»   »  மீண்டும் 'ஐஸ்வர்யா' வேட்டை!

மீண்டும் 'ஐஸ்வர்யா' வேட்டை!

Subscribe to Oneindia Tamil
Aishwarya Rai
ரஜினியுடன் ஐஸ்வர்யா ராயை ஜோடி சேர்க்க இருமுறை மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்த நிலையில், தற்போது 3வது முறையாக ரோபோட்டில் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க முயற்சிகள் தொடங்கியுள்ளனவாம்.

ரஜினியுடன், ஐஸ்வர்யாவை ஜோடி சேர்க்க முதன் முதலில் படையப்பாவுக்காக முயற்சிக்கப்பட்டது. ஆனால் ஐஸ்வர்யா வரவில்லை. இதையடுத்து ரம்யா கிருஷ்ணன் நடித்து அசத்தினார்.

பிறகு சந்திரமுகிக்காக முயற்சிகள் நடந்தன. மிகக் கடுமையாக முயற்சித்தும் கூட ஐஸ்வர்யா கிடைக்கவில்லை. இதையடுத்து சிம்ரனை புக் செய்தனர். பின்னர் அவரும் போய் கடைசியில் ஜோதிகா நடித்து பெயரைத் தட்டிச் சென்றார்.

சந்திரமுகியில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டதற்காக வருத்தப்பட்டதாக சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தபோது ஐஸ்வர்யா கூறியிருந்தார். மேலும் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால், தனக்குப் பொருத்தமானதாக இருந்தால் நிச்சயம் பரிசீலிப்பேன் என்றும் கூறியிருந்தார்.

சந்திரமுகியைத் தொடர்ந்து சிவாஜி படத்திலும் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க முயற்சிக்கப்பட்டது. ஷங்கர் கடுமையாக முயன்றும் ஐஸ்வர்யா நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. இறுதியில் ஷ்ரியா நடித்தார். (இதற்கிடையே ஐஸ்வர்யாவுக்கு திருமணமும் நடந்தது).

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஐஸ்வர்யாவின் பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது. இம்முறை ரோபோட்டில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க பேச்சுக்கள் நடந்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஷங்கர் மும்பைக்குச் சென்றிருந்தார். அப்போது ஐஸ்வர்யாவை சந்தித்ததாக கூறப்படுகிறது. ரோபோட் குறித்து அவரிடம் பேசிய ஷங்கர், ரஜினிக்கு ஜோடியாக நடிக்குமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

படத்தின் கதையை கேட்டுக் கொண்டாராம் ஐஸ்வர்யா. ஆனால் தனது முடிவை அவர் சொல்லவில்லையாம்.

சிவாஜியை விட ரோபோட்டை மிகப் பெரிய லெவலில் தயாரித்து வெளியிட ஷங்கரும், ரஜினியும் ஆர்வமாக உள்ளனர். எனவே ஐஸ்வர்யா ராய் போன்ற சர்வதேச முத்திரையுடன் கூடிய நாயகி இருந்தால்தான் சர்வதேச அளவில் பெரிய அலையை ஏற்படுத்த முடியும் என்றுதான் ஐஸ்வர்யாவை முயற்சிக்கிறார்களாம்.

மேலும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படும் படம் என்பதால் ஐஸ்வர்யாதான் சரியான நாயகியாக இருப்பார் என்றும் ஷங்கரும், ரஜினியும் கருதுகிறார்களாம். நாடு முழுவதும் ஐஸ்வர்யாவுக்கு உள்ள ரசிகர் கூட்டமும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.

ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு மீண்டும் ஒருமுறை எழுந்துள்ளது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil