»   »  மலர்ந்து மணம்வீசும் மாமலர்!- கவிஞர் மகுடேஸ்வரன்

மலர்ந்து மணம்வீசும் மாமலர்!- கவிஞர் மகுடேஸ்வரன்

By Shankar
Subscribe to Oneindia Tamil

தமிழ்த் திரையுலகம் எத்தகைய படங்களைச் செய்து பெரும் செல்வம் ஈட்டியது என்று ஆய்வோமானால் நிச்சயமாக அது ரத்த உறவுகளுக்கிடையே நிகழும் பாசப் போராட்டங்களைச் சித்தரித்த படங்களால்தான். பிற்காலத்தில் 'செண்டிமென்ட் படங்கள்' என்று அவற்றை எளிதாகத் தரம்பிரித்துப் வைத்தாலும் அவ்வகைமைப் படங்கள் அன்றின்று என்றில்லாமல் எல்லாக் காலத்திலும் வெளியானபடியே இருந்திருக்கின்றன.

எளிமையான மனித மனங்கள் அறிவைப் புறந்தள்ளி உணர்வின் வழியே உருகியோடிய தருணங்களை மிகச் சிறப்பாகவே எடுத்தாண்டு வியக்கத்தக்க எண்ணிக்கையிலான மக்களைக் கவர்ந்து ஆட்டிப்படைத்தன அவை.

Kannadasan

இளமை முறுக்கத்திலுள்ள பார்வையாளனுக்கு காதல் கதைகளும் அடிதடி சாகசப் படங்களும் இயல்பாகவே ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. அவர்களுக்குப் பாசப் பெருக்கில் பாத்திரங்கள் நிகழ்த்தும் உரையாடல்களும் நாத்தழுதழுப்பான சொல்லாடல்களும் புரியக்கூடிய அகவைப் பக்குவம் ஏற்பட்டிருப்பதில்லை. ஒரு செண்டிமெண்ட் காட்சி தோன்றினாலே இன்று பலர் 'பொறா ஊளை' இடுகின்றனர்.

திரையரங்கப் பார்வையாளர்களாக அவ்வினத்தவர்களே எஞ்சியிருப்பதால், இனிமேலான காலங்களில் பாலூட்டி இனங்களுக்கே சிறப்பாய் உரிய பாச உணர்ச்சியைப் பேசுபொருளாகக் கொண்டு உள்ளத்தைப் பதைபதைக்க வைக்கும் உறவுகளின் கதைகளைக் கூறும் படங்கள் தோன்றக்கூடும் என்று எந்த உறுதியுமில்லை. அது வேறொரு வடிவமெடுத்து இன்று எல்லார் வீட்டுக் கூடங்களிலும் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர்களாகி இருக்கின்றது.

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சினிமாக்களைக் காண அரங்கை நாடி நிறைத்த கூட்டம் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஆகியிருந்தது. பிள்ளை குட்டிகளோடு குடும்பம் குடும்பமாக திருவிழாக்களுக்குச் சென்றார்கள். மாமன் மச்சான் சித்தி பெரியம்மா அத்தை வீடுகளுக்குச் சென்றார்கள். திரைப்படங்களுக்குச் சென்றார்கள். எல்லார் இதயங்களும் ஒன்றோடு ஒன்று உறவுக் கயிற்றால் இறுகப் பிணைந்திருந்தன. தாத்தா பாட்டி தொடங்கி பேரன் பேத்திகளாலாகிய ஒரு குடும்பத்தில் சாதாரணமாக பத்துப் பதினைந்து நபர்கள் கூடி வாழ்ந்தார்கள். எல்லாருக்கும் மூத்தோரின் சொல் கைவிளக்காக இருந்தது. உறவுகளுக்கிடையில் நிதமும் கண்ணீர் ததும்பவைக்கும் ஒரு சம்பவம், சகித்துக்கொள்ளவே முடியாத சின்னச் சின்ன சச்சரவுகள், செரிக்கமுடியாத பிரிவுகள், மீண்டும் அன்பால் நெருங்கிக் கட்டித் தழுவிக்கொள்ளுதல் என்று நெஞ்சங்களுக்கிடையில் தங்கச் சரிகையிடப்பட்ட உணர்விழைகள் ஊடிப் பின்னியிருந்தன.

இன்று ஒரு குடும்பம் என்பது மூவர் அல்லது நால்வரால் மட்டுமே ஆகிய இரத்த உறவுகளின் சிற்றலகாகக் குறுகிவிட்டது. தந்தைமை தாய்மை என்பதை வெறும் ஒற்றைப் பிள்ளைப் பேற்றோடு முடித்துக்கொள்வது அதிகரித்திருக்கிறது. அதுவே வாழ்க்கையைக் கொஞ்சம் பிய்த்தல் பிடுங்கல் இல்லாமல் வாழ்வதற்கும் மற்றவர்களோடு போட்டி போட்டு ஓடுவதற்கும் ஏற்றது என்ற கருத்தால் ஒற்றைப் பிள்ளைக் குடும்பங்கள் பெருகிவிட்டன. இரண்டுக்கு மேல் எவரும் பெற்றுக்கொள்ளத் தயாரில்லை.

மகாபாரதத்தில் ஒரு சொற்றொடர் வரும். 'ஒற்றைப் பிள்ளை மட்டுமே பெற்றவன் பிள்ளைப்பேறற்ற மலடனுக்கு எவ்விதத்திலும் மேலானவனல்லன்' என்பதே அது. எந்நேரத்திலும் மக்களைத் தாக்கக்கூடிய அக்காலத்தைய பேரிடர்களான நோய், போர், பஞ்சம் போன்றவற்றால் அந்த ஒரே பிள்ளையையும் எளிதில் பறிகொடுத்துவிட நேரலாம் என்பதால் அத்தொடரில் உண்மை இல்லாமலில்லை. ஆனால், பெற்றோருக்கு ஒரே பிள்ளையாய்ப் போய்விட்ட ஒரு குழந்தை, தன் வாழ்வில் அண்ணன் அக்காள் தம்பி தங்கை ஆகிய எந்த உறவுகளையும் அனுபவிப்பதில்லை. தாய் தந்தையற்ற குழந்தை எப்படி அநாதையாகக் கருதத் தக்கதோ அதேபோல் சகோதர சகோதரியற்ற குழந்தையும் போதிய உறவுகளற்ற அநாதையே.

தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற பழந்தொடர்தான் எத்துணை பொருள் மிக்கது! குழவிப் பருவத்திற்குத் தாயும், வளரும் பருவத்திற்குத் தந்தையும் எப்படி முக்கியமோ - அதற்கு நிகராக மீதமுள்ள வாழ்க்கைப் பருவத்திற்கு உடன்பிறப்புகள் முக்கியம். ஆனால், இன்றைய பிள்ளை உடன் பிறப்புகளற்று வாழ்கிறது.

சகோதரமற்ற நிலை அத்தோடு முடிவதில்லை. அந்தக் குழந்தை வளர்ந்து ஆளாகி, அதற்கொரு பிள்ளை பிறந்தால் சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமன் என்னும் உறவுக்கண்ணிகளே முற்றாக அறுந்து இன்னும் அதிக உறவிழப்புக்கு ஆளாகிப் பேரநாதையாக அல்லவா நிற்கும் ! உறவுகள் விடுபட்டு விடுபட்டு உருவாகும் தலைமுறைகள் மேலும் மேலும் அதிகத் தனிமையடைந்து மானுட ஆதார உணர்ச்சிகளே அற்றுப் போய்விடாதா ? எவ்வுணர்ச்சிகளோடு அந்தத் தலைமுறை தம் உலகை எதிர்கொள்ளும் ? எண்ணிப் பார்க்கவே கூசுகிறதே! இக்கூறுகளைத்தாம் சமூக மானுடவியல் ஆய்வாளர்கள் இன்னும் அதிக அழுத்தத்தோடு கூறுகிறார்கள்.

உறவுகளின் பெருமைகளையும் அவற்றின் ஊடு சரடுகளையும் மிகச் சரியாக எடுத்தாண்டு பேசிய தமிழ்த் திரைப்படங்கள் பிற்காலத் தலைமுறைக்கு வரலாற்று அதிர்ச்சியாக மாறி நிற்பதற்கான வாய்ப்புகள் நிறையவே இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அறுபதுகளில் வெளியான கறுப்பு வெள்ளைப் படங்கள் அந்தத் தடத்தில் அருமையாக நடை பயின்றிருக்கின்றன. உறவுகளின் உணர்ச்சி நிழல்களையும் பேரலைகளையும் இறுகப் பற்றி இயல்பு பிறழாமல் கதை சொன்ன நல்ல இயக்குநர்கள் நம்மிடம் இருந்திருக்கிறார்கள். பீம்சிங், கே. எஸ். கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், கே. பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், துரை, சேரன், தங்கர் பச்சான் போன்றவர்கள் அத்தகைய படங்களை விசாலமான தளங்களில் உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களில் பழம்பெரும் இயக்குநர் பீம்சிங் இயக்கிய படங்களுக்குத் தனித்த அடையாளங்கள் உண்டு. அவருடைய இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த 'ப'கர வரிசைப் படங்கள் இன்றும் ஈர்ப்புக் குறையாதவை.

உறவுகள் என்னும் பூமடல்களில் உறைந்திருக்கும் உணர்ச்சித் துளிகளைச் சேகரிக்கும் வேலைதான் கலைஞர்களின் விருப்பம். நாமெல்லாம் உணர்ந்த, ஆனால், நம்மெவரும் அதன் உட்கட்டமைப்புகளில் தெளிவடையாமல் சென்றுகொண்டிருந்த ஒரு தருணத்தை அவர்கள் தம் கலை ஊடகத்தின் வாயிலாகக் கட்டி எழுப்பும்போது நம்மை அறியாமல் நாம் கண்ணீர் உகுக்கிறோம். நமக்கும் இது நேர்ந்தது என்று நம்மையறியாமல் நாம் உருகுகிறோம். அதன் முடிவில் நாம் அடையும் 'அந்த ஏதோ ஒன்று' நிச்சயம் பகுத்தறிவுக்கு உட்பட்டது அன்று... அது கண்டவர்கள் மட்டுமே நன்றுணரும் ஒருவகை ஆன்மீகம்.

அண்ணன் தங்கைப் பாசத்திற்கு நிகராக இவ்வுலகில் இன்னொன்று இல்லை. அப்படி ஒன்று இருந்தால் அது அக்காள் தம்பிப் பாசமாகத்தான் இருக்கமுடியும். சகோதரத்துவத்தின் அத்தனை ஒளிக்கதிர்களும் ஒன்றாகத் திரண்டு ஜுவாலையாகி ஒளிர்கின்ற தனித்துவமான உறவுநிலை அது. ஒரு வயிற்றுப் பிறப்பில் உதித்த இருவேறு பால் உயிர்கள். இன்றும் கூட, தம் சகோதரிகள் ஐவருக்கும் திருமணம் செய்துவைத்தாக வேண்டிய யாகத்தில் தம் வாழ்வை ஒருகணமும் எண்ணிப் பாராது உழைத்துக்கொண்டிருக்கும் அண்ணன், தம்பிகள் ஆயிரம். தன் அண்ணன் குறைவில்லாமல் வாழட்டும் என்பதற்காகக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பூர்வீகச் சொத்தைத் தன் கணவனுக்கே தெரியாமல் கையெழுத்திட்டுவிட்டுச் செல்லும் தங்கைகள் ஆயிரம். தூத்துக்குடியில் முத்தெடுக்க மூழ்குபவர்கள் தம் இடுப்பில் கட்டியிருக்கும் கயிற்று நுனியைத் தம் மனைவியின் சகோதரனிடத்தில் மட்டுமே ஒப்படைத்து மூழ்குவார்களாம். தன் மனைவியின் சகோதரனாகிய அவன் மட்டுமே தன் சகோதரிக்காகத் தன்னை மேலிழுத்து மீட்பான் என்னும் ஆதி நம்பிக்கை அது. அந்த நம்பிக்கை இதுவரை பொய்த்ததில்லை. இனியும் பொய்க்காது.

ஓர் ஆடவனுக்கு உலகிலுள்ள மற்ற மங்கைகள் வாசமலராக இருக்கக் கூடும். சகோதரி மட்டுமே அவனுக்குப் பாசமலர். 'நீ அக்கா தங்கச்சி கூடப் பொறக்கல ?' என்னும் வசை வாள் கூர்மையான வசை.

பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த 'பாசமலர்' திரைப்படம் அண்ணன் தங்கை உறவுக்கு இலக்கணம் வகுத்து இயம்பிய படம். இத்திரைப்படத்தைக் கண்ணுற்றிராத சென்ற தலைமுறையினர் ஒருவரும் இலர். தமிழர் வாழ்வோடு பிணைந்து இன்றும் உரையாடிக்கொண்டிருக்கும் உணர்ச்சிப் படங்களுள் இத்திரைப்படத்திற்கு முதன்மையான இடம் உண்டு.

தன் தங்கையைப் பேணி வளர்த்து ஆளாக்கும் அண்ணன். தன் அண்ணனுக்காகப் பாச உருவாய் வாழும் தங்கை. இருவரும் கூடியுழைத்து வாழ்வில் உயர்கிறார்கள். தங்கை தன் அண்ணனுக்கு எதிரான வர்க்க சிந்தனையுள்ள ஒருவனைத் திருமணம் செய்துகொள்கிறாள். அண்ணனுக்கும் ஒருத்தி மனையாட்டி ஆகிறாள். புதிய மண உறவுகளால் அண்ணன் தங்கைக்கிடையே பாசத்தை மீறிய முரண்பாடுகள் முளைக்கின்றன. அண்ணனும் தங்கையும் முறையே பிள்ளைப் பேறடைகிறார்கள். தத்தம் குழந்தைகளைத் தாலாட்டும் தொனியில் தம் சகோதர உறவின் அருமை பெருமையை, உறவில் திளைத்து மகிழ்ந்திருந்த பழைய காலத்தை, இனி இந்தக் குழந்தைகளால் தாம் ஒன்று சேர்வதற்கு மிஞ்சியிருக்கும் நம்பிக்கையை இருவரும் பாடுகிறார்கள். இதுதான் திரையில் பாடல் இடம்பெறும் சூழல்.

கண்ணதாசன் தம் காதல் பாடல்களுக்காகவும் தத்துவப் பாடல்களுக்காகவும் அதிகம் அறியப்பட்டவராக இருக்கிறார். அவருடைய தத்துவப் பாடல்களுக்காகவோ நல்ல காதலுணர்ச்சிப் பாடல்களுக்காகவோ நான் அவரைப் பெரிதும் வியக்கவில்லை. அவருடைய தனிச்சிறப்பு என்பது வெகு சிக்கலான அபூர்வமான கதைத் தருணத்தைத் தம் உயிர்ப்பான தமிழ் வரிகளால் எள்ளளவும் கட்டுக்குலையாத சொற்களைக் கோத்து ஒட்டுமொத்தத் திரைப்படத்தையே உயரத் தூக்கி நிறுத்தும் மேதைமைதான்.

இன்றைக்குப் பாட்டு எழுதக் கேட்கும் இயக்குநர்கள் பாடலாசிரியர்களை 'சார்... கொஞ்சம் விசுவலா எழுதிக் கொடுங்க. உங்கள் வரியை வெச்சுத்தான் நாங்க விசுவலா காட்டுவோம். சோ... விசுவலுக்கு வாய்ப்புள்ள வரியாக எழுதிக் கொடுங்க.' என்று கேட்கிறார்கள். அதாவது உங்கள் வரி எப்படி இருக்கிறதோ அப்படி ஒரு ஷாட் எடுத்துக்கொள்வார்கள். படத்தில் அந்த வரி போகும்போது அந்தக் காட்சியை வைத்துவிடுவார்கள். உதாரணத்திற்கு, 'மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை' என்று ஒரு வரி வருமானால் அதற்கு ஒரு மல்லிகைப்பூவை, பாடுகின்ற நாயகி நெருங்கிப் பார்ப்பதுபோல் ஒரு க்ளோசப் போட்டுவிடுவார்கள். மொழி என்பது காட்சி ரூப உருவகத்தை மீறிய அர்த்த வெளிக்குள் பிரவேசிக்கும்போதுதான் உன்னதமான கவிதை பிறக்கிறது என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். இந்தத் தொந்தரவுகளால்தான் இன்றைய பாடல்கள் முடங்கியிருக்கின்றன. நான் தமிழ்த்திரையுலகின் எவ்வளவு பெரிய இயக்குநரையும் சவாலுக்கு அழைக்கிறேன். அன்றைக்கு இயன்றவரையில் பாத்திரங்களைப் பாடவிட்டு, பீம்சிங் இந்தப் பாடலை எடுத்து முடித்தது ஒருபக்கம் இருக்கட்டும். கண்ணதாசன் எழுதிய கீழ்க்காணும் பாடல் வரியின் பல்லவியை 'விசுவலைஸ்' செய்து காட்டுங்கள், ஐயா ! உங்கள் டைரக்சன் திறமையை நான் ஒப்புக்கொள்கிறேன். உங்கள் மொழியின் பெருவளத்திற்கு முன்னால் உங்கள் உபகரணமான கேமரா எவ்வளவு பற்றாக்குறையான ஒன்று என்பதைப் புரிந்துகொள்வீர்கள் !

இனி பாடலுக்குச் செல்வோம்...

மலர்ந்தும் மலராத
பாதி மலர்போல
வளரும் விழிவண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத
காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே !

நீ இன்னும் மலரவும் இல்லை. அதற்காக நீயொரு மலர் இல்லை என்பதற்கும் இல்லை. ஆகவே, நீ ஒரு பாதி மலர். அந்தப் பாதி மலர் எப்படி ஒவ்வொரு நொடியும் வளர்ந்து வளர்ந்து முழுமையடைகிறதோ அப்படி வளர்ந்துகொண்டிருக்கிற என் விழியின் வண்ணமாக விளங்குகின்ற கண்மணிப் பாவையே ! அந்த விழிப்பாவைக்கு எது பொருளூட்டும்படி இருக்கும் ? இருள்விலக்கி விடிந்து சுடர்கின்ற காலைப் பொழுதுதானே ! அப்படி எங்கள் உறவுக்குள் சூழந்த துயர இருளையும் இனி விலக்குவதற்காகத் தோன்றியிருக்கின்ற காலைப் பொழுதே ! அந்தப் பொழுதும் இன்னும் முழுதாக விடியவில்லையே. இன்னும் விடிந்தும் விடியாத மெல்லிருள் சூழ்ந்திருக்கிறதே. அந்த விளக்கமுடியாத இளங்காலையைப்போல் எங்கள் உறவுகளுக்குள் விளைந்த கலையே ! இனி வெண்மையான ஒளியின் உருவாகத் தோன்றவிருக்கின்ற அன்னப் பறவையே !

நதியில் விளையாடி
கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ்மன்றமே !

நதியில் மூழ்கிப் புரண்டெழுந்து குளுர்ச்சியைத் தனக்குள் வாங்கிக்கொண்டு நதி தீரத்து நன்னீர்க் கொடிகளில் உன் ஈரத்தலையைத் துவட்டிக்கொண்டு அழகாகச் சீவி அலங்கரித்து மெல்ல நடந்து வரும் இளந்தென்றலே ! வளர்ந்து நிற்கும் பொதிகை மலையில் தோன்றி புதுத் தென்றலாக நடந்து மாநகராகிய மதுரையைக் கண்டு அங்கே எம் தமிழ் மொழிப் பெருக்கின் இனிமையில் ஊறிப் பொலிவாக நிற்கும் மன்றமே !

யானைப் படைகொண்டு
சேனை பலவென்று
ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா - அத்தை
மகளை மணங்கொண்டு
இளமை வழிகண்டு
வாழப் பிறந்தாயடா !

தங்கக் கடியாரம்
வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் !
பொருள் தந்து மணம் பேசுவார் - மாமன்
தங்கை மகளான
மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் !

நதியில் விளையாடி
கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே !

சிறகில் எனை மூடி
அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா ?
கனவில் நினையாத
காலம் இடைவந்து
பிரித்த கதை சொல்லவா ?

கண்ணின் மணிபோல
மணியின் இமைபோல
கலந்து பிறந்தோமடா - இந்த
மண்ணும் கடல் வானும்
மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா - உறவைப்
பிரிக்க முடியாதடா !

சகோதரத்துவத்தின் சாஸ்வதத் தன்மையை அழகாகச் சொல்லி முடிகிறது பாடல். இங்கே ஈற்றடியை நோக்கவேண்டும். 'மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா'. மண் கடல் வான் என்கிற வரிசைக்கிரமத்தில் ஒரு நுட்பம் இருக்கிறது. மண் எவ்வாறு மறைய முடியும் ? கடல்பொங்கி மேவினால் மட்டுமே மண்மறையும். அப்பொழுது உலகமே வெறும் கடல்கோளமாகக் காட்சியளிக்கும். அந்தக் கடல் எவ்வாறு மறையும் ? ஒன்றுமேயில்லாத சூனியாமானால் மட்டுமே முடியும். ஒன்றுமே இல்லாத சூனியத்தில் வானவெளி மட்டுமே இருக்கும். அந்த சூனிய வெளியான வானம் எவ்வாறு மறையும் ? தெரியவில்லை. அந்த சூனியவெளியே இல்லாமல் மறைந்தாலும் எங்கள் உறவை மறக்க முடியாதே. பாடலுக்கு எவ்வளவு பகாசுர முற்றுப் புள்ளி !

பாடல் முழுக்க கண்ணதாசன் ஒரே சந்தத்தில் எழுதியிருக்கிறார். இது
கண்ணதாசன் எழுதியபிறகு இசையமைக்கப்பட்ட பாடலாக இருக்க வேண்டும். ஒரே சந்தத்தில் உள்ள வரிகளுக்கு விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் நுணுக்கமான வர்ண மெட்டுகளை அமைத்திருக்கிறார்கள். டி. எம். சௌந்தரராஜனின் யவ்வனமான குரலை அனுபவிக்க வேண்டுமானால் இந்தப் பாடலைக் கேட்கவேண்டும். பி. சுசீலாவின் தேம்பலில் உள்ள பாவத்தை உயிருக்குள் பரவவிடவேண்டும். என் அனுமானத்தில் இப்பாடல் தமிழ்த்திரையின் மிகச் சிறந்த பத்துப் பாடல்களில் ஒன்று.

<center></center>

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Poet Magudeswaran's tribute to late legendary play back singer TM Soundararajan.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more