»   »  கிரகலட்சுமி கேரக்டரில் அக்ஷயா!

கிரகலட்சுமி கேரக்டரில் அக்ஷயா!

Subscribe to Oneindia Tamil

பிரஷாந்த், கிரகலட்சுமி விவகாரத்தை படமாக எடுக்கவுள்ள வேலு பிரபாகரன், அப்படத்தில் இயக்குநர்-நடிகர்-தயாரிப்பாளர் பாபு கணேஷையும், அக்ஷயாவையும் ஜோடியாக நடிக்க வைக்கவுள்ளார்.

நிஜக் கதைகள், நிகழ்வுகள் படமாவது புதிதல்ல. ஆனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக இயக்குநர் வேலு பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிவுப்பு அமைந்துள்ளது.

காரணம், வேலு பிரபாகரன் அறிவித்துள்ள புதிய படம், தமிழகத்தை மட்டுமல்லாமல், சினிமா உலகையும் தலை சுற்ற வைத்திருக்கும் பிரஷாந்த் - கிரகலட்சுமி விவகாரம்தான்.

இருப்பினும் சினிமாக்காரர்களின் கதையை படமாக்குவது புதிதல்ல. இருபது வருடங்களுக்கு முன்பு வெளியான கே.பாலச்சந்தரின் புதுப் புது அர்த்தங்கள் படம் கமல்ஹாசன் - வாணி கதையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது.

அந்த வரிசையில் தற்போது பிரஷாந்த், கிரகலட்சுமி கதையை கருவாக எடுத்துக் கொண்டு மனைவிக்கு நடந்த திருமணம் என்ற பெயரில் புதுப் படம் ஒன்றை இயக்கப் போகிறார் வேலு பிரபாகரன்.

பிரஷாந்த் கேரக்டரில் பாபு கணேஷும், கிரகலட்சுமி கேரக்டரில் அக்ஷயாவும் நடிக்கவுள்ளனர்.

கலாபக் காதலன் படத்தில் அக்கா புருஷன் மீது ஆசைப்படும் மச்சினி கதாபாத்திரத்தில் கலக்கலாக நடித்திருந்தவர்தான் அக்ஷயா. அதன் பின்னர் அவருக்கு பெரிய அளவில் மார்க்கெட் அமையாமல் போய் விட்டது.

இந்த நிலையில்தான் அக்ஷயாவைத் தேடி வேலு பிரபாகரன் படம் வந்துள்ளது. வேலு பிரபாகரன் எடுக்கவுள்ள மனைவிக்கு நடந்த திருமணம் படத்தின் கதை இப்படிப் போகிறதாம்.

கல்யாணமான ஒருவருக்கு, தனது மனைவிக்கு ஏற்கனவே நடந்த திருமணம் குறித்துத் தெரிய வருகிறது. மனைவியின் முதல் கணவருக்கு தற்போது திருமணமாகி வசித்து வருவதும் தெரிய வருகிறது. இதையடுத்து விவாகரத்து கோரி அந்த நபர் கோர்ட்டுக்குப் போகிறார். கோர்ட் இப்போது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதுதான் கதையாம்.

பிரஷாந்த்தின் கதையை வேலு பிரபாகரன் படமாக எடுக்கப் போகும் தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். பிரஷாந்த் வீட்டு முன்பு திரண்ட அவர்கள், வேலு பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனராம். ஆனால் அதற்குப் பிரஷாந்த் என்ன பதில் சொன்னார் என்பது தெரியவில்லை.

தனது புதுப் படத்தின் கதை கிரகலட்சுமி, பிரஷாந்த் விவகாரமா என்று வேலு பிரபாகரனிடம் கேட்டபோது, இது ஒருவர் இரு கல்யாணம் செய்து கொண்டது குறித்த கதைதான். இருந்தாலும், எந்த பிரபல நடிகரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் இது பிரதிபலிக்காது.

நான் படமெடுக்க முடிவு செய்து விட்டேன். அதிலிருந்து பின் வாங்க மாட்டேன். எந்த நெருக்கடி வந்தாலும் சமாளிப்பேன் என்கிறார் பிரபாகரன்.

எல்லாம் சரி, காதல் அரங்கம் வருமா, வராதா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil