twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாளைய தீர்ப்பு முதல் தலைவா வரை... - விஜய்யின் 20 ஆண்டு சினிமா!

    By Shankar
    |

    சென்னை: 50-க்கும் மேற்பட்ட படங்கள், பல அசத்தலான வெற்றிகள், ஏகப்பட்ட ரசிகர்கள், அரசியலிலும் ஓரளவு செல்வாக்கு என வலம் வரும் விஜய்க்கு இன்று பிறந்த நாள்.

    சினிமாவில் அவர் நடிக்க ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆன நிலையில் வரும் பிறந்த நாள் என்பதால் கூடுதல் முக்கியத்துவம்.

    இந்த நாளில் வழக்கமாக அவர் காலையிலிருந்து மாலை வரை நலத்திட்ட உதவி, ரசிகர்கள் கொண்டாட்டம் என பிஸியாக இருப்பார். இந்த முறை அதெல்லாம் கட்.

    அதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்படுகின்றன. விஜய் மீதும் அவர் படங்கள் மீதும் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், இன்று சினிமாவில் அவர் அடைந்திருக்கும் உயரம் சாதாரணமாகக் கிடைத்துவிடவில்லை.

    நாளைய தீர்ப்பு

    நாளைய தீர்ப்பு

    விஜய் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. 1992-ல் வெளியானது. அதற்கு முன்பும் கூட நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட சில படங்களில் சிறுவனாக தலைகாட்டியிருக்கிறார். ஆனால் ஹீரோவாக அவர் நடித்தது நாளைய தீர்ப்பில்தான். ஆனால் அந்தப் படத்தை அத்தனை சுலபத்தில் பத்திரிகைகள் ஏற்கவில்லை. அப்படிக் கிண்டலடித்தன.

    விஜயகாந்த் செய்த உதவி

    விஜயகாந்த் செய்த உதவி

    முதல் படத்தில் அங்கீகாரம் கிடைக்காத நிலையில், அன்றைக்கு முன்னணியிலிருந்த நடிகர் விஜயகாந்த் உதவியை நாடினார் விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன். தான் இந்த நிலைக்கு உயர எஸ்ஏசி முக்கிய காரணம் என்பதால், விஜய்க்காக ஒரு படத்தில் நடிக்க சம்மதித்தார் விஜயககாந்த். அந்தப் படம்தான் செந்தூரப்பாண்டி. வழக்கமான எஸ்ஏசி படம்தான் என்றாலும், விஜயகாந்த் என்ற பிராண்ட் அந்தப் படத்தை ஓரளவு வெற்றிப் படமாக்கியது.

    ரசிகன்

    ரசிகன்

    அடுத்து விஜய் சோலோ ஹீரோவாக களமிறங்கிய படம் ரசிகன். சங்கவியின் கவர்ச்சி, கவுண்டரின் கலகல காமெடி என கூடுதல் மசாலாக்களுடன் வந்த அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

    கேவலமான தாக்கு

    கேவலமான தாக்கு

    ஆனால் அப்போதும் கூட விஜய்யை மீடியா - பத்திரிகை உலகம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு முன்னணி வார இதழ் 'இந்த மூஞ்சியை காசு கொடுத்துப் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கியம் ரசிகர்களுக்கு,' என விமர்சனத்தில் எழுதியது. இதைக் கண்டித்து விஜய்யின் தந்தை நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக, அடுத்த இதழில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது பத்திரிகை. விஜய் மாதிரி நல்ல அழகான நடிகரே இல்லை எனும் அளவுக்கு வர்ணித்து மன்னிப்புக் கோரியது.

    காலத்தின் கோலம்

    காலத்தின் கோலம்

    இன்று அதே பத்திரிகை விஜய்க்கு சிறப்பு மலர் வெளியிடுகிறது. விஜய்யும் அலுவலகத்துக்கே போய் அதை வெளியிட்டு சிறப்பிக்கிறார். ஆனால் முன்னணிப் பத்திரிகைகள் எதுவும் கண்டுகொள்ளாத காலத்தில் விஜய்யை தூக்கி வைத்துக் கொண்டாடி மற்ற பத்திரிகைகளை - மீடியாவை விஜய் கண்டு கொள்வதே இல்லை என்பது வேறு விஷயம்!

    தொடர் தோல்விகள்

    தொடர் தோல்விகள்

    ஆங்... விஷயத்துக்கு வருவோம்... ரசிகனுக்குப் பிறகு விஜய் நடித்த தேவா, விஷ்ணு, சந்திரலேகா, விஷ்ணு, ராஜாவின் பார்வையிலே, கோயம்புத்தூர் மாப்பிள்ளை போன்ற படங்கள் பெரிதாகப் போகவில்லை.

    பூவே உனக்காக

    பூவே உனக்காக

    அப்போதுதான் விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக என்ற படம் வெளியானது. மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. விஜய்யை கொஞ்சம் கவனிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அதற்கடுத்து வந்த நான்கு படங்கள் தோல்வியைத் தழுவின.

    லவ் டுடே

    லவ் டுடே

    விஜய் என்ற ஹீரோவுக்கு ஓரளவு மரியாதை உருவாக்கித் தந்த படம் லவ் டுடே. விஜய் - ரகுவரன் - சுவலட்சுமியின் நடிப்பு அந்தப் படத்தை பெரிய வெற்றிப் படமாக்கியது. பாக்ஸ் ஆபீஸில் விஜய்க்கென தனி மார்க்கெட் இருப்பதைப் புரிய வைத்தது இந்தப் படம்.

    சிவாஜி கணேசனுடன்...

    சிவாஜி கணேசனுடன்...

    தொடர்ந்து தந்தை எஸ்ஏசி இயக்கத்தில் ஒன்ஸ்மோர் என்ற படத்தில் நடித்தார். இதில் சிவாஜி கணேசன் முக்கிய வேடத்தில் நடித்தார். அவருடன் சரோஜா தேவியும் நடித்திருந்தார். பழைய இருவர் உள்ளம் பட க்ளைமாக்ஸை வைத்து சுவாரஸ்யமாக கதையை அமைத்திருந்தார் எஸ்ஏசி. படமும் நன்றாகப் போனது.

    காதலுக்கு மரியாதை

    காதலுக்கு மரியாதை

    ஒன்ஸ்மோருக்குப் பிறகு வசந்த் இயக்கத்தில் விஜய் நடித்த நேருக்கு நேரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பிறகு சங்கிலி முருகன் தயாரிப்பில் காதலுக்கு மரியாதை என்ற படத்தில் பாசில் இயக்கத்தில் நடித்தார் விஜய். அவரை ஒரு முழுமையான நாயகனாக மாற்றியது இந்தப் படம்தான். படமும் 200 நாட்களைத் தாண்டி ஓடி வசூலைக் குவித்தது. இந்த வெற்றிக்கு இளையராஜாவின் பாடல்களும் முக்கிய காரணமாக அமைந்தன. விஜய்யின் கேரியரில் மறக்க முடியாத படமாக அமைந்தது காதலுக்கு மரியாதை.

    தொடர்ந்து வெற்றிகள்...

    தொடர்ந்து வெற்றிகள்...

    இந்தப் படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து விஜய் நடித்த நினைத்தேன் வந்தாய் மற்றும் ப்ரியமுடன் ஆகிய படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. அங்கிருந்து ஆரம்பித்தது சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலி மீதான விஜய்யின் காதல். கூடவே தனக்கு இணையாக வளர்ந்து வந்த அஜீத்துடனும் ஒரு அறிவிக்கப்படாத போட்டி ஆரம்பமானது.

    துள்ளாத மனமும் துள்ளும்

    துள்ளாத மனமும் துள்ளும்

    விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் என்றென்றும் காதல் ஆகிய இரு படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இரண்டு படங்களுமே வெற்றி பெற்று நூறாவது நாளைத் தாண்டின. இது விஜய்யின் மார்க்கெட்டை இன்னும் ஏற்றிவிட்டது.

    அப்பா இயக்கத்தில் கடைசி படம்

    அப்பா இயக்கத்தில் கடைசி படம்

    ஆனால் அதற்கடுத்து வந்த மூன்று படங்கள் தோல்வியைத் தழுவின. அதில் ஒன்று நெஞ்சினிலே. இதை இயக்கியவர் எஸ் ஏ சந்திரசேகரன். இதற்குப் பிறகு விஜய்யை ஹீரோவாக வைத்து எஸ்ஏ சந்திரசேகரன் படம் இயக்கவில்லை. விஜய் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்பதே உண்மை.

    குஷி

    குஷி

    கண்ணுக்குள் நிலவு, மின்சாரக் கண்ணா ஆகிய இரு படங்களும் தோல்வியைத் தழுவியதால், அடுத்த படத்தை வெற்றிப் படமாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த விஜய்க்கு கை கொடுத்தவர் எஸ் ஜே சூர்யா. அவர் இயக்கிய குஷி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்து வந்த ப்ரியமானவளே மற்றும் ப்ரெண்ட்ஸ் ஆகிய படங்கள் நல்ல வெற்றிகளைப் பெற்றன.

    பகவதி

    பகவதி

    தொடர்ந்து ஷாஜகான், தமிழன், யூத் போன்ற படங்களில் கருத்து கந்தசாமியாக வந்து ஏகப்பட்ட உபதேசங்களைச் சொல்லிக் கொண்டிருந்த விஜய், பகவதி படத்தில் அதிரடியாக ஆக்ஷன் ஹீரோவானார். கிட்டத்தட்ட பாட்ஷாவின் உல்டாவாக எடுக்கப்பட்ட அந்தப் படம் கமர்ஷியலாக நல்ல வெற்றியைப் பெற்றது.

    வசீகரா

    வசீகரா

    2003-ல் 3 படங்கள் நடித்தார் விஜய். அவற்றில் குறிப்பிடத்தக்கது வசீகரா. சினேகா முதன் முதலில் ஜோடி சேர்ந்த படம். இன்றும் விஜய்யை விமர்சிப்பவர்கள் கூட ரசிக்கும் படமாக அது அமைந்தது. ஆனால் அரசியல் காரணங்களால் அந்தப் படம் சரியாகப் போகவில்லை. அடுத்து வந்த புதிய கீதை அவுட். ஆனால் தொடர்ந்து வெளியான திருமலை விஜய்யை முழு ஆக்ஷன் ஹீரோவாகக் காட்டியது.

    கில்லி

    கில்லி

    விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத இன்னொரு முக்கியமான படம் கில்லி. இந்தப் படம் விஜய்யை விமர்சிப்பவர்களையும் கூட தியேட்டருக்கு இழுக்கும் அளவுக்கு கில்லியாக அமைந்தது. மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

    திருப்பாச்சி

    திருப்பாச்சி

    பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படம் இது. பக்கா ஆக்ஷன் மசாலா. த்ரிஷா ஜோடி. பரபரவென வேகமாக நகர்ந்த திரைக்கதையும் காட்சிகளும் படத்தை வெற்றி பெற வைத்தன.

    சச்சின்

    சச்சின்

    கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் நடித்த படம் சச்சின். இந்தப் படத்தை ஜான் மகேந்திரன் இயக்கினார். அப்போது ரஜினியின் சந்திரமுகி, கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களும் வெளியாகின. சந்திரமுகி வசூல், ஓட்டம் என அனைத்திலும் சரித்திரம் படைத்தது. சச்சினை 200 நாட்கள் கமலா தியேட்டரில் மட்டும் ஓட்டிப் பார்த்து விட்டுவிட்டார்கள். பின்னர் வெளியான சிவகாசியும் கூட வெற்றிப் படமாக அமைந்தது.

    ஆதியில் அடி...

    ஆதியில் அடி...

    ஆனால் ஆதி என்ற படம் விஜய்க்கு பெரிய சறுக்கலாக அமைந்தது. இதிலிருந்து மீள அவருக்கு ஒரு ஆண்டு ஆனது. அடுத்த படத்தில் அவர் பிரபு தேவாவுடன் கைகோர்த்தார். அதுதான் போக்கிரி. இந்தப் படமும் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

    அழகிய தமிழ் மகனில் ஆரம்பித்த சறுக்கல்..

    அழகிய தமிழ் மகனில் ஆரம்பித்த சறுக்கல்..

    விஜய்யின் கேரியரில் மோசமான காலகட்டமாக அமைந்தது அழகிய தமிழ்மகன் தொடங்கி, சுறா வரையிலான மூன்று ஆண்டுகள். அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, கெஸ்ட் ரோலில் வந்த பந்தயம் என எந்தப் படமும் ஓடவில்லை. விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் அவர் மீது ரெட் கார்டு போடும் அளவுக்கு நஷ்டங்களை ஏற்படுத்திய படங்கள் இவை.

    காவலன்

    காவலன்

    இந்த சரிவைத் தடுத்து நிறுத்திய காவலன் படம். அசின், ராஜ்கிரண் உடன் நடித்திருந்தனர். வடிவேலுவின் காமெடி இதில் ஹைலைட். படம் ஓரளவு வெற்றிப் பெற்றது. அடுத்து வந்த வேலாயுதமும் பரவாயில்லாமல் போனது.

    நண்பன்

    நண்பன்

    ஒரு காலத்தில் எஸ்ஏசியின் உதவியாளராக இருந்து, பெரிய இயக்குநராகிவிட்ட ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படம் நண்பன். த்ரீ இடியட்ஸின் ரீமேக். நல்ல வசூலைத் தந்த படம் இது.

    துப்பாக்கி

    துப்பாக்கி

    நண்பனுக்குப் பிறகு ஒரு ஆண்டு இடைவெளிவிட்டு வந்த விஜய் படம் துப்பாக்கி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வந்த இந்தப் படம் ரூ 100 கோடியை வசூலித்ததாகச் சொல்கிறார்கள்.

    தலைவா

    தலைவா

    விஜய் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் தலைவா. இந்தப் படத்துக்குப் பிறகு ஜில்லா என்ற படத்திலும், ஏஆர் முருகதாஸின் இன்னொரு படத்திலும் நடிக்கப் போகிறார் விஜய்.

    அரசியல்

    அரசியல்

    சினிமாவில் ஓரளவு வெற்றிகள் வரத் தொடங்கியதுமே தனது அரசியல் ஆசைகளை படங்களில் மெல்ல மெல்ல வெளிப்படுத்தத் தொடங்கினார் விஜய். சினிமாவைத் தாண்டு, வெளி நிகழ்ச்சிகளில் ரசிகர்களுக்கு உதவி, மக்களுக்கு நலத் திட்ட உதவி, பிறந்த நாளன்று உதவிகள் என ஒரு அரசியல்வாதி ஸ்டைலில் செயல்பட ஆரம்பித்தார். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனி அமைப்பையும் உருவாக்கினார். இது நடந்தது திமுக ஆட்சிக் காலத்தில்.

    தேர்தல் பிரச்சாரம்

    தேர்தல் பிரச்சாரம்

    விஜய்க்கும் அன்றைய ஆளும் கட்சிக்கும் உரசல் மெல்ல மெல்ல ஆரம்பித்தது, காவலன் பட வெளியீட்டின் போதுதான். அப்போது திமுகவை எதிர்த்து பேட்டியெல்லாம் கொடுத்தார். தேர்தல் வந்தபோது, பகிரங்கமாக தனது ஆதரவை அதிமுகவுக்கு வழங்கினார். தந்தை எஸ்ஏசியுடன் போயஸ் தோட்டம் போய் ஜெயலலிதாவைச் சந்தித்தார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதிகமுவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார் எஸ்ஏசி.

    இன்றைய நெருக்கடி...

    இன்றைய நெருக்கடி...

    திமுக ஆட்சிக் காலத்திலாவது விஜய்யால் பகிரங்கமாக தனி இயக்கம் தொடங்கி, ஆளுங்கட்சிக்கு எதிராக பிரச்சாரமெல்லாம் செய்ய முடிந்தது. அமர்க்களமாக தனது இயக்கத்தின் நிகழ்ச்சிகளை நடத்த முடிந்தது. ஆனால் அவர் அணில் மாதிரி யாருக்கு உதவினாரோ, அவர்கள் ஆட்சியிலிருக்கும் இன்றைக்கு விஜய்யால் தனது பிறந்த நாள் நிகழ்ச்சியைக் கூட பகிரங்கமாக நடத்த முடியவில்லை. அதைப் பற்றி வெளிப்படையாக பேசவும் முடியாத நிலை.

    20 ஆண்டு திரைவாழ்க்கையில் இப்படி ஒரு சூழலில் பிறந்த நாள் கொண்டாடுவது விஜய்க்கு இதுதான் முதல் முறை!!

    English summary
    Actor Vijay is celebrating his 39th birth day today with out any grand bashes or parties.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X