twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னையில் மீண்டும் கன்னடப் படம்!

    By Sudha
    |

    Jockey Movie
    நீண்ட காலத்திற்குப் பிறகு சென்னையில் ஒரு கன்னடப் படம்!

    தமிழகத்தில் இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப் படங்கள் தொடர்ந்து பெரிய அளவில் வெளியாகின்றன. குறிப்பாக இந்திப் படங்கள் தமிழுக்கு இணையாக வெளியிடப்படுவதும் உண்டு. மை நேம் ஈஸ் கான் படம் 15 திரையரங்குகளில் வெளியானது, சென்னையில் மட்டும்.

    தெலுங்குப் படங்களும் நல்ல தியேட்டர்களில் தொடர்ந்து வெளியாகின்றன. ஆனால் திராவிட மொழிகளில் ஒன்றான கன்னடப் படங்கள் மட்டும் வெளியாவதில்லை. கர்நாடக எல்லையையொட்டியுள்ள தமிழகப் பகுதிகளில் மட்டும் ஓரளவு வெளியாவதுண்டு. ஆனால் தலைநகர் சென்னையில் கன்னடப் படங்களைப் பார்ப்பது அரிதான விஷயமே. இத்தனைக்கும் கர்நாடகாவில் உள்ளது போன்ற எந்த கட்டுப்பாடும் தமிழகத்தில் இல்லை. படத்தில் 'ஸ்டஃப்' இருந்தால் 1000 நாட்கள் கூட ஓட்டலாம்.

    மேலும், கன்னடம் உள்பட எந்த மொழிப் படத்தை எதிர்த்தும் தமிழகத்தில் யாரும் கொடி பிடித்து எதிர்ப்பு காட்டுவதில்லை.

    காசினோ, மோட்சம், சங்கம் காம்ப்ளக்ஸ் போன்ற திரையரங்குகளில் எப்போதாவது ஒரு கன்னடப் படம் வெளியாகி வந்த வேகத்தில் போய்விடும். விளம்பரம் கூட செய்யப்படுவதில்லை. பிறப்பால் கன்னடராக இருந்தாலும், தமிழில் பிஆர் பந்துலு தந்த பிரமாண்ட படங்கள் காலத்தால் அழியாதவை. அவர் இயக்கிய போஸ்ட்மாஸ்டர், ஸ்கூல்மாஸ்டர் (தமிழிலும் வந்தது), கிருஷ்ணதேவராயா போன்ற படங்கள் தமிழகத்திலும் வெளியாகின.

    பின்னர் பாலுமகேந்திரா இயக்கிய முதல் கன்னடப் படமான கோகிலா சென்னையில் 100 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது. மணிரத்னம் இயக்கிய (அவருக்கு இதுதான் முதல் படம்) பல்லவி அனுபல்லவி படமும் சென்னையில் ரிலீசானது.

    பக்த விஜய, பக்த பிரகலாத் போன்ற ராஜ்குமாரின் படங்களும் சென்னையில் வெளியாகியுள்ளன. சௌந்தர்யா நடித்த நாக தேவதா படமும் சென்னையில் வெளியானது. பி வாசு இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி கண்ட ஆப்தமித்ரா மற்றும் ஆப்தரக்ஷகா இரண்டுமே சென்னை காசினோ, மோட்சம் மற்றும் மாயாஜாலில் வெளியாகின.

    அதன்பிறகு இப்போதுதான் மீண்டும் ஒரு கன்னடப் படம் தமிழில் வெளியாகியுள்ளது.

    மாயாஜாலில் ஒரு காட்சியாக கடந்த அக்டோபர் 14-ம் தேதி வெளியான ஜாக்கி, பரவாயில்லை எனும் அளவு வசூலுடன் இரண்டாவது வாரமாக ஓடிக் கொண்டுள்ளது. இப்படத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் மலையாளத்து பாவனா.

    பொதுவாக கன்னடத் திரையுலகினர் தமிழருக்கு எதிரானவர்கள் என்ற ஒரு அபிப்பிராயம் நிலவி வந்த சூழலில் யாரும் எதிர்பாராத ஒரு செயலை புனித் ராஜ்குமார் செய்தார்.

    இலங்கையில் ஐஃபா விழாவுக்கு இந்திய நடிகர்கள் போகக் கூடாது என்பதற்கு கன்னடத் திரையுலகிலிருந்து ஆதரவுக் குரல் கொடுத்தவர் புனித் ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் விசேஷமாக நன்றி தெரிவித்து அறிக்கை விட்டது நினைவிருக்கலாம்.

    மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் இளைய மகனான புனித் ராஜ்குமார், இன்றைய கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X