»   »  ஐஸ்-அபிஷேக் கோலாகல கல்யாணம்

ஐஸ்-அபிஷேக் கோலாகல கல்யாணம்

Subscribe to Oneindia Tamil

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும், முன்னாள் உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் பிரதீக்ஷா இல்லத்தில் கோலாகலமாக திருமணம் நடந்தேறியது.

உலகப் பேரழகிகளில் ஒருவர் என்ற புகழுக்குரிய ஐஸ்வர்யாவும், இந்திய திரையுலகின் இமயங்களில் ஒருவரான அமிதாப் பச்சனின் ஒரே மகனான நடிகர் அபிஷேக் பச்சனும் காதலித்து வந்தபோது, இருவரும் எப்போது கல்யாணம் செய்வார்கள், கல்யாணம் எப்படி நடக்கும் என்ற எதிர்பார்ப்பும், பரபரப்புப் பேச்சுக்களும் இறக்கை கட்டிப் பறந்தன.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த இந்த கல்யாணம் வெள்ளிக்கிழமை மாலை அமிதாப் பச்சனின் இல்லத்தில் சிறப்பாக நடந்தேறியது.

கடந்த இரண்டு நாட்களாக அமிதாப் பச்சனின் வீட்டில் கல்யாணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் படு விமரிசையாக நடந்து வந்தன. முதல் நாளான நேற்று முன்தினம் சங்கீத் என்ற இசை நிகழ்ச்சி நடந்தது. நேற்று ஐஸ்வர்யாவுக்கு மருதாணி இடும் மெஹந்தி நடந்தது.

வெள்ளிக்கிழமை காலை முதல் கல்யாணமம் தொடர்பான சம்பிரதாயங்கள் தொடங்கின. மாலையில் அமிதாப்பச்சனின் ஜல்சா வீட்டிலிருந்து திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் வால்வோ சொகுசு பேருந்துகளில் பிரதீக்ஷா வீட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

மாப்பிள்ளை அபிஷேக் பச்சனும் பேருந்திலேயே அழைத்து வரப்பட்டார். அவருடன் தங்கை ஷ்வேதா நந்தா உள்ளிட்டோரும் உடன் வந்தனர்.

வட இந்திய முறைப்படியில் நீண்ட ஷெர்வானி (சந்தனக் கலரில்) அணிந்து, முகத்தை மறைக்கும் மலர் போர்வையுடன் அழைத்து வரப்பட்ட அபிஷேக், பிரதீக்ஷா இல்லத்தை அடைந்ததும் கீழே அழைத்து வரப்பட்டார்.

பேருந்திலிருந்து இறங்குவதற்கு முன்பு கைகளை மேலே உயர்த்தி சின்னதாக ஒரு டான்ஸ் போட்டார் அபிஷேக். அவரை தந்தை அமிதாப் பச்சன், தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோர் வரவேற்று குதிரை மீது ஏற்றி உள்ளே அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் திருமணம் நடந்தேறியது.

திருமணத்தைக் காணும் வாய்ப்பு இல்லாவிட்டாலும் கூட எப்படியாவது அபிஷேக், ஐஸ்வர்யாவை கல்யாண கோலத்தில் தரிசித்து விட வாய்ப்பு கிடைக்காதா என்ற எண்ணத்தில், வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் மும்பையில் உள்ள அமிதாப்பச்சனின் இல்லமான பிரதீக்ஷா முன்பு குவிந்ததிருந்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் அமிதாப்பின் பிரதீக்ஷா மற்றும் ஜல்சா இல்லங்களின் முன்பு குவிந்திருந்தனர். அதேபோல பெரும் திரளான பத்திரிக்கையாளர்கள், டிவி நிருபர்கள், கேமராமேன்களும் குவிந்திருந்தனர்.

இதன் காரணமாக பிரதீக்ஷா இல்லம் உள்ள சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil