»   »  அமீர் சொன்னதும், செய்ததும்!:விளக்கும் பருத்தி தயாரிப்பாளர்

அமீர் சொன்னதும், செய்ததும்!:விளக்கும் பருத்தி தயாரிப்பாளர்

Subscribe to Oneindia Tamil

பருத்தி வீரன் படம் தொடர்பாக இயக்குநர் அமீர் தொடர்ந்து அவதூறாக செய்தி பரப்பி வந்தால் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பருத்தி வீரன் படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சார்பில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் பிரகாஷ்பாபு எச்சரித்துள்ளார்.

பருத்தி வீரன் படத்தை ஆரம்பித்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க ஆரம்பித்தது. ஆனால் செலவுகள் அதிகமானதால், அமீரிடமே படத்தைக் கொடுத்து விட்டது ஸ்டுடியோ கிரீன். பின்னர் படத்தை முடித்து விட்ட அமீர், அதை விற்க முடியாமல் திணறினார்.

படம் நன்றாக வந்திருப்பதை அறிந்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அப்படத்தை தானே வாங்கிக் கொண்டது. இதில் பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கும், அமீருக்கும் இடையே பிரச்சினை உருவானது.

இந்த நிலையில், பருத்தி வீரன் படம் கேன்ஸ் மற்றும் டெல்லியில் நடந்த ஓசியான் பட விழாக்களில் கலந்து கொண்டது. இந்த விழாக்களுக்கு தன்னை அழைக்கவில்லை என்று அமீர் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு, அமீரால் நடிகராக அடையாளம் காட்டப்பட்ட பருத்தி வீரன் நாயகன் கார்த்தி பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் அமீருக்கு பருத்தி வீரன் படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சார்பில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பிரகாஷ் பாபு வெளியிட்டுள்ள விளக்கமான அறிக்கை

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், அமீர் டைரக்ட் செய்ய கடந்த 21-07-2005 அன்று பருத்தி வீரன் படத்திறகாக பூஜை போடப்பட்டது.

ரூ.2 கோடியே 75 லட்சம் மதிப்பில் முதல் பிரதி எடுத்து கொடுப்பதாக அமீர் சொன்னார். புதுமுகத்தை வைத்து எடுக்கும் படத்திற்கான பட்ஜெட் அதிகம் என்றாலும் கதைமேல் உள்ள நம்பிக்கையால் மட்டுமே ஒப்புக் கொண்டேன்.

பூஜை முடிந்த பிறகு பருத்தி வீரன் கதை வேண்டாம், வேறு கதை என்னிடம் இருக்கிறது. அதை எடுக்கிறேன் என்றார். பூஜை போட்டு உலகத்திற்கு சொன்ன விஷயத்தை மாற்ற சம்மதிக்காததால், பருத்தி வீரனே படமானது.

கடந்த 05-09-2005 வரை வேண்டுமென்றே இழுத்தடித்து இரண்டரை மாதங்கள் கழித்து படப்பிடிப்பை தொடங்கினார். எல்லாப் பாடல்களையும் ஒலிப்பதிவு செய்து படப்பிடிப்பை துவங்கியபோது, 2006 பிப்ரவரியில் படத்தை வெளியிடலாம் என்று சொன்னார். இதற்கிடையில் ரூ.48 லட்சம் பணம் வாங்கினார்.

இரண்டு கட்டமாக 100 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் 2 கோடி ரூபாய் பணத்தை வாங்கிவிட்டார். அது போக ரூ. 3 கோடியே 50 லட்சம் பட்ஜெட்டில் தான் படத்தை முடிக்க முடியும் என்று குண்டை தூக்கி போட்டார் அமீர்.

தயாரிப்பு செலவு குறித்து வெளிப்படையான தகவல்கள் ஏதுமின்றி, தயாரிப்பு செலவுகளை கோடியில் ஏற்றி சொல்லியபோது நாங்கள் அதிர்ச்சியைடைந்தோம்.

முதல்பிரதி ஒப்பந்தத்தை கைவிட்டு, நாங்களே தயாரிப்பு நிர்வாகத்தை பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் டைரக்ட் செய்வதற்கு மட்டும் சம்பளம் வாங்கி கொள்ளுங்கள் அப்போதுதான் எங்களுக்கும் கணக்கு புரியும் என்றோம்.

அதற்கு அமீர் அப்படியா?, சரி எனக்கு சம்பளம் 1 கோடி கொடுத்துருங்க, என்று மேலும் ஒரு இடியை தூக்கி போட்டார். இரண்டு படங்களை மட்டும் இயக்கியவருக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வேண்டுமென்றால் எப்படி முடியும்?

பிரச்சினைக்கு எந்தவித உடன்பாடும் ஏற்படாத நிலையில் கடந்த 02-08-2006 அன்று அவராகவே ஷூட்டிங்கிற்கு கிளம்பினார். ஒரு வார படப்பிடிப்பில் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று சொன்ன அமீர், அதன் பிறகு 64 நாட்கள் படப்பிடிப்பை நடத்தினார்.

ரஜினி நடித்து டைரக்டர் ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்திற்கு இணையாக, புதுமுகங்களை வைத்து ஷூட்டிங்கை நடத்தினார். படம் முடிந்தால் சரி என்று அமைதியாக இருந்தோம். மீண்டும் அவசர செலவுகளுக்காக ரூ.60 லட்சம் பணம் வாங்கினார்.

படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு முழுமையான பணம் தரப்படாத நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு பணம் கொடுத்தால்தான் படத்தை முடித்துத் தருவேன் என சொன்னார்.

இதுவரைக் கொடுத்த பணத்திற்கு கணக்கு சொல்லுங்கள், என கேட்டதற்கு, சின்ன பையன், என்னை கேள்வி கேட்பதா? என்று வம்படியாக கோபித்துக் கொண்டு காணாமல் போய்விடுவார்.

இதற்கு மேல் அவரின் டார்ச்சரை தாங்க முடியாது என்று நிலைக்கு நாங்கள் வந்ததும், நானே படத்தை தயாரித்துக் கொள்கிறேன், உங்களுக்கு இதுவரை செலவான பணத்திற்கு வட்டி நீங்கலாக செட்டில் செய்கிறேன், என்று அவராகவே சொன்னார்.

கார்த்தியின் படம் நின்றுவிடக்கூடாது என்பதால் அதிக மனஉளைச்சலுக்கு பிறகு வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டோம். அமீரிடம், சென்சார் செய்து படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என சொன்னோம். அவர் சென்சார் அதிகாரிகளையும் குழப்பி, தனது டீம் ஒர்க் புரொடக்ஷன் என்ற பேரில் சென்சார் சான்றிதழ் வாங்கிவிட்டார். அவர் செய்தது குற்றம் என சென்சார் அதிகாரியிடம் நிரூபித்தோம்.

இப்போது என்னிடம் பணம் இல்லை. ஆடியோ ரிலீஸ் நடத்தினால் ஏரியாக்கள் விற்க முடியும். ஆனால் ஆடியோ ரிலீஸூக்கும் என்னிடம் பணம் இல்லை. நீங்கள் தந்து உதவி செய்தால் ஏரியா விற்று பணத்தை செட்டில் செய்வேன் என்று அமீர் சொன்னார். அவரின் வார்த்தையை நம்ப முடியவில்லை என்றாலும் வேறு வழியின்றி ஆடியோ ரிலீசுக்கு பணம் கொடுத்தோம்.

அவர் சொன்னபடி ஏரியா விற்று பணமும் வந்தது. ஆனால் எதிர் பார்த்தபடியே பணம் தராமல் ஏமாற்றிவிட்டு படம் ரிலீஸ் தேதியை அறிவித்தார் அமீர்.

இப்போதாவது பணத்தை திரும்ப கொடுங்கள் என்று கேட்டதற்கு, என்னிடம் பணம் இல்லை. நீங்களே படத்தை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என்று கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பதில் சொன்னார். அவர் ரிலீஸ் செய்யும்போது மூன்றரை கோடி என்று சொன்னவர், நாங்கள் ரிலீஸ் செய்வதென முடிவான பிறகு, திடீரென்று நான்கு கோடி செலவாகிவிட்டது என்றார்.

அதற்கு மறுநாளே, ஸாரி, தப்பா சொல்லிவிட்டேன். மொத்தம் 5 கோடி செலவாகிவிட்டது, அதனால் மீதம் பணத்தை கொடுத்துவிட்டு படத்தை நீங்களே ரிலீஸ் செய்யுங்கள் என்று விளையாட்டு காட்டிக்கொண்டே இருந்தார். பொறுக்கவே முடியாமல் தயாரிப்பாளர் சங்கத்திடம் பிரச்சினையை கொண்டு சென்றேன்.

அமீரின் டீம் ஒர்க் புரொடக்ஷன் சார்பில் ஏமாற்றி வாங்கப்பட்ட சென்சார் சான்றிதழை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் பெயரில் மாற்றிக்கொள்ள சம்மதம் தந்து, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் கையெழுத்து போட்டு கொடுத்தார் அமீர். அதை எடுத்துக்கொண்டு சென்சார் அலுவலகம் போவதற்குள், அமீரின் வழக்கறிஞரிடமிருந்து சென்சார் அதிகாரிக்கு ஒரு பேக்ஸ் வந்தது.

அதில் ஞானவேல் கொண்டு வரும் கடிதத்தில் உள்ள கையெழுத்து அமீருடையதே இல்லை, போலியானது என்று வந்த பேக்ஸை அதிகாரி காட்டினார்.

தயாரிப்பாளர் சங்கம் அமீரிடம் விளக்கம் கேட்டதற்கு, தெரியாமல் தவறு நடந்துவிட்டது என்று சிறுபிள்ளைத்தனமாக பதிலை சொன்னார்.

பருத்தி வீரன் படம் ரிலீசாகி 200 நாட்கள் நெருங்கும் நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுதியளித்தபடி, இன்னும் கணக்கு வழக்குகளை அமீர் ஒப்படைக்கவில்லை. அப்படி முறையாக கணக்கு ஒப்படைத்தால் அமீர்தான் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சத்திற்கு மேல் தரவேண்டியிருக்கும்.

நாங்கள் கணக்கு கேட்ட போதெல்லாம் பதில் சொல்லாமல் தலைமறைவாகிவிடுகிறார். ஆனால் வாரத்திற்கு ஒருமுறை தயாரிப்பாளர் தனக்கு பல லட்ச ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி அவதூறு பரப்பிக் கொண்டே இருக்கிறார்.

பணத்தையும் திருப்பித் தராமல், அவதூறு பரப்பி வரும் அமீர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஸ்டுடியோ கிரீன் விளக்கியுள்ளது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் இந்தப் புகார் குறித்து அமீரின் கருத்தை அறிய முயற்சித்தோம். ஆனால் விரைவில் நானே பத்திரிக்கையாளர்களை சந்திக்கவுள்ளேன். அப்போது அனைத்தையும் விளக்குவேன் என்றார் அமீர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil