»   »  தயாராகும் அபி-ஐஸ்: வெள்ளிக்கிழமை கல்யாணம்

தயாராகும் அபி-ஐஸ்: வெள்ளிக்கிழமை கல்யாணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரும் ஆர்வத்தைத் தூண்டி விட்டுள்ள அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் திருமண நிகழ்ச்சிகள் இன்று முதல் தொடங்குகின்றன. வெள்ளிக்கிழமை மாலை அபிஷேக்கின் மனைவி ஆகிறார் ஐஸ்வர்யா ராய்.

மிகப் பெரிய அளவில் வட இந்தியப் பத்திரிக்கைகளால் வர்ணிக்கப்பட்டு வந்த, எழுதப்பட்டு வந்த ஐஸ்வர்யா, அபிஷேக் கல்யாணம் 3 நாள் விழாவாக நடைபெறுகிறது.

முதல் நாளான இன்று அமிதாப்பச்சனின் மும்பை பங்களாவில் சங்கீத் என்ற இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இதற்காக அமிதாப் பச்சனின் பங்களாவானா பிரதீக்ஷாவில் சினிமா செட் போல அலங்கார அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு நடைபெறும் இசை நிகழ்ச்சியில் சிக்கந்தர் கெர் (அனுபம் கெரின் மகன்), கோல்டி பஹால் உள்ளிட்டோர் பங்கேற்று ஆடிப் பாடுகின்றனர். ஹிருத்திக் ரோஷனும் கூட ஒரு பாடலுக்கு ஆடவுள்ளாராம்.

மேலும், சூப்பர் ஹிட் பாடலான கஜ்ராரே கஜ்ராரே பாட்டுக்கு ஐஸும், அபிஷேக்கும் ஆடிப் பாடவுள்ளனர்.

இதையடுத்து நாளை மெஹந்தி அணிவிக்கும் நிகழ்ச்சி (அதாங்க மருதாணி வக்கிறது) நடைபெறுகிறது. இதில் இரு வீட்டார் மற்றும் அவர்களின் மிக மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெறுகிறது. அன்று மாலை 5.30 மணிக்கு தாலி கட்டுகிறார் அபிஷேக்.

திருமணத்திற்குப் பின்னர் மும்பையில் திரையுலகினருக்கான பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர் அமிதாப்-ஐஸ்வர்யா குடும்பத்தினர்.

திருமண நிகழ்ச்சியையொட்டி அமிதாப்பின் பிரதீக்ஷா மற்றும் ஜல்சா ஆகிய இரு பங்களாக்களிலும் ஏற்பாடுகள் படு துரிதமாக நடந்து வருகின்றன. இரு பங்களாவும் ேகாட்டை போல கடும் பாதுகாப்புக்கு மத்தியில் உள்ளன.

திருமணத்திற்கு மொத்தமே 20 பேர் வரைதான் அழைக்கப்பட்டுள்ளனர். சிவசேனா தலைவர் பால் தாக்கரே, சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அமர்சிங் (அதானே, இவர் இல்லமலா), தொழிலதிபர் அனில் அம்பானி, அவரது மனைவி நடிகை டினா, அனுபம் கெர், கரண் ஜோகர், சஹாரா நிறுவன தலைவர் சுப்ரதோ ராய் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிலரை மட்டுமே அமிதாப் அழைத்துள்ளார்.

அபிஷேக்கின் பாட்டி தேஜி பச்சன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யாவும் தேனிலவுக்கு எங்கும் போகவில்லையாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil