»   »  எம்.ஜி.ஆர், சிவாஜி கலவை ரஜினி-பாலச்சந்தர்

எம்.ஜி.ஆர், சிவாஜி கலவை ரஜினி-பாலச்சந்தர்

Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில், எம்.ஜி.ஆர், சிவாஜி இரண்டுமே ரஜினிதான் என்று இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் கூறியுள்ளார்.

நகைச்சுவைத் திலகம் நாகேஷுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது. இதில், கே.பாலச்சந்தர், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாராட்டு விழா என்னவோ நாகேஷுக்குத்தான். ஆனால் நிகழ்ச்சியில் பேசிய அததனை பேரின் கவனமும் சிவாஜியை சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

நிகழ்ச்சியின் ஹைலைட் கே.பாலச்சந்தரின் பேச்சுதான். நாகேஷுக்கு பாரத ரத்னா விருது கொடுத்து கெளரவிக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திய கே.பி, பின்னர் டாபிக் மாறினார்.

"இன்றைக்கு உலகம் முழுவதும் பேசப்படுகிற மிகப் பெரிய நடிகராக திகழ்கிறார் ரஜினிகாந்த். சிலர் அவரை தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டார் என்று குறுகிய வட்டத்துக்குள் அடைக்கப் பார்க்கிறார்கள்.

அது வேண்டாம். நமது ரஜினி, சர்வதேச சூப்பர் ஸ்டாராக விஸ்வரூபம் எடுத்துள்ளார். நான்தான் ரஜினியை அறிமுகப்படுத்தினேன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எப்போதும் இல்லாத பெருமிதம், இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

சிவாஜி படத்தை நானும் பார்த்தேன். அந்தப் படத்துக்குப் பாராட்டி எதைச் சொல்வது, எதை விடுவது என்றே எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியைப் பார்த்து புல்லரித்துப் போனேன்.

படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரும் நான்தான், சிவாஜியும் நான்தான் என்று ரஜினி வசனம் பேசுவார். என்னை பொருத்தவரை அதுதான் உண்மையும் கூட. இப்போது மட்டுமல்ல, எப்போதுமே இனி ரஜினிதான், எம்.ஜி.ஆர்., சிவாஜி. இந்த இரு மாபெரும் மேதைகளில் சரியான கலவை தான் நமது சூப்பர் ஸ்டார்" என்றார் கே.பி.

ரஜினியின் அடுத்த படம் கே.பியின் கவிதாலயா நிறுவனத்துக்குத்தான் என்று ஒரு பேச்சு இப்போதே கோடம்பாக்கத்தில் ரெக்கை கட்டிப் பறந்து வருகிறது. இந்த நிலையில், கே.பியின் இந்தப் பாராட்டு விசேஷ அர்த்தம் பெறுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil