ஈகோவால் மிஷ்கினிடம் பேசாமல் இருந்த நடிகர் பிரசன்னா... பின் ஈகோ உடைந்தது எப்போது தெரியுமா?
சென்னை: நடிகர் பிரசன்னா நடிப்பில் இந்த ஆண்டு ஃபிங்கர்டிப் சீசன் 2 மற்றும் விக்டிம் ஆகிய இரண்டு வெப் சீரிஸுகள் வெளிவந்தன.
இதனைத் தவிர்த்து விஷாலுடன் அவர் நடித்துக் கொண்டிருந்த துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் பற்றி பிரசன்னா முன்னதாக பேசியிருந்த சுவாரசியமான வீடியோ ஒன்று தற்சமயம் வைரலாகியுள்ளது.

மிஷ்கின் பிரசன்னா அஞ்சாதே
சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்த அஞ்சாதே திரைப்படத்தில் பிரசன்னா முதன்முறையாக வில்லனாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் நடித்திருந்த அனைவருக்குமே மிஷ்கின் நற்பெயரை வாங்கிக் கொடுத்திருந்தார். படமும் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்று மிஷ்கினின் குறிப்பிடத்தக்க படங்களில் அஞ்சாதே ஒரு முக்கியமான படமாக திகழ்கிறது.

துப்பறிவாளன்
அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் விஷாலை வைத்து துப்பறிவாளன் திரைப்படத்தை மிஷ்கின் இயக்கிய போது அதில் இரண்டாவது கதாநாயகனாக பிரசன்னா நடித்தார். அந்தப் படமும் வெற்றி பெற்றது அதன் பிறகு அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க துவங்கியபோது அதிலும் பிரசன்னா ஒப்பந்தமானார். ஆனால் விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார்.

கோபம் ஈகோ
இப்படி மிஷ்கின் இயக்கத்தில் மூன்று திரைப்படங்களில் நடித்திருக்கும் பிரசன்னா அஞ்சாதே திரைப்படத்திற்கு பிறகு அவரிடம் ஏழு ஆண்டுகள் ஈகோ காரணமாக பேசவில்லையாம். நந்தலாலா திரைப்படம் அறிவிக்கப்பட்டபோது அதில் மிஸ்கின்தான் நடிக்கிறார் என்று தெரிந்ததும் பிரசன்னாவிற்கு கோபம் வந்துவிட்டதாம். நடிப்பதற்கு தான் நடிகர்கள் இருக்கிறோமே இயக்குநர்கள் அவர்கள் வேலையை மட்டும் ஏன் பார்க்கக் கூடாது என்ற ஈகோ இருந்ததாம். நந்தலாலா படம் பார்த்தபோது அவருடைய நடிப்பு பிடித்திருந்ததும் அதை பாராட்டுவதற்கு கூட பேசவில்லையாம்.

நெகிழ்ச்சி
சில ஆண்டுகளுக்கு பின் வெளியான ஓநாயும் ஆட்டுக் குட்டியும் திரைப்படத்தை பார்த்து தன்னுடைய எண்ணத்திலிருந்து மாறினாரஅம் பிரசன்னா. ஒரு நடிகனால் கூட, கிளைமாக்ஸ் காட்சியில் மிஷ்கின் நடித்தது போல் நடிக்க முடியாது என்றும் அந்தப் படத்தை பார்த்த பின்னர் உடனே தன்னுடைய ஈகோவை உடைத்துவிட்டு அவரிடம் பேசி பாராட்டியதாகவும் பிரசன்னா கூறியிருக்கிறார். மிஷ்கின் என்ற பெயரை கேட்டால் என்ன அது வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று ஒரு ஆச்சரியம் எழும், அதே போலத்தான் அவருடைய குணமும் என்று பிரசன்னா மிஷ்கினை வெகுவாக பாராட்டியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











