பு டைப் படமாகவும், மசாலா படமாகவும் இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

5. வாழ்த்துகள் - இயக்குநர் சீமான். மாதவனுடன், சீமான் இணையும் 3வது படம். பாவனாவும், மாதவனும் இணையும் 2வது படம். கூட்டுக் குடும்பத்தின் அர்த்தம், முக்கியத்துவத்தை வலியுறுத்தும் படம். குடும்பத்தோடு தைரியமாக பார்கக் கூடிய படம் என்று சீமான் தைரியமாகவே சொல்கிறார். இசை யுவன் ஷங்கர் ராஜா.

6. பிரிவோம் சந்திப்போம் - இயக்குநர் கரு. பழனியப்பன். சேரன் நாயகனாக நடித்துள்ள படம். அவருக்கு ஜோடி சினேகா. நாட்டுக்கோட்டை செட்டியார் குடும்பத்துப் பின்னணியில் அமைந்த படம். படம் உருவாகும்போதே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பதால் ரசிகர்களும் ஆவலாகவே உள்ளனர்.

7. இந்திரலோகத்தில் நா. அழகப்பன் - இயக்குநர் தம்பி ராமையா. வடிவேலு நாயகனாக நடித்துள்ள 2வது படம். நாயகனாக முதல் முறையாக 3 வேடங்கள் பூண்டுள்ளார் வடிவேலு. ஷ்ரியா ஒரு பாட்டுக்கு செமத்தியான ஆட்டம் போட்டுள்ளார். சபேஷ் - முரளியின் இசையில் பாடல்கள் ஹிட் ஆகியுள்ளன.

8. பிடிச்சிருக்கு - இயக்குநர் கனகு. முருகா பட நாயகன் அசோக் நடித்துள்ள படம். கூட நடித்திருப்பவர் விசாகா. லிங்குச்சாமியின் உதவியாளர் கனகு என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மனு ரமேசன் என்ற புதுமுகம் இசையமைத்துள்ளார்.

இந்தப் படங்கள் திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. கடைசி நேரத்தில் கூட ஏதாவது ஓரிரு படங்கள் சேரக் கூடும்.

எத்தனை வந்தால் என்ன, அத்தனையையும் ரசித்து ருசிக்க ரசிகர்கள் தயார்தான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil