»   »  சரத் மீது நடிகர்கள் கோபம்

சரத் மீது நடிகர்கள் கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil


நடிகர், நடிகையரின் சம்பளத்திலிருந்து ஐந்து சதவீதம் பிடிக்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளதற்கு நடிகர், நடிகையர் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலும், நடிகர் சங்கமும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டன. அதன்படி, நடிகர், நடிகையரின் சம்பளத்திலிருந்து ஐந்து சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு அது நடிகர் சங்கத்திற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த தொகை, நடிகர், நடிகையருக்குக் கொடுக்கப்படம் சம்பள அட்வான்ஸ் பணத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுமாம். இது நடிகர், நடிகையருக்கு பெரும் அதிருப்தியை அளித்துள்ளது.

காரணம், பெரும்பாலான தயாரிப்பாளர்கள், பல நடிகர், நடிகையருக்கு முழுச் சம்பளத்தையும் கொடுப்பதில்லை என்ற புகார் ஏற்கனவே உள்ளது.

படம் முடிந்த பிறகுதான் பெரும்பாலானவர்கள் சம்பளப் பாக்கியை செட்டில் செய்கின்றனர். ஆனால் படம் தோல்வி அடைந்தாலோ அல்லது நிதி நெருக்கடி காரணமாக படத்தை ரிலீஸ் செய்வதில் தாமதம் ஏற்பட்டாலோ சம்பளப் பாக்கியை தராமல் இழுத்தடிக்கும் தயாரிப்பாளர்களும் உள்ளனர்.

எனவே, சம்பள அட்வான்ஸ் தொகையிலேயே 5 சதவீதத்தைப் பிடித்து விட்டால் அது தங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நடிகர், நடிகையர் கருதுகின்றனர்.

ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இந்த புதிய உத்தரவு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தால் தங்களுக்குத்தான் பெரும் பாதிப்பு என 2ம் நிலை நடிகர், நடிகையர் கருதுகின்றனர். தங்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளமே மிகவும் குறைவு. இந்த நிலையில் அதில் ஐந்து சதவீதத்தைப் பிடித்து விட்டால் எப்படி என்று அவர்கள் வருத்தப்படுகிறார்கள்.

மேலும், புதிய ஒப்பந்தத்தின்படி நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத யாருமே இனி சினிமாவில் நடிக்க முடியாது என்று கூறப்பட்டிருப்பதும் நடிகர், நடிகையரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சில நடிகர், நடிகையர் ரகசியக் கூட்டம் நடத்தியுள்ளனர். அதில் கலந்து கொண்ட அனைவருமே நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளனர்.

சரத்குமார் அரைவேக்காட்டுத்தனமாக முடிவெடுத்து விட்டார் என்றும் சிலர் கடுமையாக பேசினார்களாம்.

இந்த ரகசியக் கூட்டம் குறித்து சரத்குமாருக்குத் தெரிய வந்ததும், அதிருப்தியாளர்களை சரிக்கட்டும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பாக கூட்டம் ஒன்றைக் கூட்டவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.

Read more about: sarath

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil