பாண்டி பஜார் பிளாட்ஃபார்ம்ல படுத்து தூங்கினேன்.. திடீரென சேனல் தொடங்கிய விஜய்யின் அப்பா உருக்கம்!
சென்னை: திடீரென யூட்யூப் சேனல் தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் அப்பா பல்வேறு உருக்கமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
கோலிவுட்டில் இயக்குநர், எழுத்தாளர் நடிகர், தயாரிப்பாளர் என பல முகங்களுடன் வலம் வருபவர் எஸ் ஏ சந்திர சேகர். 1978ஆம் ஆண்டு வெளியான அவள் ஒரு பச்சை குழந்தை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
1981ஆம் ஆண்டு சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் அவருக்கு பெயரையும் புகழையும் கொடுத்தது. தமிழில் 70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர்.
8 மாத குழந்தை கிளாடி சாராவின் இதயநோய் சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்

நாளைய தீர்ப்பு மூலம் மகன் அறிமுகம்
இயக்குநர் எஸ்ஏ சந்திர சேகர் ராமேஸ்வரத்தை பூர்விகமாக கொண்டவர். கர்நாடக இசை பாடகியான ஷோபாவை திருமணம் செய்து கொண்டார் எஸ் ஏ சந்திரசேகர். நடிகர் விஜய்யின் தந்தைதான் இவர். 1991ஆம் ஆண்டு தான் இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தனது மகனான நடிகர் விஜய்யை அறிமுகப்படுத்தினார் எஸ்ஏ சந்திரசேகர்.

புதிய யூட்யூப் சேனல் தொடங்கிய எஸ்ஏசி
எஸ்ஏ சந்திரசேகர் - ஷோபா தம்பதிக்கு வித்யா என்ற மகள் பிறந்தார். ஆனால் 2 வயதிலேயே அவர் மரணமடைந்து விட்டார். எஸ்ஏ சந்திரசேகர் கடைசியாக கேப்மாரி என்ற படத்தை இயக்கி நடித்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் புதிய யூட்யூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் தான் கடந்து வந்த பாதையை உருக்கமாக கூறியுள்ளார் எஸ்ஏ சந்திரசேகர்.

எல்லா தொழிலும் முடங்கிக் கிடக்குது
அவர் பேசியிருப்பதாவது, கோவிட் 19 முடிந்துவிட்டது. கோவிட் 20யும் முடிந்து விட்டது. கோவிட் 21 நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து கோவிட் 22 வரப்போகுதுன்னு சொல்றாங்க. நாட்டில் எல்லா தொழிலும் முடங்கிக் கிடக்குது. கூலி வேலை செய்றவங்க.. அன்றாட கூலியை நம்பி இருக்குறவங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க..

எனக்கு சோறுபோட்ட சினிமா முடங்கிடுச்சா?
அடுதுத்து என்னோட தொழில் சினிமா.. சினிமா முடங்கிடுச்சா.. எனக்கு சோறுபோட்ட சினிமா முடங்கிடுச்சா.. என்னை வாழ வைத்த சினிமா முடங்கிடுச்சா
பெரிய ஸ்டார்ஸ் படம் ரிலீஸ் ஆனால் பட்டாசு வெடிச்சு கொண்டாடுவாங்க அந்த பட்டாசு சத்தம் எங்கே,தியேட்டர்ல ஒவ்வொரு சீன்லேயும் கை தட்டி ரசிப்பாங்களே அந்த கைத்தட்டல் எங்கே?

முடங்கி கிடந்தா மூச்சு அடங்கிடுமோன்னு பயம்
சினிமா ஓடிடிக்கு மாறிடுச்சா? அங்கேயும் ஸ்டார்கள் படத்துக்குதான் முக்கியத்துவம் கொடுக்றாங்க. அப்போ எங்கள மாதிரி சின்ன படம் எடுக்குறவங்க நிலைமை என்ன ஆகுறது? வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தா மூச்சு அடங்கிடுமோன்னு பயமா இருக்கு.

சினிமா மூலம் உங்களுடன் பேசினேன்
என்னை நானே ஆக்ட்டிவா வச்சுக்கணும்னு நினைக்கிறேன். ஆக்டிவா வச்சுக்கிட்டாதான் எனர்ஜி கிடைக்கும்.எனர்ஜி இருந்ததான் நடமாட முடியும். இத்தனை ஆண்டுகள் சினிமா மூலம் உங்களுடன் பேசினேன். சமூகம் அரசியல் நல்லவர்கள் கெட்டவர்கள் நாட்டு நடப்புகளை கூறினேன், எல்லாவற்றையும் சினிமா மூலம் பேசிட்டேன்.

ஏன் நம்ம நேருக்கு நேர் பேசக்கூடாது?
இன்னைக்கு இருக்குற இந்த டெக்னாலஜி உலகத்துல ஏன் நம்ம நேருக்கு நேர் பேசக்கூடாது? யூட்யூப் மூலமா, என் லைஃப்ப ஏன் நான் உங்கக்கூட ஷேர் பண்ணிக்கக்கூடாது. இப்போ இருந்து ஒரு 55 வருஷத்துக்கு பின்னாடி திரும்பி பாக்குறேன். சினிமாவுல டைரக்டர் ஆயிடனும்னு கனவோட வீட்டுல கூட சொல்லாம ஓடி வந்தேன்.

பாண்டி பஜார் பிளாட் ஃபார்ம்ல..
இங்க இருக்குறதுக்கு இடம் இல்ல. யார் வீட்டுக்கும் போறதுக்கு மனசு வரல, எங்க தங்குறது? சென்னை டி நகர் பாண்டிபஜார் பிளாட்ஃபார்ம்ல தங்கினேன். இப்போ அந்த இடத்துல நாயுடு ஹால் ஷோ ரூம் இருக்கு. அன்னைக்கு சாதாரணமா சின்ன சின்ன பொட்டிக்கடை இருந்துச்சு. ஒரு கார்ப்ரேஷன் பைப் இருந்துச்சு. அந்த இடத்துல 45 நாள் படுத்துக் கிடந்திருக்கேன்.

சைக்கிள் ரிக்ஷால படுத்துப்பேன்
சில நாள் மழை வரும், அப்போ ஓரமா நிக்கிற சைக்கிள் ரிக்ஷாவுல போய் படுத்துப்பேன். இன்னைக்கு நான் என்னை திரும்பி பார்க்குறேன். 70 படம் இயக்கியிருக்கேன். சில ஹீரோஸ் சில ஹீரோயினை அறிமுகப்படுத்தியிருக்கேன். டைரக்டர்ஸ் டெக்னிஷியன்ஸ் என்கிட்டே இருந்து போயிருக்காங்க.

உண்மையை உடைத்து சொல்லப் போகிறேன்
இதெல்லாம் ஒரு மேஜிக் மாதிரி இருக்கு, வாழ்க்கையில் சாதிக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு என் வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கும். எந்த கற்பனையும் இல்லை. என் வாழ்க்கையில் நடந்த சந்தோஷங்கள் துக்கங்கள் என்னை தோள் கொடுத்து தூக்கியவர்கள், இடையில் வந்த அரசியல் குறுக்கீடுகள், நம்பிக்கைக்குரியவர்கள், நன்றி மறந்தவர்கள், இப்படி எல்லாவற்றையும் உண்மையை உடைத்து சொல்லப் போகிறேன்.. இவ்வாறு பேசியுள்ளார் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர்.


Click it and Unblock the Notifications











