»   »  ஏ.ஆர்.ரகுமானின் இசைப் பள்ளி

ஏ.ஆர்.ரகுமானின் இசைப் பள்ளி

Posted By:
Subscribe to Oneindia Tamil
AR Rahman
சென்னையில் கே.எம். மியூசிக் கன்சர்வேட்டரி மற்றும் கேஎம் இசை சிம்பொனி ஆர்கெஸ்டிரா என்கிற இசைப் பள்ளியை இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கவுள்ளார்.

இந்த பள்ளியில் இசை மற்றும் நவீன இசைத் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்படும். இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளை சேர்ந்த பேராசிரியர்கள், இசைக் கலைஞர்கள் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவார்கள்.

இந்த இசைப் பள்ளியில், ஐரோப்பிய வாய்ப்பாட்டு, வாத்திய இசை, இந்திய சாஸ்திரிய வாய்ப்பாட்டு, இந்திய மேற்கத்திய இசை கொள்கைகள், இசை ரசனை பயிற்சி, கேட்டல் பயிற்சி, பியானோ-ஆடியோ என்ஜினீயரிங் மற்றும் இசை சம்பந்தப்பட்ட நவீன படிப்புகள் கற்றுத் தரப்படும்.

போதிய வசதி இல்லாத மாணவர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் பவுண்டேஷனில் இருந்து ஸ்காலர்ஷிப்பும் வழங்கப்படும்.

புல்லாங்குழல், வயலின், கிளாரினெட், பிரெஞ்ச் ஹார்ன், டிரம்பட், டிரம்போன், செல்லோ, டபுள் பாஸ் பெர்கசன், ஓபோ உள்ளிட்ட வாத்தியக் கருவிகளை வாசிக்கும் மாணவர்களையும், திறமையான பாடகர்களையும் கண்டறிந்து சேர்ப்பதற்கான பணி தற்போது தொடங்கியுள்ளது.

எதிர்காலத்தில் இந்திய வாய்ப்பாட்டு, மேற்கத்திய வாய்ப்பாட்டு, இந்திய மற்றும் மேற்கத்திய இசை தியரி, லாஜிக் புரோ பயிற்சி உள்ளிட்டவையும் சேர்க்கப்படவுள்ளது.

இந்த பள்ளியில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு கே.எம்.மியூசிக் சிம்பொனி இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்றுவதற்கான குரல் தேர்வில் பங்குபெறும் வாய்ப்பும் உள்ளது.

இந்த இசைப் பள்ளி குறித்து ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1980 மற்றும் 90-களில் இசை அமைப்பில் எலக்ட்ரானிக் இசைக் கருவிகள் குறிப்பிடத்தக்க பங்காற்றின. இந்த புதிய இசை கேட்பவர்களை கவர்ந்து இழுத்ததால், பாரம்பரிய சாஸ்திரிய இசை மீதான ஆர்வம் குறையத் தொடங்கி விட்டது. இந்நிலை தொடருமானால், எதிர்கால சந்ததிகள் சாஸ்திரிய இசையின் அருமையை உணர்ந்து அனுபவிக்க முடியாமல் போய் விடும்.

கேஎம் மியூசிக் கன்சர்வேட்டரி, உலகத் தரம் வாய்ந்த இசைக் குழுவை இந்தியர்களுக்காக உருவாக்கும் ஒரு முயர்சியாகும். தற்போது இந்திய இசையமைப்பாளர்கள் ரெக்கார்டிங்குக்காக இசைக்குழுவினரை தேடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. இந்நிலையை மாற்றி இந்தியாவிலேயே உயர்வான இசைக்குழுவை உருவாக்குவதுதான் கே.எம்.இசைப்பள்ளியின் திட்டம்.

நவீன இசையமைப்பாளர் என்ற முறையில் இசையிலும், இசை தொழில்நுட்பத்திலும் போதிய அறிவை பெற்றிருப்பது மதிப்புமிக்கது என்று கருதுகிறேன். வெறுமனே இசைக்கருவிகளை மட்டும் வாசிக்க தெரிந்து வைத்திருப்பது லாபகரமாக இருக்காது. ஆனால் இவர்கள் இசையை உருவாக்கும் திறமையையும் பெற்றிருந்தால், பிரகாசமான தொழில் வாய்ப்புகளையும், நல்ல வருமானத்தையும் பெற முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

தனது 42வது பிறந்த நாளையொட்டி இந்த இசைப் பள்ளியைத் தொடங்கியுள்ளார் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil