»   »  சுடாத 'நெருப்பு'

சுடாத 'நெருப்பு'

Subscribe to Oneindia Tamil


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ராம் கோபால் வர்மாவின் ஆக், தோல்விப் பட வரிசையில் படு வேகமாக சேர்ந்துள்ளதாம்.


30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும் பிரளயத்தை ஏற்படுத்திய படம் ஷோலே. இத்தனை ஆண்டுகளானாலும் கூட அம்ஜத்கானின் அந்த மிரட்டல் நடிப்பையும், மெகபூபா பாட்டையும், சஞ்சீவ்குமாரின் அசத்தல் நடிப்பையும், ஜெயா பாதுரி, ஹேமமாலினி ஆகியோரின் சிலிர்க்க வைக்கும் நடிப்பையும் ரசிகர்களால் மறக்க முடியாது. அமிதாப், தர்மேந்திராவுக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்த படமும் கூட.

இந்தப் படத்தை ரீமேக் செய்யத் திட்டமிட்டார் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா. ஆனால் ஒரிஜினல் ஷோலேவின் தயாரிப்பாளரான ஜி.பி.சிப்பியின் குடும்பத்தாரிடம் அவர் ரைட்ஸ் வாங்கவில்லை. இதையடுத்து அவர்கள் வழக்குப் போட்டனர்.

பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஷோலே என்ற பெயரை வைக்கக் கூடாது என வர்மாவுக்கு கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து தனது படத்திற்கு ஆக் (அதாவது நெருப்பு என்று பொருள்) பெயரிட்டார் வர்மா.

அமிதாப் வேடத்தில் பிரஷாந்த் ராஜ் என்பவரும், தர்மேந்திரா ரோலில் அஜய் தேவ்கனும், ஜெயா பாதுரி வேடத்தில் சுஷ்மிதா சென்னும், ஹேமமாலினி கேரக்டரில் நிஷா கோத்தாரியும் (நம்ம அமோகாதான்) நடித்தனர்.

சிலிர்க்க வைத்த அம்ஜத்கான் கேரக்டரில் அமிதாப் பச்சனையும், சஞ்சீவ் குமார் வேடத்தில் மோகன்லாலையும் போட்டு பெரும் பொருட் செலவில் படத்தை எடுத்தார் வர்மா. ஒரு வழியாக படமும் வெளியானது.

ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளார் வர்மா. அமிதாப் பச்சனை இப்படி கேவலமாக இதுவரை யாரும் காட்டியிருக்கவில்லை என்று வட இந்தியப் பத்திரிக்கைகள் வர்மாவை திட்டித் தீர்த்துள்ளன.

அதை விட அமிதாப் கேரக்டரில் நடித்துள்ள நடிகருக்குத்தான் கடும் விமர்சனங்கள். மேலும் பெரும் புகழ் பெற்ற 'மெகபூபா பாட்டுக்கு' ஊர்மிளா மடோன்கர் ஆடிய ஆட்டம் படு ஆபாசமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தி ரசிகர்களும் ஷோலேவின் ரீமேக்கான ஆக்-ஐ விரும்பவில்லை. இதனால் படம் தோல்விப் பட வரிசையில் சேர்ந்துள்ளதாம். வர்மாவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்றும் பல பத்திரிக்கைகள் விமர்சனம் செய்துள்ளனவாம்.

ஷோலேவின் பெயரைக் கெடுக்கும்படியான படம் இது என்றும் குட்டு கிடைத்துள்ளது வர்மாவுக்கு

இதற்கிடையே, பிரபல தயாரிப்பாளரும், முன்னாள் பத்திரிக்கையாளருமான பிரித்தீஷ் நந்தி பெரும் பொருட்செலவில் ஷோலேவை ரீமேக் செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்கான உரிமையையும் அவர் சிப்பி குடும்பத்தாரிடமிருந்து வாங்கியுள்ளாராம்.

Read more about: aag

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil