twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வடை முறுக்கு விற்கும் சிறுவனாக வாழ்க்கையை தொடங்கிய எம்.எஸ்.வி...

    |

    சென்னை: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஃபேஸ்புக்கில் இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் சிவகுமார், எம்.எஸ்.வியின் ஆரம்பகால வாழ்க்கையை விவரித்திருக்கிறார்.

    நடிகர் சிவகுமார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

    1940ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி. கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ ஜூபிடர் நிறுவனம் 'கண்ணகி' -'ராஜகுமாரி' - படங்கள் மூலம் அன்று புகழ் பெற்றிருந்தது.

    ஒரு புதுப்படத்துக்கு, மியூசிக் டைரக்டர் பாடல் கம்போஸ் செய்து கொண்டிருந்தார். டியூன் திருப்திகரமாக வரவில்லை. நாளை பார்க்கலாம் என்று இரவு 9 மணிக்கு கிளம்பி விட்டார்.

    ஆபீசில், மேஜை நாற்காலிகளைத் துடைத்து, அறையைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்து, சாமி படங்களுக்கு மாலை போட்டு, பூஜைக்கு தயார் செய்து வைக்கும் ஆபீஸ் பையன் ஹார்மோனியத்தை திறந்து ஒரு டியூன் வாசித்தான்.

    Actor Sivakumar Speaks about M.S.Viswanathan

    கூட இருந்த சிறுவன் பலே என்றான். மறுநாள் மியூசிக் டைரக்டர் வந்தார். ஹார்மோனியம் இடம் மாறி இருந்தது. 'யார்ரா அவன் பொட்டிய தொட்டது' - சத்தம் போட்டார்.

    ஒரு நிமிட அமைதி. 'சார், இவன் நேத்து ஹார்மோனியத்தில ஒரு டியூன் வாசிச்சான் சார்'- உடன் இருந்த பையன் போட்டுக் கொடுத்தான்.

    ஒரு வினாடி அவருக்கு கோபம்... 'இங்கே வாடா'.. நடுங்கிக்கொண்டே வந்தான் சிறுவன்.

    'எங்கே அதை வாசிச்சுக்காட்டு'... வாசித்தான்... மீண்டும்

    ஒரு நிமிடம் அமைதி...

    ' சரி, இந்த டியூனை நீதான் போட்டேன்னு யார் கிட்டயும் சொல்லாதே'...

    படத்தில், அந்த டியூனில் வந்த பாட்டு 'ஹிட்'!..

    அதே படத்துக்கு சிறுவன் போட்ட, இன்னொரு டியூனும் 'ஹிட்'! .

    அடுத்த படத்திலும் சிறுவன் கம்போஸ் செய்த 3 பாடல்கள் 'ஹிட்'.. ஆனால், மியூசிக் டைரக்டர் பெயர் மட்டும், டைட்டிலில்...

    சிறுவனுக்கு சிறு பாராட்டுக் கூட இல்லை.

    ஜூபிடர் நிறுவனம் சென்னைக்கு குடி பெயர்ந்தது... காமிரா, லைட், மைக், மேஜை நாற்காலி எல்லாம் வேன்களில் ஏற்றி, வண்டிகள் புறப்படத்தயாராக இருந்தன.

    ஓடி வந்த மியூசிக் டைரக்டர் '-முதலாளி, எதை வேணும்னாலும் விட்டுட்டுப் போங்க. இவனை மட்டும் விட்டுடாதீங்க. இவன், தங்கம், வைரம், வைடூரியம் !!

    உங்க சமீபத்திய படங்கள்ள 'ஹிட்டான பாட்டு பூராவும் இவன் போட்டது'- என்றார்.

    சிறுவன் கண்களில் ரத்தக் கண்ணீர்... மடார் என்று குருவின் காலைக் கட்டிக்கொண்டு கண்ணீரால் அவர் பாதங்களுக்கு அபிசேகம் செய்தான்..

    அவன் தான் - கேரளாவில் சினிமா தியேட்டரில், வடை முறுக்கு விற்கும் சிறுவனாக வாழ்க்கையைத் துவக்கி 1200 திரைப் படங்களுக்கும் மேலாக இசையமைத்து, 4 தலைமுறை ஹீரோக்களின் படங்களுக்கு, தன் இசையால் உயிர் கொடுத்த நம் பேரன்புக்குரிய 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.வி.

    அந்த மியூசிக் டைரக்டர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு..

    தன் ஆசானை கடைசி காலத்தில் தன் வீட்டில் வைத்து கவனித்ததுடன் அவர் மறைந்தபோது ஈமச்சடங்கு செய்ததும் இவர்தான் . அத்துடன் எஸ்.எம்.எஸ் மனைவியும் கடைசி மூச்சுவரை இவர் பாதுகாப்பில் இருந்தார்.

    நகைச்சுவை வேந்தன் சந்திரபாபு வேண்டுகோளை ஏற்று அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்ததும் இவரே.

    'உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்

    உலகம் உன்னிடம் மயங்கும் -

    நிலை உயரும்போது பணிவுகொண்டால்

    உயிர்கள் உன்னை வணங்கும்'-

    ஆம், வணக்கத்துக்குரிய

    மேதைதான் நம் எம்.எஸ்.வி.அவர்கள்

    இவ்வாறு சிவகுமார் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

    Actor Sivakumar Speaks about M.S.Viswanathan

    அன்புமணி

    இதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளரான அன்புமணி இராமதாஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

    மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

    சாதாரண குடும்பத்தில் பிறந்து வறுமையில் வாடிய விஸ்வநாதன் தமது இசை ஞானத்தால் உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளராக உயர்ந்தவர். உலகின் சிறந்த இசை வடிவங்களை தமது திரையிசையில் பயன்படுத்தினார். கவியரசர் கண்ணதாசனின் வைர வரிகளுக்கு உயிர் கொடுத்தார். இவரது இசையில் உருவான பாடல்கள் மக்களுக்கு தன்னம்பிக்கையை அளித்தன. சோர்ந்து கிடந்த உள்ளங்களுக்கு தைரியமூட்டி வாழ்க்கையில் சாதிக்க தூண்டுகோலாக இருந்தது இவரது இசையாகும்.

    இத்தகைய சிறப்பு மிக்க விஸ்வநாதனுக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்த போதிலும், அரசாங்கம் இவரது சாதனைகளை அங்கீகரிக்காதது வருத்தம் அளிக்கிறது. இவர் மறைந்தாலும், கோடானு கோடி மக்களின் இதயங்களில் இசையாக வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது உறுதி.

    இவரது மறைவு இந்திய திரையுலகிற்கு மட்டுமின்றி உலக இசைக்கே ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்

    English summary
    Senior actor Sivakumar wrote his facebook wall on losing the legend of music MS Viswanathan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X