»   »  அமீரின் அடுத்த வைரம்

அமீரின் அடுத்த வைரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூர்யா, ஜீவா, கார்த்தி ஆகியோரை பட்டை தீட்டி வைரமாக ஜொலிக்க வைத்த இயக்குநர் அமீரின் கையில் அடுத்த வைரமாக வந்து சேர்ந்துள்ளார் ஜெயம் ரவி.

பாலாவின் கையில் சிக்கி தமிழ் சினிமாவில் புதிய பிரளயமாக கிளம்பி வந்தவர் சூர்யா. அடுத்து பாலாவின் சிஷ்யர் அமீரின் கைக்கு மாறி வித்தியாச நடிப்பைக் காட்டி தனது நடிப்புக் கலக்கலுக்கு அச்சாரம் இட்டார்.

இதையடுத்து சூர்யாவின் தம்பி கார்த்தியை தனது பருத்தி வீரன் மூலம் பெரிய ஸ்டார் நடிகராக்கி சாதனை படைத்தார் அமீர். இப்படி ஒரு நடிப்பா இந்த புதுமுகத்திடம் என்று எல்லோரும் ஆச்சரியப்படும் அளவுக்கு நடிப்பில் கலக்கினார் கார்த்தி என்றால் அதற்கு அவரை ஆட்டுவித்த நாயகன் அமீர்தான் முக்கியக் காரணம்.

இதேபோலத்தான் பிரேக் இல்லாமல் போய்க் கொண்டிருந்த ஜீவாவுக்கு ராம் மூலம் ராட்சத இமேஜை உருவாக்கிக் கொடுத்தவர் அமீர்.

இப்போது அமீரின் படத்தில் நடிக்க மாட்டோமா என்று எல்லோரும் ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அமீர் அழைத்தால் உடனே கால்ஷீட் தர முன்னணி நடிகர்கள் கூட தயாராக இருக்கின்றனராம்.

ஆனால் அமீரின் இலக்கு அவர்கள் அல்ல. சாதாரண நடிகர்களை செலக்ட் செய்து அவர்களை வைரம் போல பட்டை தீட்டுவதே அவரது லட்சியமாக உள்ளது.

அமீர் அடுத்து இயக்கப் போகும் படம் கண்ணபிரான். இதில் சூர்யாவை நடிக்க வைக்கலாம் என முதலில் நினைத்திருந்தார் அமீர். ஆனால் இப்போது அதில் ஹீரோவாக நடிக்கவிருப்பது ஜெயம் ரவி.

ஜெயம் ரவிக்கென்று தமிழில் ஒரு இடம் இருந்தாலும் கூட ஆணித்தரமான ஸ்டார் நடிகராக அவர் இன்னும் உருவாகவில்லை. ஆனால் அமீரின் கண்ணபிரான் அந்தக் குறையைத் தீர்த்து விடும் என்று இப்போதே சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

கண்ணபிரான் கதையை கொடைக்கானில் டேரா போட்டு சூப்பராக ரெடி செய்து விட்டாராம் அமீர். விரைவில் படப்பிடிப்பு குறித்த செய்திகள் வெளியாகுமாம்.

அசத்துங்கண்ணே, அமீரண்ணே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil