twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'சினிமாவை விட்டே போக நினைத்த கோபி நயினார்...' - நண்பர் சொல்லும் ஃப்ளாஷ்பேக்!

    By Shankar
    |

    நல்ல படமென்பது என்ன? 'ஒரு தாயின் உணவைப்போல இருக்க வேண்டும்.. தேவை அறிந்து, சுவை அறிந்து கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வயிற்றையும் கெடுக்கக் கூடாது. உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். அதுவே என்னளவில் நல்லப்படம்.' - பாலுமகேந்திரா

    படைப்பாளிகளில் இரண்டு விதம் உண்டு. ஒரு சாரார் 'கலை என்பது பொழுதுபோக்கு' என்று நம்புபவர்கள், மற்றொரு சாரார் 'கலை என்பது மக்களுக்கானது' என்று நம்புபவர்கள். இது எல்லா கலைகளுக்கும் பொருந்தும். திரைத்துறையிலும் அப்படியே..!

     Aramm Gopi Nayinaar wants to exit from Cinema

    பொழுது போக்கு என்று குப்பையை எடுப்பவர்களை விட்டுத்தள்ளுங்கள். பொழுது போக்கு அம்சத்தில், கொஞ்சம் கலையை, அரசியலை, சிந்தனையை கலப்பவர்கள் சிலர் உண்டு இங்கே. பாப்கார்ன் மீது தூவப்படும், மசாலாவைப்போல அது. ஒரு பாசாங்கு..! அவ்வளவுதான்.

    திரைப்படம் என்பது பெரும் வணிகத்தோடு சம்பந்தப்பட்டது, அதனால் அதில் லாப நட்டம் மட்டுமே பார்க்க முடியும் என்ற கோட்பாடு ஒன்றுண்டு இங்கே. கலையை மக்களுக்கானது என்று நம்பும் படைப்பாளிகளும் உண்டு. அவர்கள் அரிதாகவே இருக்கிறார்கள். ஆயினும், அவ்வப்போது அப்படியான படைப்பாளிகளும் உருவாகிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

     Aramm Gopi Nayinaar wants to exit from Cinema

    'கோபி நயினார்' அப்படியான ஒரு படைப்பாளி. மக்களிலிருந்து வந்த மக்களுக்கான படைப்பாளி. கோபி நயினாரை உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை, 'மீஞ்சூர் கோபி' என்றால் சட்டென்று ஞாபகத்திற்கு வந்துவிடுவார். ஆம், அவரேதான். கத்தி திரைப்படத்தின் கதை தன்னுடையது என்றும், அது தன்னிடமிருந்து திருடப்பட்டது என்றும் கிடைத்த இடங்களிலெல்லாம் முறையிட்டுக் கொண்டிருந்தாரே அவரேதான். அவரின் புகார் மீது எத்தனை பேருக்கு அவநம்பிக்கை இருந்தது..!? ஏன்.. இப்போதும் கூட பலருக்கு இருக்கிறது. ஜெயித்தவனின் வெற்றியை பறிக்க நினைப்பவராக, தகுதி அற்றவராக, பொய்யனாக, ஏமாற்றுக்காரனாக இந்த சமூகம் அவரைப்பார்த்தது. அதில் சிலர்.. "கதை திருடப்பட்டால் என்ன..? யாரால் அதை முறையாக எடுக்க முடியுமோ அவர்கள் எடுக்கட்டும். இவரால் அக்கதையை திரைப்படமாக எடுக்கவே முடியாது.. தெரியாது," என்று சப்பை கட்டு கட்டினார்கள்.

     Aramm Gopi Nayinaar wants to exit from Cinema

    இருப்பதிலேயே மிகச்சிறந்த பழிவாங்குதல் என்ன தெரியுமா..!? 'வாழ்ந்து காட்டுவதுதான்' என்றொரு வாசகம் உண்டு. அதைத்தான் இப்போது கோபி செய்திருக்கிறார் 'அறம்' திரைப்படம் மூலமாக.

    'ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி ' 'மூடப்படாத போர்வெல் துளையில் விழுந்த சிறுவன் மரணம்'

    எத்தனை முறை இத்தகைய செய்திகளைக் கடந்து வந்திருப்போம்.! நூற்றுக்கணக்கான முறை இது நிகழ்ந்திருக்கிறது. நமக்கு அது வெறும் செய்திதான். ஆனால்.. அக்குழந்தைகளின் பெற்றோருக்கு.? அவர்களின் உறவினர்களுக்கு? நட்புகளுக்கு.. ஊராருக்கு.? அச்சூழலை கையாண்ட அரசு மற்றும் அரசியல்வாதிகளுக்கு.?

    நாம் கடந்து வந்த அச்செய்தியைத்தான் கோபி தன் கதையாக தேர்ந்தெடுத்திருக்கிறார். சராசரி மனிதர்கள் எதையும் கடந்து வந்துவிடுகிறார்கள். கலைஞர்களால் அதனை அத்தனை இலகுவாக கடந்து வந்துவிட முடியாது. அது அவர்களை தூங்க விடாமல் செய்யும். மனதை கூர் கூராக அறுத்துப்போடும். கலைஞர்களுக்கே இப்படி என்றால், கோபி போன்றவர்கள் போராளிகள். மக்களோடு மக்களாக களத்தில் நின்று போராடக்கூடியவர்கள். இத்தனை காலமும் அதைத்தான் அவர் செய்து வந்திருக்கிறார். மக்களோடு மக்களாக நின்றே.. அவர்களுக்கான கதையை தேர்ந்தெடுக்கிறார். அவர்களுக்காகவே அவர் கதை சொல்ல முற்படுகிறார்.

     Aramm Gopi Nayinaar wants to exit from Cinema

    இதுதான் களம். மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒரு சிறுமியை எப்படி மீட்டார்கள்..!? மீட்டார்களா இல்லையா..!? இதுதான் முழுப் படமும்.

    மாவட்ட ஆட்சியராக நயன்தாரா அவர்கள், அக்குழந்தையை மீட்க எடுத்துக்கொண்ட முயற்சியும், அதன் பின்னே இருந்த அரசியல், கயவாளித்தனம், கையாலாகாத்தனம், போராட்டம், உணர்ச்சி பெருக்கு என படம் முழுவதும் உங்களை கட்டிப்போடும், கலங்கடிக்கும் திரைக்கதை.

    இதுதான்.. இதைத்தான்.. கோபி போன்ற ஒரு படைப்பாளியிடமிருந்து எதிர்பார்த்தோம். அதை நிறைவாக செய்திருக்கிறார்.

    வாழ்விலிருந்து ஒரு கதை, அதற்கான கதாப்பாத்திரங்கள், அதற்கேற்ற நடிகர்கள் தேர்வு, திரைக்கதையை கையாண்ட விதம், காட்சி மொழி, படைப்பாற்றல், வசனம், அது பேசும் எதார்த்தம், அது பேசும் அரசியல், அதைப்பேசும் கதாப்பாத்திரங்கள் என ஒரு முழுமையான நேர்த்தியான திரைப்படத்தை கோபி நயினார் நமக்குக் கொடுத்திருக்கிறார்.

     Aramm Gopi Nayinaar wants to exit from Cinema

    "...மேலும், கத்தி திரைப்படம் பேசும் உட்பொருளை கோபி உருவாக்கியிருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காரணம், கோபி ஒரு சிறந்த படிப்பாளி, சமூக ஆர்வலர், மக்களின் நலன் பேணும் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர். பொதுவுடமை பேசும் தோழர், நல்ல படைப்புகளை உருவாக்கும் பேரவா கொண்டவர், மாற்று சினிமா மீதான ஆர்வம் கொண்டவர். குறிப்பாக கடைநிலை மனிதர்களின் வாழ்வும், நிலையும் படைப்புகளாக மாற்றப்பட வேண்டுமென்ற விருப்பம் கொண்டவர், சமநிலை சமூகமொன்று உருவாகவும் அதற்கு கலை உதவ வேண்டுமென்ற எண்ணமும் கொண்டவர். இவைதான் அவரோடு நான் பழகிய நாட்களில் அவரைப்பற்றிய என் மதிப்பீடுகள்.

    எனக்கு அவர் முன்பே பழக்கமில்லை. கருப்பர் நகரம் திரைப்படத்திற்காக சந்தித்ததுதான் எனக்கும் அவருக்குமான பழக்கம். இன்று வரையும் அவ்வளவுதான். கருப்பர் நகரம் படம் நிறுத்தப்பட்ட பின்பு எங்களுக்குள் தொடர்பற்றுப் போயிற்று. சில காலம் கழித்து, அட்டக்கத்தியும், மெட்ராஸ் படத்தின் முன்னோட்டமும் வந்தபோதெல்லாம் அவரை நினைத்துக்கொண்டேன். காரணம் அதில், கருப்பர் நகரத்தின் சாயல்கள் இருந்தன. அதைப்பற்றிக்கூட அவரிடம் நான் விவாதித்ததில்லை. பின்பு ஒருநாள் உணவுக்கூடமொன்றில் அவரைப் பார்த்தேன், முதல் கணத்தில் அடையாளம் கண்டுக்கொள்ள முடியாத அளவு மாறிப்போயிருந்தார். நாற்பதை ஒட்டிய வயதுக்காரர், உடல் நலமின்மை, வறுமை, போராட்டம், தளர்ச்சி என உருவம் குலைந்து காணப்பட்டார். பின்பு அடையாளம் தெளிந்து பேசிக்கொண்டோம். கருப்பர் நகரத்தைப்பற்றி குறிப்பிடும் படியாக செய்தியில்லை என்றும், தான் திரைத்துறையிலிருந்தே விலக விரும்புவதையும், தன் மனம் உகந்த 'ஆவணப் படங்களை' மட்டுமே இனி இயக்கப் போவதாகவும் சொன்னார். மேலும் சிறிது நேரம் உரையாடிவிட்டு பிரிந்தோம். எனக்கு, உண்மையிலேயே பெரும் துயரமாக இருந்தது. அவரைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். சிறந்த படைப்பாளியாக பரிமாணிக்கும் தகுதி உடைய ஒருவர், தமிழ்த் திரைத்துறையின் போராட்டக்களத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் விலகிப்போவதை நினைத்து மனம் வேதனைக்கொண்டது."

     Aramm Gopi Nayinaar wants to exit from Cinema

    இது நான் கத்தி பிரச்சனையின் போது எழுதிய கட்டுரையில் இருக்கும் வாசகம். அதன் கடைசி வரியில், "சமூக அக்கறை, மக்கள் நலம், கலையின் மேன்மை, அழகியலோடு கூடிய உண்மை பேசும் படைப்புகளை உருவாக்கும் தகுதி, படிப்பு, பயிற்சி கொண்ட கலைஞர்களை தமிழ்த் திரையுலகம் இன்னும் கொஞ்சம் நன்றாக நடத்தலாம் என்பது என் ஏக்கம். அவர்களை துரத்தி துரத்தி.. வாழ்வின் எல்லைக்கே விரட்டும் பழக்கத்தை அது கைவிட்டு திருந்தினால்.. நன்றாக இருக்கும்." என்று எழுதி இருந்தேன். அது இப்போது நிஜமாகி விட்டது என்றுதான் நினைக்கிறேன்.

    'அறம்' திரைப்படத்துக்கு வேறு தயாரிப்பாளரா அல்லது நயன்தாராவா என்று தெரியாது.. இப்படம் நடப்பதற்கு யார் காரணமாக இருந்தார்கள் என்றும் தெரியாது. யாராக இருந்தாலும், அவர்கள் இருக்கும் திசை நோக்கி ஒரு கும்பிடு போட வேண்டும். இத்தகைய படைப்பாளியை கைத் தூக்கி விட்டதற்காக. இது கோபிக்காக மட்டுமல்ல.. வருங்காலத்திற்கே உதவும். இத்தகைய தகுதியோடு தங்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற எவ்வித கணிப்புமில்லாத பல நூறு படைப்பாளிகளுக்கு இது உதவும். இக்கதையும், அதை கையாண்ட கோபியும் வெற்றி பெறுவது அத்தனை முக்கியம். அதை கோபி செய்து விட்டார்.

    இப்படம், கண்டிப்பாக ஒரு வெற்றிப்படம். சிறந்த படமும் கூட. பல மொழிகளில் எடுக்கப்படலாம். அல்லது மொழி மாற்றம் செய்யப்படலாம். காரணம், இது இந்திய பிரச்சனை. நாடு முழுவதும் பரவிக்கிடக்கும் பிரச்சனை.

    இப்படம் எண்ணிக்கையில்லா விருதுகளை வென்று குவிக்கும்.. கூடவே மக்களின் மனங்களையும்..!

    மகிழ்ச்சியும்.. வாழ்த்தும் கோபி நயினார் அவர்களுக்கு.

    நல்ல படமென்பது 'ஒரு தாயின் உணவைப்போல இருக்க வேண்டும்.. தேவை அறிந்து, சுவை அறிந்து கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வயிற்றையும் கெடுக்க கூடாது. உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும்' அதுவே என்னளவில் நல்லப்படம். - பாலுமகேந்திரா

    பின்குறிப்பு:

    கத்தி பிரச்சனையின் போது, நான் எழுதிய கட்டுரையின் லிங்கை முதல் கமெண்டில் கொடுத்திருக்கிறேன். நேரமிருப்பவர்கள், ஆர்வமிருப்பவர்கள் ஒருமுறை படித்துப்பாருங்கள். கோபியின் மீதான உங்கள் எண்ணம் இப்போதாவது மாறுகிறதா என்று பார்ப்போம். http://blog.vijayarmstrong.com/2014/10/blog-post.html

    #அறம் #Aramm

    - விஜய் ஆம்ஸ்ட்ராங்

    ஒளிப்பதிவாளர்

    English summary
    Cinematographer Vijay Armstrong's write up on Aramm movie and its maker Gopi Nayinaar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X