»   »  கரீப் அமீர் ஆகிறார் அமீர்

கரீப் அமீர் ஆகிறார் அமீர்

Subscribe to Oneindia Tamil

ஒரு வழியாக அமீரின் துயரங்களுக்கு விடிவு காலம் பிறக்கிறது. பருத்தி வீரன் பாக்கித் தொகையை இன்றைக்குள் பைசல் செய்வதாக சிவக்குமார் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதால் அமீர் முகத்தில் கொஞ்சம் போல நிம்மதி தெரிய ஆரம்பித்துள்ளது.

அரபியில் அமீர் என்ற வார்த்தைக்கு பணக்காரர், வசதியானவர், பெருந்தனக்காரர் என்று பொருள் உண்டு. ஆனால் இயக்குநர் அமீர், அந்த பதத்திற்குச் சற்றும் சம்பந்தம் இல்லாமல், பருத்தி வீரன் படத்தை எடுத்து சொந்தப் பணத்தை இழந்து கரீப் (பரம ஏழை) ஆகி விட்டார்.

சூர்யா, ஜீவாவைத் தொடர்ந்து கார்த்தியை ஸ்டார் ஆக்கிய பெருமை அமீருக்கு உண்டு. பருத்தி வீரன் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று வசூலை அள்ளிய போதிலும், அப்படத்தை வடித்த சிற்பியான அமீர் மட்டும் இருளில் தள்ளப்பட்டார்.

கார்த்தியை ஹீரோவாகப் போட்டு பருத்தி வீரனை இயக்க அமீர் முடிவு செய்தபோது படத்தை தயாரிக்க முன்வந்தார் ஞானவேல்ராஜா. இவர் சிவக்குமாரின் சொந்தக்காரர். இதனால் இப்படம் சிவக்குமாரின் சொந்தப் படம் என்று கூட பேசப்பட்டது.

பாதிப் படத்தை அமீர் முடித்திருந்த நிலையில், படத்திலிருந்து விலகுவதாக கூறினார் ஞானவேல்ராஜா. படத்தின் பட்ஜெட் தாண்டி விட்டதாக குற்றம் சாட்டிய ஞானவேல்ராஜா, தொடர்ந்து தயாரிப்புப் பணியில் ஈடுபட முடியாது என்று கூறி விட்டார்.

இதையடுத்து தானே மீதப் படத்தை தயாரிக்க முடிவு செய்தார் அமீர். அதன்படியே கிட்டத்தட்ட ரூ. ஒன்றரை கோடியைப் போட்டு படத்தை முடித்தார். அதிக வட்டிக்கு பைனான்சியர்களிடம் கடன் வாங்கித்தான் பருத்தி வீரனை முடித்தார் அமீர்.

படத்தை முடித்த பின்னர் அமீருக்கு இன்னொரு சோதனை வந்தது. அமீர் சொன்ன ரேட்டுக்கு படத்தை யாரும் வாங்க முன்வராததால், தானே திரையிட முடிவு செய்தார் அமீர். அந்த நேரத்தில்தான் ஞானவேல்ராஜா மீண்டும் சீனில் வந்தார்.

படத்தை தானே திரையிடுவதாக கூறினார். இதுதொடர்பாக சில கசமுசாக்கள் நடந்தேறியதாக கூறப்படுகிறது. அமீர் செலவிட்ட ரூ. ஒன்றரை கோடியை அவருக்குத் திருப்பித் தந்து விடுவதாகவும் ஞானவேல்ராஜா உறுதியளித்தார்.

ஆனால் சொன்னபடி ஞானவேல்ராஜா பட ரிலீஸுக்குப் பின்னர் அமீருக்குத் தர வேண்டிய தொகையைத் தரவில்லை. இதுதொடர்பாக தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்தார் அமீர். ஆனால் கவுன்சில் கண்டுகொள்ளவில்லை. இதனால் மறுபடியும் கவுன்சிலைத் தொடர்பு கொண்ட அமீர், பண பாக்கியை வசூலித்துத் தருமாறு முறையிட்டார்.

இப்படியாக இழுபறி நிலை நீடித்துக் கொண்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் சிலரைத் தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது,

ஒரு ஆடிட்டரின் உதவியுடன் பருத்தி வீரன் படத்தின் வசூலை கணக்கிட்டு வருவதாகவும், அது இன்று முடிவடையும் என்றும், அதன் பின்னர் இன்று இரவுக்குள் பிரச்சினை சுமூகமாக முடிக்கப்பட்டு விடும் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து அமீர் கூறுகையில்,

நாளைக்குள் (அதாவது இன்றைக்குள்) சுமூக தீர்வு ஏற்படும் என நம்புகிறேன். இது தொடர்பாக வேறு எதுவும் பேச விரும்பவில்லை. நான் எனது பணத்தைக் கேட்கவில்லை. தயாரிப்புச் செலவுக்காக ஆன தொகையைத்தான் கேட்கிறேன். நான் செலவிட்ட அந்தத் தொகைக்கு இன்று வரை அதிக வட்டியைக் கட்டி வருகிறேன்.

எனவே எனக்குத் தர வேண்டிய பாக்கியை, வட்டியுடன் தயாரிப்பாளர் கவுன்சில் வசூலித்துத் தரும் என்று நம்புகிறேன் என்றார் அமீர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil