»   »  சிவக்குமார், சூர்யா, கார்த்திமீது அமீர் வழக்கு!

சிவக்குமார், சூர்யா, கார்த்திமீது அமீர் வழக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பருத்தி வீரன் படம் தொடர்பாக நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், பிரசாத் லேப் ஆகியோர் மீது இயக்குநர் அமீர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பருத்தி வீரன் தொடர்பாக இவர்கள் தனக்கு தர வேண்டிய ரூ. 80 லட்சம் பணத்தை வட்டியுடன் வசூலித்துத் தரும்படியும் அமீ்ர் தனது மனுவில் கோரியுள்ளார்.

வெள்ளிக்கிழமை அமீர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தனது மகன் கார்த்தியை வைத்து படம் எடுக்குமாறு நடிகர் சிவக்குமார்தான் என்னை தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்தார். இதையடுத்து பருத்தி வீரன் கதையை நான் அவரிடம் கூறினேன். கதையைக் கேட்டவுடன், சிவக்குமாரும், சூர்யாவும், என்னை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் அறிமுகப்படுத்தினர்.

ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கும் என்று சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் கூறினர். கதைக்கு சிவக்குமார் ஒப்புக் கொண்ட சில நாட்களில் படப்பிடிப்பு தொடங்கியது.

படத்தின் பாதி பகுதி முடிவடைந்த நிலையில், சூர்யா, ஜோதிகா நடித்து வந்த சில்லுன்னு ஒரு காதல் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ஞானவேல்ராஜா. அந்தப் படத்தை முதலில் வெளியிட வேண்டும் என்பதற்காக பருத்து வீரன் படத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை அப்படத்திற்குத் திருப்பி விட்டார்.

இதனால் பருத்தி வீரன் படம் பட்ஜெட் பிரச்சினையால் பாதியில் நின்றது. இதையடுத்து சூர்யா உதவி செய்ய முன்வந்தார். ரூ. 47 லட்சம் பணத்தை என்னிடம் கொடுத்து படத்தை விரைவாக முடிக்கக் கூறினார்.

அதன் பிறகு பருத்தி வீரன் படத்தை எனது டீம் ஒர்க் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் நானே தயாரிக்கத் தொடங்கினேன். படத்தையும் தயாரித்து முடித்தேன். எனது சொந்தப் பணத்தில்தான் படத்தின் பாடல் வெளியீடு நடந்தது.

படத்தை முழுமையாக முடித்த நிலையில் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, ஞானவேல் ஆகியோர் படம் பார்க்க விரும்பினர். அதையும் நானே எனது சொந்த செலவில் ஏற்பாடு செய்து கொடுத்தேன்.

படத்தைப் பார்த்து முடித்த பின்னர் தங்களது சொந்த பேனரில் படத்தைத் திரையிட அவர்கள் விரும்பினர். மேலும், திடீரென தயாரிப்பாளர் கவுன்சிலில் படத்தின் உரிமை எங்களுக்கே வேண்டும் என்று கூறி புகார் கொடுத்தனர்.

இதையடுத்து தயாரிப்பாளர் கவுன்சில் மூலம் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பின்னர் படத்தின் டைட்டில் கார்டில் எனது நிறுவனம் மற்றும் ஞானவேல் ராஜாவின் நிறுவனம் ஆகியவற்றின் பெயர் இடம் பெற வேண்டும். படத்தை திரையிட்ட பின்னர் பணப் பிரச்சினைகளை சரி செய்து கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர் கவுன்சில் கூறியது.

அதற்கு முன்பாக, படத்தின் ரீமேக் உரிமை, டப்பிங் உரிமை, டிவி உரிமை உள்ளிட்ட எதையும் யாரும் விற்கக் கூடாது என்றும் முடிவானது.

ஆனால் இந்த நிபந்தனைகள், உத்தரவுகள் அனைத்தையும் சிவக்குமார் குடும்பமும், ஞானவேல் ராஜாவும் மீறி விட்டனர். படத்தின் டப்பிங் உரிமையை தற்போது விற்பதற்கு ரகசியமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பட விளம்பரங்களில் எனது பட நிறுவனத்தின் பெயரை ஞானவேல்ராஜா வேண்டும் என்றே மறைத்து விட்டார்.

பருத்தி வீரன் படத்துக்காக நான் செலவழித்த ரூ. 80 லட்சம் பணத்தை வட்டியுடன் திருப்பித் தருமாறு சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் பருத்தி வீரன் படத்தின் டப்பிங், ரீமேக் உரிமைகளை எனது சம்மதம் இல்லாமல் யாருக்கும் விற்கக் கூடாது என்று சிவக்குமார் குடும்பத்தினருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் அமீர்.

தனது மனுவில் தயாரிப்பாளர் கவுன்சில், பிரசாத் லேப் ஆகியோரையும் பிரதிவாதிகளாக சேர்த்துள்ளார் அமீர். தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு இவர்களும் காரணம் என்று கூறியுள்ளார்.

இந்த மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சிவக்குமார், சூர்யா உள்ளிட்டோருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. வழக்கு விசாரணை வருகிற 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil