twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கவிஞர் வாலி... ஆனந்த அமுதமும் தந்தார்... அர்ஜென்ட் பீட்ஸாவும் தந்தார்!

    By Shankar
    |

    சென்னை: காவியக் கவிஞர் என்றும் வாலிபக் கவிஞர் என்றும் தமிழுலகிலும் திரையுலகிலும் அழைக்கப்பட்டவர் கவிஞர் வாலி. எந்த சூழலுக்கும், எந்த மாதிரிப் பாடலையும் எழுதுவதில் அவருக்கு நிகரில்லை.

    கண்ணதாசன் காலத்தில் பாடல் எழுத வந்தவர், தலைமுறைகள் தாண்டி, இன்றுள்ள இளம் பாடலாசிரியர்களெல்லாம் வியந்து நிற்கும் வகையில் புதுமையான பாடல்கள் புனைந்தார்.

    அமுதமும் பீட்சாவும்..

    அமுதமும் பீட்சாவும்..

    ஆனந்தமாய் அனுபவித்துப் பருக அமுதத் தமுழையும் தருவார், அர்ஜென்ட்டுக்கு பீட்ஸா தமிழையும் தருவார். இந்த இரண்டிலும் வாலிக்கு நிகர் வாலிதான்.

    அத்தனை இசையமைப்பாளர்களுடனும் இணைந்து, இயைந்து பணியாற்றியது வாலியின் சிறப்பு.

    நண்பன்

    நண்பன்

    காரணம் வாலிக்கு கோபம் வரும்... ஆனால் ஈகோவை காட்டிக் கொள்ளவே மாட்டார். வயதில் சிறியவர் என்ற பேதம் பார்க்காமல் தோளில் கைபோட்டுப் பழகுவார். அதனால் எல்லோருக்குமே அவர் நண்பர்தான்.

    ஆயிரம் படங்களுக்கு மேல், பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிக் குவித்த வாலி, தன் மொழியறிவையும், உலக ஞானத்தையும் எப்போதும் புதுப்பித்துக் கொண்டே இருந்தார்.

    எம்ஜிஆரின் கொள்கை வகுப்பாளர்

    எம்ஜிஆரின் கொள்கை வகுப்பாளர்

    எம்ஜிஆருக்கு கொள்கை வகுப்பாளர் மாதிரிதான் வாலி திகழ்ந்தார். அவர் மனதில் நினைப்பதை அல்லது அவர் இயல்புக்கு எது சரி என்பதை உணர்ந்து பாடல் எழுதியவர் வாலி. எம்ஜிஆரின் பெரும்பாலான படங்களுக்கு பாடல்கள் புனைந்தவர் வாலிதான்.

    தம்பீ நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று, நல்ல பேரை வாங்க வேண்டும் போன்ற எண்ணற்ற கொள்கைப் பாடல்களைத் தந்தார் வாலி. எம்ஜிஆரின் காதல் ரசம் சொட்டும் பாடல்களில் எது கவியரசர் கண்ணதாசன் எழுதியது, எது வாலி எழுதியது என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு இருக்கும்.

    இருந்தாலும் மறைந்தாலும்...

    இருந்தாலும் மறைந்தாலும்...

    கண்போன போக்கிலே கால் போகலாமா.. கால் போன போக்கிலே மனம் போகலாமா என்ற பாடலை எம்ஜிஆருக்காக பணம் படைத்தவன் படத்தில் படைத்தவர் வாலிதான். அதில் வரும் வரிகள்.. "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.." - இந்த வரிகளை மெய்ப்பிக்கவே எம்ஜிஆர் வாழ்ந்தது போல அமைந்தது அவர் வாழ்க்கை. கவிஞரின் வாக்கு சாதாரணமானதா என்ன!

    கண்ணதாசன் பாணிதான்

    கண்ணதாசன் பாணிதான்

    கண்ணதாசன் பாணியைப் பின்பற்றி எழுதுகிறீர்கள் என கூறுகிறார்களே என்று ஒரு முறை கேட்டதற்கு, இருக்கட்டுமேய்யா.. தங்கத்தோடுதானே ஒப்பி்ட்டுப் பேசுகிறார்கள், தகரத்தோடு இல்லையே, என்று அதையும் கவிதையாக்கியவர் வாலி.

    பின்னாளில், ஆமாம் நான் என்னையும் அறியாமலேயே கண்ணதாசனின் பாணியில் எழுத ஆரம்பித்துவிட்டேன். காரணம், அவரையே நான் அதிகம் படித்ததால் என்றார்.

    சிவாஜிக்கு...

    சிவாஜிக்கு...

    எம்ஜிஆர் படங்களுக்கு இணையாக சிவாஜி கணேசன் படங்களுக்கும் கவிஞர் வாலி பாடல் எழுதியிருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாதது. "நம்பர் கணக்கு பாத்தா, நான் சிவாஜிக்கு அதிக படங்களில் எழுதியிருக்கேன். எம்ஜிஆர் எழுதுகளில் நடிப்பை நிறுத்திட்டதால இந்தக் கணக்கு," என்றார் ஒரு முறை.

    ரஜினியுடன்...

    ரஜினியுடன்...

    பாடல் கணக்கு என்று பார்த்தால் ரஜினிக்கு அதிக பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலிதான். ரஜினியின் சுறுசுறுப்பு, அவரது ஸ்டைல், தாராள குணத்தை வாலியைப் போல கச்சிதமாக பாடல்களில் கொண்டு வந்த கவிஞர் யாருமில்லை. சிவாஜியில் ரஜினிக்காக வாலி எழுதிய அதிரடிக்காரன்... பாட்டு பட்டையைக் கிளப்பியது. அதில் ரஜினியின் படங்கள் பெயரைக் கொண்டே சரணங்களை அமைத்திருப்பார் வாலி.

    கமலுடன் ஆழ்ந்த நட்பு

    கமலுடன் ஆழ்ந்த நட்பு

    கமலுக்கும் வாலிக்கும் அத்தனை ஆழ்ந்த அன்பு, நட்பு உண்டு. அந்த நட்பில்தான் கமலின் சத்யா படத்தில் நடித்தார் வாலி. பின்னர் ஹேராம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார் வாலி. அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஒரு காதல் தோல்விப் பாடலை எழுத வாலியை அழைத்தார் கமல். வாலி முதலில் எழுதியது பிடிக்காமல், வேறு எழுதித்தரச் சொன்னாராம். நான்கைந்து முறை இப்படி ஆனதும், வாலி கோபத்துடன் ஒரு தாளை கமலிடம் கொடுத்து, "இதுக்குமேல உணர்ச்சிப் பூர்வமா எழுத முடியாதுய்யா," என்றாராம்.

    அந்தப் பாடல்தான் உன்ன நினைச்சேன், பாட்டுப் படிச்சேன் தங்கமே... பாடல்!

    இளையராஜா

    இளையராஜா

    எம்எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தியுடன் அதிகப் படங்களில் பணியாற்றியவர் வாலி. ஆனால் இளையராஜா வந்த பிறகு, அவருக்கு அதிக பாடல் எழுதியவர் என்ற பெருமையும் வாலிக்கு உண்டு. இளையராஜா - வாலியின் கூட்டணியில் வந்த பாடல்களில் பல இறவா வரம் பெற்றவை. மவுன ராகம், அஞ்சலி, வைதேகி காத்திருந்தாள், தளபதி, மன்னன்... அப்பப்பா... ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல!

    ஒரு வார்த்தையை மெட்டின் எந்த இடத்தில் வைத்தால் அர்த்தமும் இனிமையும் வெளிப்படும் எனத் தெரிந்தவர் அண்ணன் வாலி என்பார் இளையராஜா.

    வாலிக்கு இணை ஏது?

    வாலிக்கு இணை ஏது?

    கவிஞர் வாலிக்கு நிகராக இன்னொரு கவிஞரை திரையுலகில் இதுவரை பார்த்ததும் இல்லை, இனி பார்க்கப் போவதும் இல்லை. அப்படி ஒரு மகத்தான ஆற்றல் படைத்த கவிராகத் திகழ்ந்தார் வாலி. அவர் மரணம் பேரிழப்பு என்பது வெறும் வார்த்தையல்ல... சத்தியமான உண்மை!

    English summary
    A Tribute to late legend, writer, poet Vaali
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X